சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், டி.இ.டி., தேர்வு முடிவு, ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த, 14ல் நடந்த, டி.இ.டி., மறுதேர்வில், 4.75 லட்சம் தேர்வர் பங்கேற்றனர். விடைத்தாள் மதிப்பீடு முடிந்து விட்டது. தேர்வு தொடர்பாக, தேர்வர்கள் கொடுத்த, 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது, ஆய்வு நடத்தி, உரிய மதிப்பெண் இழப்பீடுகளையும், டி.ஆர்.பி., வழங்கியுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு தயாரிக்கும் பணிகள், சில நாட்களாக நடந்து வந்தன. 27ம் தேதியுடன், அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. இதனால், 28 அல்லது 29ம் தேதியில், முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என, தெரியவில்லை. இதற்கிடையே, சட்டசபையின், குளிர்கால கூட்டத் தொடர், நவ., 2 வரை நடக்கிறது. இந்நேரத்தில், தேர்வு முடிவை வெளியிடுவது சரியாக இருக்காது என, டி.ஆர்.பி., கருதியது. முந்தைய தேர்வை விட, தேர்ச்சி சதவீதம் அதிகரித்தோ அல்லது குறைந்தோ, எப்படி இருந்தாலும், அது, சட்டசபையில் விமர்சனத்தை ஏற்படுத்தும் எனவும், டி.ஆர்.பி., கருதுகிறது. இதனால், சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தபின், தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.