PAGEVIEWERS

735782


சத்துணவு, அங்கன்வாடி நியமனம் ரத்து :பணம் வாங்கி ஏப்பம் விட்டவர்கள் எங்கே?

தமிழகம் முழுவதும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால், வீடு, நகை, நிலம் போன்றவற்றை அடமானம் வைத்து, மூன்று லட்சம் வரை கொடுத்து வேலை வாங்கியவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். 

அறிவிப்பு:


மேலும், பணம் வாங்கி ஏப்பம் விட்ட ஆளுங்கட்சியினர், பிரச்னையிலிருந்து தப்பிக்க, ஓட்டம் பிடிக்கின்றனர்."சத்துணவு, அங்கன்வாடிகளில் காலியாக உள்ள, 28,600 பணியிடங்கள் நிரப்பப்படும்' என, கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான அரசாணை, கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. அதையடுத்து, காலியாக உள்ள பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, இன சுழற்சி அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. சத்துணவில், 16 ஆயிரத்து 500, அங்கன்வாடியில், 12 ஆயிரத்து 100 காலியிடம் இருப்பதாக கணக்கிடப்பட்டது. பொது, தாழ்த்தப்பட்டோர், விதவையர், மாற்றுத்திறனாளி, என பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.பணி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், அ.தி.மு.க.,வினர் வசூல் வேட்டையை துவக்கினர். 

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரையிலும், சமையலர், உதவியாளர் பணிக்கு, ஒரு லட்சம், 50 ஆயிரம் ரூபாய் எனவும், அங்கன்வாடியில் அமைப்பாளருக்கு, ஒரு லட்சம், சமையலருக்கு, 50 ஆயிரம் எனவும் வசூலித்தனர்.உள்ளூர் அமைச்சர் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள், மாவட்ட அதிகாரிகள் மூலம், தங்களுடைய ஆதரவாளர்களுக்கு பணி வழங்குமாறு வற்புறுத்தினர். ஒரு மாவட்டத்தில் மட்டும், சத்துணவு, அங்கன்வாடி நியமனத்திற்காக, ஐந்து கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், 175 கோடி ரூபாய், பணி நியமனத்துக்காக, பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம், உள்ளூர் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை கைமாற்றப்பட்டுள்ளது.

பணம் கொடுக்காமல் வேலைக்கு சேர்ந்த பெண்களை, மிரட்டும் நடவடிக்கைகளில் கட்சியினர் ஈடுபட்டனர். சில மாவட்டங்களில், நேர்மையாக பணியிடம் ஒதுக்கப்பட்டது. பல மாவட்டங்களில், ஆளும் கட்சியினர் தலையீடு இருந்துஉள்ளது.பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, மதுரை உயர்நீதிமன்றத்தில், 30க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், "மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்ட, 28 ஆயிரத்து 600 பணி நியமனங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், உரிய விதிமுறைகளுடன் தகுதியானோருக்கு, வேலைவாய்ப்பை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இரண்டு மாதத்துக்குள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, உத்தரவிட்டனர். லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள், உயர்நீதிமன்ற அறிவிப்பால் பீதியடைந்துள்ளனர். பணம் வாங்கிய கட்சியினரிடத்தில், இது குறித்து கேட்டு வருகின்றனர். 

ஓட்டம்

அதனால், நியமனத்துக்காக லட்சக்கணக்கில் வசூல் செய்த, ஆளுங்கட்சியினர் ஓட்டம் பிடிக்கத் துவங்கியுள்ளனர். பணம் வாங்கி ஏப்பம் விட்ட கட்சி நிர்வாகிகள் பலர், மொபைல்போனை எடுப்பதில்லை.ஒரு மாத சம்பளம் கூட, முழுமையாக வாங்காத நிலையில், திடீரென பணி நியமனம் ரத்து அறிவிப்பு, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

புதிதாக சத்துணவு, அங்கன்வாடி பணிக்கு சேர்ந்த பெண்கள் கூறியதாவது:அங்கன்வாடி பணிக்காக, கட்சிக்காரர்களிடம், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உள்ளோம். பணியில் சேர்ந்து, ஒரு வாரம் கூட ஆகவில்லை. உயர்நீதிமன்றம், பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

நிம்மதி:

எங்களுக்கு, வேலை இல்லாவிட்டாலும், பணமாவது திரும்ப கிடைக்க வேண்டும். முதல்வர் தான் எங்களுடைய வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சத்துணவுப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மூன்று மாதமாக, இந்த பணியிடங்களை நிரப்ப படாதபாடு பட்டோம். அரசியல் கட்சியினர் தொந்தரவால், பணியிடம் நிரப்புவதில் இழுபறி இருந்தது. பல கட்ட பிரச்னைக்கு பின், இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, அரசிடம் இருந்து எங்களுக்கு இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல்வர் ஜெயலலிதா என்ன முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பில், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.



No comments:

Post a Comment