PAGEVIEWERS



தமிழ்நாட்டில் 320 அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் முதலாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆங்கிலம்தான் இணைப்பு மொழியாக உள்ளது. எந்த மாநிலத்திலும் அவர்களின் தாய்மொழியில் படித்தாலும் ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதத்தெரிந்தால் தான் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். மேலும் ஆராய்ச்சி உள்ளிட்ட மேல்படிப்புகளிலும் ஆங்கிலம் தெரிவது நன்று.
இப்படிப்பட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை பெற்றோர்கள் கூட அருகில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க சேர்க்கும் நிலை உள்ளது. கூலித்தொழில் செய்பவர்களும் கஷ்டப்பட்டு அருகில் உள்ள கான்வென்ட்டில் குழந்தைகளை சேர்க்கிறார்கள்.

இந்த நிலையில் ஏழை மாணவர்களுக்கும் எல்லா வசதியும் விலை இன்றி கிடைக்கவேண்டும் என்று கருதி இலவசமாக பை, புத்தகங்கள், நோட்டுகள், காலணி, பஸ் பாஸ் உள்பட ஏராளமானவை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஏழை மாணவர்களும் அரசுப்பள்ளியில் ஆங்கிலம் படிக்க அதிக வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று எண்ணி அதை கருத்தில் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் புதிதாக 320 பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி கிடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2012-2013-ம் ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வீதம் மொத்தம் 320 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் தலா 2 செக்சன் ஆங்கில வழி கல்வி இருக்கும்.

இதுவரை ஊராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லை. ஆனால் முதல் முதலாக இந்த பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்படுகிறது.

அதாவது முதல் கட்டமாக 1 மற்றும் 6-வது வகுப்பில் இந்த ஆங்கிலப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படுகின்றன. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டதும் படிப்படியாக பிளஸ்-2 வரை ஆங்கில பிரிவுகள் நடத்தப்படும்.

இதுவரை தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1 லட்சத்து 23 ஆயிரம் மாணவ-மாணவிகள் பேர் ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள்.

இந்த வருடம் மட்டும் 24 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக ஆங்கிலவழியில் படிக்க உள்ளனர். இந்த தொடக்கம் வரும் ஆண்டுகளில் ஏராளமான மாணவர்கள் ஆங்கிலவழி கல்வியை அரசு பள்ளிகளிலேயே படிக்கும் நிலை ஏற்படும். அதனால் தனியார் பள்ளிகளை நாடி ஏழை எளிய மக்கள் செல்லவேண்டியது இருக்காது.

No comments:

Post a Comment