PAGEVIEWERS

பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் குரூப்-2 பணிகளுக்கான நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இதனால், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை.

நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வை நடத்துகிறது. தேர்வு எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி ஆகும்.

கடந்த ஆண்டுக்குரிய 6,949 காலி பணி இடங்களை நிரப்புவதற்காக 2011-ம் ஆண்டு ஜுëலை மாதம் 30-ந் தேதி குரூப்-2 எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 3 லட்சத்து 65 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த 8-ந் தேதி வெளியானது. அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு 6,949 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். நேர்முகத்தேர்வு ஜுன் 20-ந்தேதி முதல் ஜுலை 23-ந் தேதி வரை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருந்தது.

அதன்படி, குரூப்-2 நேர்முகத்தேர்வு சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் 20-ந் தேதி தொடங்கியது. தினமும் சுமார் 300 பேருக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அல்லது உறுப்பினர், துறை உயர் அதிகாரி, கல்வியாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் தேர்வு நடத்தி வருகிறார்கள்.

நேர்முகத்தேர்வின்போது, பட்டப்படிப்பில் படித்த பாடம், குடும்பநிலை, பணவீக்கம், ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி போன்றவை தொடர்பாக கேள்விகள் கேட்கப்படுவதாக தேர்வுக்குச் சென்று வந்தவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பிளஸ்-2 முடிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்களும், இளநிலை பட்டம் பெறாமல் நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்களும் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப் படிப்பு என்ற வரிசையில் படித்திருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் உடனடியாக நிராகரிக்கப்படுகிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப் படிப்பு என்ற நிலையில் இல்லாமல் நேரடியாக பெற்ற பட்டம் அரசு பணிக்குச் செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நேர்முகத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தினசரி இரண்டு அல்லது 3 பேர் இவ்வாறு வெளியேற்றப்படுகிறார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், நேரடி பட்டம் பெற்றதை தொடர்ந்து நிராகரிக்கப்படும் பட்டதாரிகள் சோகத்துடனும் ஏமாற்றத்துடனும் வெளியே வருவது, பரிதாபமாக இருக்கிறது.

No comments:

Post a Comment