கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்
"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.
ஆறு
வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும்
வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி
மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு
இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி
தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து
மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி
ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு
கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி
ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தேர்வில் எடுக்கின்ற மதிப்பெண்
அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணி இடங்களையும், 18
ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும் நிரப்பும் வகையில் ஆசிரியர்
தேர்வு வாரியம் முதலாவது தகுதித்தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டது.
தகுதித்தேர்வு எழுதுவதற்காக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்தார்கள். இதில் ஆசிரியைகளின் எண்ணிக்கைதான் மிகவும் அதிகம்.
தமிழகத்தில் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 6 லட்சத்து 56 ஆயிரம் பேரின் விண்ணப்பங்களும், புதுச்சேரியில் 8,806 பேரின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், தகுதித்தேர்வு நேற்று நடந்தது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும்
1,027 மையங்களில் ஏறத்தாழ 61/2 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.
சென்னையில் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி, கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ.பெய்ன் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி
என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி உள்பட 45 மையங்களில் தேர்வு நடந்தது.
திருவல்லிக்கேணி என்.கே.டி. மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, முதன்மைச் செயலாளர் டி.சபீதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் சிவபதி கூறுகையில், "இந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், பார்வைஇல்லாதவர்கள், காதுகேளாதவர்கள்
உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு ஆசிரியர்களும்
கலந்துகொண்டனர். தேர்வு நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளது. அதுபோல, நேர்மையான முறையில் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.
``காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், வாசித்துப் புரிந்துகொள்வதற்கு நேரம் போதாது'' என்றும்
தேர்வு எழுதிய ஆசிரியர்கள் வருத்தத்தோடு கூறினார்கள். கணக்கு
கேள்விகளுக்கு மிக அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் மற்ற வினாக்களுக்கு பதில்
அளிக்க முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
``தேர்வுக்கு
ஒதுக்கப்பட்ட ஒன்றரை மணி நேரம் போதவே போதாது. குறைந்தபட்சம் 2 மணி
நேரமாவது அளித்திருக்க வேண்டும். அப்போதுதான் கேள்விகளை வாசித்து
புரிந்துகொண்டு பதில் அளிக்க முடியும்'' என்று ஏராளமான ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் நடந்த பட்டதாரி ஆசிரியருக்கான தகுதித்தேர்வில் இதே குற்றச்சாட்டுகளைத்தான் அனைத்து ஆசிரியர்களும் முன்வைத்தனர். ``6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை என்று பாடத்திட்டத்தை நிர்ணயித்துவிட்டு அதை அப்படியே விட்டுவிட்டு பிளஸ்-1, பிளஸ்-2
பாடங்களில் இருந்து சரமாரியாக கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள்.
கேள்வித்தாளை முழுவதுமாக வாசித்து விடை அளிக்க நேரம் இல்லை. நேரம்
ஆகிவிட்டதால் அவசர அவசரமாக பெயருக்கு விடை அளித்தோம்'' என்று பல ஆசிரியைகள் குமுறினார்கள்.
ஒருசில ஆசிரியர்கள் சற்று ஆவேசத்துடன், ``தகுதித்தேர்வு
எல்லாம் வீண். ஆசிரியர்களின் புத்திக்கூர்மையை ஆராய்கிறோம் என்ற பெயரில்
கேள்விகளை கண்டபடி கேட்டுள்ளனர். பயிற்சி மையங்களுக்குச் சென்று படித்தோம்.
எத்தனையோ கைடுகளை வாங்கிப் படித்தோம். ஆனால், அவற்றால் ஒரு பயனும் இல்லை. தேர்வுக்கட்டணம் ரூ.500 வீணாக போய்விட்டதே'' என்று கண்கலங்கினார்கள்.
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தெரிவித்த யோசனைகள் வருமாறு:
* தேர்வு நேரத்தை குறைந்தபட்சம் 2 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்
* அரசு பொதுத்தேர்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தகுதித்தேர்விலும் கேள்விகளைப் படித்துப் பார்க்க தனியே 15 நிமிடம் ஒதுக்க வேண்டும்.
* அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும்
*
இந்த தகுதித்தேர்வில் வினாக்கள் மிகவும் கடினமாக கேட்கப்பட்டு உள்ளதால்
தேர்ச்சி சதவீத மதிப்பெண்ணை 60-லிருந்து 45-ஆக குறைக்க வேண்டும்.
*
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் இடைநிலை ஆசிரியர்களை எப்படி பதிவுமூப்பு
அடிப்படையில் நியமனம் செய்ய உள்ளார்களோ அதே நடைமுறையை பட்டதாரி ஆசிரியர்
நியமனத்திலும் கடைபிடிக்க வேண்டும்.
தேர்வு எழுதிய அனைவருக்கும் விடைத்தாள் நகல்
தகுதித்தேர்வு
எழுதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது.
இதன்மூலம் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் என்னென்ன கேள்விகளுக்கு எந்தெந்த
பதில் அளித்தோம்? என்பதை
தெளிவாக அறிந்துகொள்ள முடியும். வினாக்களுக்கான விடைகள் (ஆன்சர் கீ)
வெளியிடும்போது விடைத்தால் நகலை ஒப்பிட்டுப் பார்த்து தங்கள் மதிப்பெண்ணை
துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.
தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள், நிபுணர்
குழுவினருடன் கலந்து ஆலோசித்த பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
இணையதளத்தில் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும். அதன்பிறகு விடைத்தாள்
மதிப்பீடு கம்ப்ïட்டர் மூலம் மேற்கொள்ளப்படும். ஓ.எம்.ஆர். விடைத்தாள் என்பதால் கம்ப்ïட்டர்
கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும். தேர்வு
முடிவினை ஒரே மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம்
திட்டமிட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு யு.ஜி.சி. நெட் தேர்வில்
தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுவதைப் போன்று தேர்ச்சி சான்றிதழ்
வழங்கப்படும். அதில் விண்ணப்பதாரர் பெற்றுள்ள மதிப்பெண் குறிப்பிடப்பட்டு
இருக்கும்.
ஆசிரியர்
தகுதித்தேர்வில் மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்பட்டு ஒவ்வொரு கேள்விக்கும்
ஒரு மார்க் வீதம் மொத்த மதிப்பெண் 150. தேர்வில் 60 சதவீத மதிப்பெண்
அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
தேர்வில் மிகவும் கடினம் என்று தேர்வு எழுதிய கிட்டத்தட்ட 98 சதவீத
ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தகுதித்தேர்வில் வினாக்கள்
கடினமாகத்தான் கேட்கப்பட்டு இருக்கின்றன என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தேர்ச்சி
மதிப்பெண் குறைக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. தேவைப்பட்டால்
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை குறைத்துக்கொள்ளலாம் என்று
கட்டாய கல்விச் சட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தேசிய அளவில் சி.பி.எஸ்.இ. நடத்திய இதுபோன்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர், எஞ்சிய
94 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோன்ற
சூழல் தமிழகத்தில் வருமானால் பல்வேறு தரப்பில் இருந்து கல்வித்துறை விமர்சன
கணைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய விமர்சனங்கள்
எழுந்துவிடக்கூடாது என்ற இக்கட்டான நிலையிலும் ஆசிரியர் தேர்வு வாரியம்
இருக்கிறது.
No comments:
Post a Comment