PAGEVIEWERS

தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 355 பேர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 170 பேர்தான் உள்ளனர். இதேபோல், 259 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் 108 பேர்தான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்ற அதிர்ச்சிïட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் நிர்வாக சக்கரத்தை சுழற்றுவதில் பெரும் பங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உள்ளது. ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதில் உயர் மதிப்பெண் பெறுபவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், அடுத்த மதிப்பெண் பெறுபவர்கள் ஐ.பி.எஸ்.
அதிகாரிகளாகவும் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மொத்தமாக தேர்வு செய்யப்படுபவர்களில் 3-ல் ஒரு பகுதி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெறுகின்றனர். 3-ல் 2 பகுதியினர் அந்தந்த மண்டலம், அதாவது அண்டை மாநிலங்களில் விருப்ப தேர்வு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர்.

சமீபத்தில் அகில இந்திய பணிகளுக்கான தேர்வு பெற்றோர் பட்டியலை மத்திய தேர்வாணையம் வெளியிட்டது. இதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகள் அடங்கும். 715 ஆண்களும், 195 பெண்களும் சேர்த்து மொத்தம் 910 பேர் தேர்வு பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 68 பேர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றிருப்பது பெரிய மனக்குறையாக உள்ளது.

இந்த ஆண்டு 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டு பணிக்கு ஒதுக்கப்பட்டு, பயிற்சிக்காக சேர உள்ளனர். அதில், கோவை மாவட்ட உதவி கலெக்டர் பயிற்சிக்கு சேர உள்ள எஸ்.திவ்யதர்ஷினி, மதுரை மாவட்ட உதவி கலெக்டர் பயிற்சிக்கு சேர உள்ள எம்.அரவிந்த், ஈரோடு மாவட்ட உதவி கலெக்டர் பயிற்சிக்கு சேர உள்ள கே.விஜய கார்த்திகேயன் ஆகியோர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
நெல்லை மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள சந்திரசேகர் சக்முரி, கடலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள வி.ஜெயசந்திர பானு ரெட்டி, திருச்சி மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள மந்திரி கோவிந்தராவ், வேலூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள பி.மதுசூதன் ரெட்டி ஆகியோர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பயிற்சிக்கு சேர உள்ள எஸ்.அனீஷ்சேகர் கேரளாவை சேர்ந்தவர். ஆக, தமிழ்நாட்டில் இருந்து 3 பேர்தான் தமிழக ஐ.ஏ.எஸ். பணிக்கு வருகிறார்கள். ஆனால், ஆந்திராவில் இருந்து 4 பேர் வருகின்றனர்.

இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் 355 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 170 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அதிலும் நேரடியாக ஐ.ஏ.எஸ். தேர்வு பெற்றவர்கள் 71 பேர்தான். மீதமுள்ள 99 பேர் தமிழக அரசு பணியில் இருந்து அகில இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐ.ஏ.எஸ்.) உயர்வு பெற்றவர்கள்.

இதேபோல், தமிழகத்தில் மொத்தம் உள்ள 259 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் நேரடியாக பணிக்கு வந்தவர்கள் 179 பேர். இதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 108 பேர். அதிலும், மாநில போலீஸ் பணியில் சேர்ந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள் 80 பேர். அப்படிஎன்றால் தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக ஐ.பி.எஸ். அதிகாரியாக வந்தவர்கள் 28 பேர்தான்.

ஆக, இனி அதிக அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். மத்திய அரசும் 3-ல் ஒரு பங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சொந்த மாநிலத்திற்கும், 2 பங்கு அதிகாரிகள் அண்டை மாநிலங்களுக்கும் நியமிப்பதை மாற்றி, 50 சதவீதம் பேர்களை சொந்த மாநிலங்களில் நியமிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீதம் பேர்களை அண்டை மாநிலங்களில் நியமிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த விகிதாச்சார அடிப்படையில்தான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனங்கள் இருந்தன. பிறகுதான் நிலைமை மாறியது. ஆக, மாநில அரசுகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி குரல் கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment