PAGEVIEWERS

சென்னையில் 16ம் தேதி 1,494 பேருக்கு கலந்தாய்வு தமிழாசிரியர்களுக்கு வந்தது சோதனை

கல்வி உரிமைச் சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் 1,494 தமிழ் ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதுபற்றி மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.


தமிழக அரசும் 2010 பிப்ரவரி 24ம் தேதி இச்சட்டம் பற்றி அரசித ழில் வெளியிட்டது. இதன் படி 2010 ஏப்ரல் 1ம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வந்தது.  இதன்படி, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்தாலும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு நலவாரியம் இந்த தேர்வை நடத்தி வருகிறது.

இதேபோல் இச்சட்டப்படி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் சதவீதம் வரையறை செய்யப்பட்டது. இதன்படி, பாடங்கள் கீழ்க்கண்டபடி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அறிவியல், கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ். இதில் அறிவியல் பாடத்திற்கு 30 சதவீத ஆசிரியர்களும், கணிதம், சமூக அறிவியலுக்கு 20 சதவீதமும், ஆங்கிலம், தமிழுக்கு 15 சதவீதமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விகிதாசாரம் நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும் 12 ஆசிரியர்கள் கூடுதலாக இருப்ப தாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 1,494 தமிழாசிரியர்கள் பணியிடங்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இவர்களுக்கு வரும் 16ம் தேதி சென்னையில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழாசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. ஆனால் தமிழ் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதால் அவர்கள் அந்தந்த பள்ளிகளிலிருந்து வேறு பள்ளிகளில் நியமிக்க  வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தமிழ் ஆசிரியர்களுக்கான விகிதத்தை முன்பு போல் செயல்படுத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment