PAGEVIEWERS


தமிழகத்துக்கு மார்ச் வரை கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

""தென் மண்டல மின் பாதை மூலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவு இறுதி செய்யப்பட்டுவிட்டதால், அதுவரை தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க இயலாது'' என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
""தமிழகத்தில் மின் திட்டங்கள் தேக்கமடைந்து இருப்பதே அந்த மாநிலத்தில் மின் பற்றாக்குறை நீடிப்பதற்கு காரணம்.
தென் மண்டல மின் பாதையை பலப்படுத்தும் பணி அடுத்த ஆண்டு நவம்பரில்தான் நிறைவடையும்.

மின் பற்றாக்குறையை மதிப்பிட்டு, போதுமான மின்சாரம் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியது மாநில மின் நிறுவனங்களின் பொறுப்பு'' என்று உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தென் மண்டல மின் பாதை மூலம் நவம்பர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை 2,900 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே விநியோகிக்க முடியும். இந்தப் பாதை, 2016-ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் 3,450 மெகாவாட் மின்சாரத்தை விநியோகிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்.
இந்த நிலையில், நிர்ணயித்த மின்சார அளவை விட கூடுதலாக மின்சாரத்தை விநியோகித்தால் நெல்லூர்-அலமாதி (400 கிலோவாட் மின் திறன்) மின்சார இணைப்பில் மின் பளு அதிகமாகி விநியோகம் பாதிக்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட மின் விநியோகம் உண்டு: தென் மண்டல மின் பாதை மூலம் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து மத்திய மின்சார ஆணையம் பின்வாங்காது.
ஆனால், நிர்ணயித்த அளவை விட கூடுதல் மின்சாரத்தை தமிழகத்துக்கு தற்போது வழங்க இயலாது. வேண்டுமென்றால் குறுகிய கால மின் பகிர்மான திட்டத்தின்படி தேவைப்படும் மின்சாரத்தை தென் மண்டல மின் பகிர்மான நிலையத்திடம் தமிழக அரசு விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
மத்திய திட்டங்கள் மூலம் 3,396 மெகா வாட்: தற்போது மத்திய மின் தொகுப்பு திட்டங்களின் மூலம் தமிழகத்துக்கு 3,396 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படுகிறது.
வடக்கு, மேற்கு மின் மண்டலங்களில் இருந்து 2013 ஜூன் முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு 500 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு செல்ல தற்போதே தமிழக அரசு முன்பதிவு செய்துள்ளது.
தென் மண்டல மின் பாதையை பலப்படுத்தும் பணி 2014 நவம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழக திட்டங்களில் தேக்க நிலை: கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகத்தில் அதிகபட்சமாக 2,200 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாக இருந்தது.
தமிழகத்தில் 7,300 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஏழு மின் திட்டங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்துவதில் உள்ள தேக்கநிலையும் காற்றாலை மின் திட்டங்கள் மூலம் போதுமான மின்சாரம் கிடைக்காததும்தான் மின் பற்றாக்குறைக்கு காரணம்.
வட சென்னை 2-ம் அனல் மின் நிலையம் (1,200 மெகாவாட்), மேட்டூர் அனல் மின் திட்டத்தின் 3-ம் கட்ட விரிவாக்க நிலையம் (600 மெகாவாட்), வல்லூர் அனல் மின் நிலையம் (1,500 மெகாவாட்), தூத்துக்குடி அனல் மின் நிலையம் (1,000 மெகாவாட்), கூடங்குளம் அணுமின் நிலையம் (2,000 மெகாவாட்), கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உருவாக்கப்படும் அதிவேக ஈனுலைத் திட்டம் (500 மெகாவாட்), நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 2-வது விரிவாக்க நிலையம் (500 மெகாவாட்) ஆகிய மின் திட்டங்கள் தேக்கமடைந்து உள்ளன.
பற்றாக்குறையை மதிப்பிட்டு, போதுமான மின்சாரம் கையிருப்பில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியது அந்தந்த மாநில அரசு மின் நிறுவனங்களின் பொறுப்பு'' என்று அந்த அறிக்கையில் மத்திய அரசு கூறியுள்ளது.

பதில் அளிக்க தமிழகத்துக்கு அவகாசம்

தில்லி அரசு "வேண்டாம்' என திருப்பி ஒப்படைத்த 1,721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், ஜஸ்தி செலமேஸ்வர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய மின்சார ஆணையத்தின் ஆய்வறிக்கையை தாக்கல் செய்த அட்டர்னி ஜெனரல் கூலம் இ. வாஹனவதி, ""இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சில தொழில்நுட்ப ஆய்வு அறிக்கைகளையும் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது'' என்று கூறினார்.
அதையடுத்து ""மத்திய அரசின் அறிக்கை குறித்து பதில் அளிக்க இரண்டு நாள்கள் அவகாசம் தேவை'' என்று தமிழக அரசின் வழக்குரைஞர் முகுல் ரோத்தகி கூறினார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment