PAGEVIEWERS

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் தாஸ், தாக்கல் செய்த மனு: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 1981ம் ஆண்டு, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதில் பணியாற்றிய ஆசிரியர்களும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். தொடக்கக் கல்விக்கென தனி இயக்குனரகம் உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் வந்தாலும், அவர்களின் பி.எப்., கணக்கை, உதவி தொடக்க கல்வி அதிகாரிகள், நிர்வகித்து வந்தனர். பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம், தணிக்கை செய்வதில்லை. இதனால், தங்களின் பி.எப்., கணக்கில் எவ்வளவு பணம் செலுத்தப்படுகிறது என்கிற தெளிவான விவரங்கள், ஆசிரியர்களிடம் இல்லை. இந்தக் கணக்கை, அவர்களால் சரிபார்க்க முடியவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை கண்காணிக்க, முறையான நிர்வாக நடைமுறை இல்லை. இந்தக் குழப்பங்களால், பி.எப்., நிதியில் சிலர் முறைகேடு செய்கின்றனர். தற்போது, பி.எப்., கணக்கை அரசு தகவல் தொகுப்பு விவர மையம் நிர்வகிக்கிறது. இங்கு பணியாற்றும் சிலர், தற்காலிக ஊழியர்களாக உள்ளனர். பி.எப்., நிதி, தணிக்கைக்கு உட்பட்டது. 85 ஆயிரம் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கில் வரும் பணத்தை நிர்வகிக்க, தணிக்கை செய்ய, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் போல், எந்த தனிப்பட்ட அலுவலகமும் இல்லை. இதனால், சில நகரங்களில் பி.எப்., நிதியில் முறைகேடுகள் நடந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 210 கோடி ரூபாய், பி.எப்., மூலம் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களின் பி.எப்., கணக்கை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலக நிர்வாகத்தின் கீழ், கொண்டு வரக் கோரிய மனுவை பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment