'பினாமி அரசு, செயல்படாத அரசு, பொம்மை அரசு, ஆலோசகர் அரசு' என, பல
பெயர்களை பெற்றுள்ள, தமிழக அரசுக்கு புதிதாக, தற்போது, '45 சதவீத அரசு'
என்ற பெயர் கிடைத்துள்ளது.
பொதுப்பணித் துறையில், எந்த பணி செய்வதாக
இருந்தாலும், ஒப்பந்தத் தொகையில், 45 சதவீதத்தை, கமிஷனாக கொடுக்க வேண்டி
உள்ளது என, ஒப்பந்ததாரர்கள் கூறிய குற்றச்சாட்டு, தமிழகத்தை உலுக்கி
உள்ளது.கமிஷனாக, 45 சதவீதம் கொடுத்தால், வேலை தரம் எப்படி இருக்கும் என்ற
கேள்வி எழுந்துள்ளது.'பொதுப்பணித் துறையில் ஊழல் அதிகம் வாங்குவோர் பெயர்
பட்டியலை வெளியிடுவோம்' என, பொதுப்பணித் துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள்
சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று
முன்தினம் விரிவான செய்தி வெளியானது.
இதை படித்த, அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தன், 'முகநுாலில்' எழுதி இருப்பதாவது:
என்ன ஒரு வெட்கக்கேடு? கீழ் மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல்
என்பது வாழ்க்கை முறையாக மாறியுள்ளது. அனைத்து வகையான வேலைகளுக்கும்,
'டெண்டர்' எடுப்போர், 45 சதவீதம் கமிஷன் கொடுப்பதை, செய்திகள்
வெளிப்படுத்தி உள்ளன.இவ்வளவு கமிஷன் கொடுப்பவர்கள், எப்படி நல்ல
உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க முடியும்? பொதுப்பணித் துறை மற்றும் இதர
துறைகள் மூலம் கட்டப்படும், கட்டடம், பாலம், சாலை போன்றவை எப்படி தரமாக
இருக்கும்?தமிழக அரசின் மொத்த பட்ஜெட் தொகை, 1.42 லட்சம் கோடி ரூபாய்.
இதில், 40 ஆயிரம் கோடி ரூபாய், உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக
ஒதுக்கப்படுகிறது. இதில், 18 ஆயிரம் கோடி ரூபாய், கீழ்மட்டத்தில்
இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் பணமாக செல்கிறது. பட்ஜெட்டில், 41,215.57
கோடி ரூபாய், அரசு ஊழியர் சம்பளத்திற்காகவும், 18,667.86 கோடி ரூபாய்,
ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இது அரசின் மொத்த
வருவாய் செலவில், 40.65 சதவீதம்.இத்தொகை, மக்கள் செலுத்தும் வரிகள் மூலம்
வருகிறது. துாய்மையான நிர்வாகத்தை தருவதற்காகவும், தரமான சேவையை
வழங்கவும், வரி செலுத்துகிறோம்.
'தினமலர்' நாளிதழில் வெளியான
செய்தியில், 45 சதவீதம் கமிஷன் தொகை, அதிகார மட்டத்திற்கு செல்வதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் செலுத்தும் வரிப்பணம், ஊழலுக்காக
செலவிடப்படுவது, வெட்கப்பட வேண்டிய விஷயம்.நடப்பாண்டு பட்ஜெட்டில்,
மானியம் வழங்குவதற்காக, 59,185.47 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது. இதில்,
11,837 கோடி ரூபாய் (20 சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.நடப்பாண்டு
பட்ஜெட்டில், இலவச லேப் - டாப், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி வழங்க,
10,364.02 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 3,109 கோடி ரூபாய் (30
சதவீதம்) ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது.மூலதன செலவு, 2014 - 15ம் ஆண்டு
திருத்தப்பட்ட மதிப்பீட்டில், 23,808.96 கோடி ரூபாயாக இருந்தது. இத்தொகை,
நடப்பு பட்ஜெட்டில், 27,213.17 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி
விகிதம், 14.30 சதவீதம்.மூலதன செலவில், 10,713 கோடி ரூபாய் (45 சதவீதம்)
ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றின் மூலம் மட்டும், கடந்த ஆண்டு, 25,659
கோடி ரூபாய், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இது, 17.98 சதவீதம் ஆகும்.
இதன்
காரணமாகத்தான், அரசியலில் நுழையவும், அரசு பணிக்கு செல்லவும், பலத்த
போட்டி ஏற்பட்டுள்ளது.ஆனால், மக்கள் ஏழைகளாக உள்ளனர். அரசியல் கட்சியினர்,
பொதுமக்களுக்கு கட்சி மீது உள்ள பற்று, ஜாதி மற்றும் பணத்தின் மூலம்,
எளிதாக வெற்றி பெற்று விடலாம் என, நினைக்கின்றனர்.ஆனால், 60 சதவீதம்
இளைஞர்கள் மற்றும் பொதுவான மக்கள், நடுத்தெருவில் நிற்கின்றனர். அவர்கள்
தினசரி வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது எனத் தெரியாமல்
தவிக்கின்றனர்.பத்திரிகைகளில் வந்த செய்தி அடிப்படையில், 1.92 லட்சம்
பொறியியல் பட்டதாரிகள், 4 லட்சம் இதர பட்டதாரிகள், ஆண்டுதோறும் வேலை
இல்லாமல் தவிக்கின்றனர்.அனைவரும் இளைஞர்கள். அவர்கள் எங்கே செல்வர்? நீர்,
எரிசக்தி, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், தொழிற்சாலை மற்றும் சேவை
நிறுவனங்களில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.புதிய தொழிற்சாலைகள் இல்லை.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டடத் தொழில், சரிவை நோக்கி சென்று
கொண்டிருக்கிறது.
டாக்டர் படிப்புக்கான 'சீட்' பெற, தனியார்
மருத்துவக் கல்லுாரிகளில், ஒரு 'சீட்,' 1 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது;
எம்.டி., 'சீட்,' 3 கோடி ரூபாய்.அரசு பணியில் இருப்போர், இடமாற்றம் பெற,
நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். தமிழகத்தில், ஓய்வூதியர்கள் உட்பட,
18 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர்.இவர்களில், ஓய்வூதியம் பெறுவோர், 3.60
லட்சம் என எடுத்துக் கொண்டால், 14.40 லட்சம் அரசு ஊழியர்கள்
உள்ளனர்.இவர்களில், 10 சதவீதம் பேர், ஆண்டுதோறும் இடமாற்றம் கேட்டால்,
ஆண்டுக்கு, 4,320 கோடி ரூபாய், அரசு ஊழியர்கள் இடமாற்றத்திற்கு, லஞ்சமாக
கொடுக்க வேண்டி உள்ளது.டிரைவர் பணிக்கு, 1.75 லட்சம்; ஆசிரியர் பணிக்கு, 7
லட்சம்; கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, 20 லட்சம்; துணைவேந்தர்
பணிக்கு, 3 முதல் 7 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக பெறப்படுகிறது.இந்த பட்டியல்
நீண்டபடி செல்கிறது. இதுகுறித்து சிந்தித்தால், எதிர்காலம் பயங்கரமாக
காட்சி அளிக்கிறது.அதேநேரம், அரசு கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது.
தற்போது, 2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒவ்வொருவர் தலையிலும், 30
ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது.நடப்பாண்டு, 30,446.68 கோடி ரூபாய், கடன் வாங்க
திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச், 31ம் தேதி வரை, 2.11 லட்சம் கோடி
ரூபாய் கடன் உள்ளது. நடப்பாண்டு பட்ஜெட் பற்றாக்குறை, 4,616.02 கோடி
ரூபாய்.லஞ்சம் கொடுத்து, வேலை பெற்றவரால், அரசுக்காக, மக்களுக்காக
சேவை செய்ய முடியாது. அவரது மனம், கொடுத்த பணத்தை திரும்ப எடுப்பதிலேயே
செல்லும். இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்.பாதிக்கப்படும் மக்கள்
அனைவரும், ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு போடுகின்றனர். வெற்றி பெறும் கட்சி,
தங்கள் வாழ்க்கையை முன்னேற்றும் என நம்புகின்றனர்.பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பை
ஏற்படுத்தி உள்ளோம். உயர்கல்வி வாய்ப்பை எப்படி வழங்க உள்ளோம். எங்கும்
ஊழல் நிறைந்திருந்தால், அவர்களுக்கு எப்படி தரமான வாழ்க்கையை அளிக்க
முடியும்?இவற்றை அலசி பார்த்தால், சில கேள்விகள் நம் மனதில் எழுகின்றன.
அதற்கு விடைகளை கண்டறிய வேண்டும்.அடுத்த ஆண்டு, தேர்தல் வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. எந்த கட்சி, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை
தருவதாக அறிவிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி, வேலைவாய்ப்புக்கான
சூழலை ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறது என, பார்க்க வேண்டும்.எந்த கட்சி,
நதிகளை இணைப்பதாகவும், வேளாண்மை உட்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்துவதாகவும், தொழிற்சாலைகளை உருவாக்குவதாகவும், மின்சக்தியை
அதிகரிப்பதாகவும் கூறுகிறது என, பார்க்க வேண்டும்.இளைஞர்களே... இந்த
கேள்விகளை, உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும்
பெற்றோருடன் விவாதியுங்கள்! எந்த கட்சி, லோக்பால் சட்டத்தை அமல்படுத்தும்;
தரமான சேவையை அளிக்க தயாராக உள்ளது யார்; ஊழலற்ற நிர்வாகத்தை தரும்
மாற்று யார் என, சிந்தியுங்கள்!இவ்வாறு, பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
தி.மு.க., துணைப் பொதுச் செயலர் துரைமுருகன்:
பொதுப்பணித்
துறை மட்டுமல்ல; நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், கமிஷன்
பெறுவது, அ.தி.மு.க., ஆட்சியில் சகஜமாகி விட்டது. திட்டப் பணிகளுக்காக,
கமிஷன் பெற்றால், அந்த பணிகள் முழுமை பெறாது. கட்டடப்பணி, எர்த் பணி,
துார்வாரும் பணிகளில் கமிஷன் கொடுத்தால், தரம் வாய்ந்த பணிகளாக நிறைவு
பெறாது.துார்வாரும் கான்ட்ராக்டர்கள் மண் அள்ளும் இயந்திரத்திற்கு வாடகை
தர வேண்டும்; பணியாளர்களுக்கு கூலி தர வேண்டும். கமிஷனை கொடுத்து
விட்டால், மற்ற பணிகளை எப்படி செய்து முடிக்க முடியும்? அதனால் தான்
அனைத்து பணிகளிலும் தரம் கெட்டு காணப்படுகிறது.
ஞானதேசிகன், த.மா.கா., மூத்த தலைவர்:
கமிஷன் வாங்கும், கொடுக்கும் குற்றச்சாட்டுக்களை தடுக்கத் தான்,
த.மா.கா., பொதுக்குழுவில் லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை உடனடியாக
செயல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். கையூட்டு, கமிஷன்
போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் இருக்க, மாநிலத்திலும் லோக் ஆயுக்தா
அமைப்பை கொண்டு வர வேண்டும். அப்போது தான் குற்றச்சாட்டுகள் வராமல்
இருக்கும். லஞ்சம் பெறுவதையும், கொடுப்பதையும் கட்டுப்படுத்த முடியும்.
ஜி.ராமகிருஷ்ணன், மார்க்.கம்யூ., கட்சி மாநில செயலர்:
பொதுப்பணித்
துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சி துறை கான்ட்ராக்டர்களிடம், கமிஷன்
பெறுவது நீக்கமற இருக்கிறது. ஊழல் நடக்காமல் இருக்க, லஞ்சம்
கொடுத்தாலும் குற்றம், வாங்கினாலும் குற்றம் என்ற அச்சத்தை உணர்த்தும்,
லோக் ஆயுக்தா சட்டத்தை, சட்டசபையில் நிறைவேற்றி, மாநில அரசு அமல்படுத்த
வேண்டும்.
விஜயதாரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,:
தமிழகத்தில்
உள்ள அனைத்து துறைகளிலும், ஊழல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. மக்கள் வரிப்
பணம், மக்கள் நலத்திட்டத்திற்கு சென்றடைவதில்லை.மக்கள் வரிப்பணம்,
தனிநபர்களை சென்றடைவதால், அவர்கள் பணக்காரர்களாக உருவாகி வருகின்றனர்.
நல்ல அரசு நடந்தால், அதிகாரிகளுக்கு எந்த நிர்ப்பந்தமும் இருக்காது; ஊழல்
செய்ய 'செக்' வைக்கப்படும்.ஆனால், அமைச்சர்களின் நிர்ப்பந்தத்தினால், ஊழல்
நடக்கிறது. அதிகாரிகளும் அதற்கு துணை போகின்றனர். நேர்மையான அதிகாரிகளும்
உள்ளனர்.அவர்களை, செயல்பட முடியாத வகையில் அழுத்தம் தரப்படுகிறது. ஓட்டு
அளித்த மக்களுக்கு, நல்ல ரோடு வசதியை செய்து கொடுக்க, ஆட்சியாளர்கள்
முன்வருவதில்லை. தமிழகத்தில் நடப்பது, மக்கள் ஆட்சியா அல்லது ஊழல் ஆட்சியா
என்ற கேள்வி எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்வாங்கிய ஒப்பந்ததாரர்கள்:
பொதுப்பணித்
துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள், அதிக லஞ்சம் வாங்கிய,
10 அதிகாரிகள் குறித்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, ஊழல்
மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவில், புகார் செய்ய முடிவு செய்தனர்.இதற்காக,
சங்க நிர்வாகிகள் கையெழுத்திட்ட, புகார் கடிதம் தயாரிக்கப்பட்டது. சங்கத்
தலைவர் குணமணி, செயலர் பிரகாஷ், பொருளாளர் குமார், தொழில்நுட்ப ஆலோசகர்
கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.அதிகாரிகள் அவர்களை,
மொபைல்போனில் அழைத்து, மாலை, 6:00 மணிக்குள், பிரச்னையை தீர்ப்பதாக உறுதி
அளித்தனர். அதை ஏற்று, ஊழல் ஒழிப்பு பிரிவில் புகார் கொடுக்கும்
திட்டத்தை, அவர்கள் கைவிட்டனர். இதனால், இப்பிரச்னையில் சிக்கிய, அரசியல்
பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -