ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில்.
புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர். மக்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை, மக்களைக் கொண்டே அடையச் செய்திருக்கிறார் இவர்.
நரேந்திர மோடி கடைபிடித்த சூத்திரங்கள், நமது நம்பிக்கைகளை மீட்டெடுக்க உதவுவதோடு, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உலகில் ஜொலிப்பது சாத்தியம்தான் என நம்மை நம்ப வைக்கிறது.
நேரில் சென்று பார்த்தேன்:
இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது குஜராத் பற்றிக் கேள்விப்பட்டேன். சில விஷயங்களை நம்ப முடியவில்லை. எனவே நானே சென்று பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.
சில முறை பயணம் செய்தேன். பலரிடம் பேசினேன். தகவல்களைத் திரட்டினேன். நான் கண்டது முதலில் எனக்கு நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். நம்மாலும் நம் மாநிலத்தை மிகச் சிறந்த மாநிலமாக, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது வந்துள்ளது. சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில்:
நரேந்திர மோடி சொல்வதை போல், நமது கனவுகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யட்டும். வாருங்கள், குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு பார்வை பார்ப்போம்.
இன்று, பல மாநிலங்களில் மின்சாரம் தடைப்பட்டால் மீண்டும் அது எப்போது வரும் என்று மாநில முதல்வரேகூடச் சொல்ல முடியாத நிலைதான் உள்ளது. தடைப்பட்ட மின்சாரம் இரண்டு மணி நேரத்தில் வரலாம், அல்லது இரண்டொரு நாளில்கூட வரலாம். சென்னை போன்ற முன்னேறிய மாநகரத்தில்கூட இத்தகைய சூழல்தான் உள்ளது. அறிவிக்கப்பட்ட மின்தடை, அறிவிக்கப்படாத மின்தடை, ரேஷன் மின்சாரம் இப்படியெல்லாம் பல பதங்களைப் பயன்படுத்தியும், மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படாத நிலைதான் உள்ளது. ஆனால் குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மும்முனை மின் இணைப்பு.
மின்சாரப் பிரச்னை:
2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன.
2003-ம் ஆண்டு மின்சாரத் துறையை முதல்வர் நரேந்திர மோடி தன்வசம் வைத்துக்கொண்டார். மிகப்பெரிய சீர்திருத்தத்தை மேற்கொள்ளப் புறப்படும்போது, கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்கவேண்டி வரும் என்பதற்காகவும் மின்சாரத் துறைக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை உணர்த்தவும் முதல்வரே இத்துறையைத் தன் வசம் வைத்துக்கொண்டார்.
தனியார் நிறுவனங்களிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கிக் குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கும் முறை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. குஜராத்திலும் மோடி முதல்வர் ஆவதற்குமுன் இதுதான் நடைமுறையில் இருந்தது. அரசுக்கு மின்சாரம் விற்பனை செய்யும் நிறுவனங்களை அழைத்துப் பேசி அதிக விலைக்குத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கும் வழக்கத்தை மோடி ஒழித்தார்.
இன்வெர்ட்டர் இல்லை:
நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு நாள் இரவு அகமதாபாத்தில் தங்கினேன். கடுமையான இடி, மின்னலுடன் மழை கொட்டியது. காதைப் பிளக்கும் இடி ஓசை. மரங்கள்கூடச் சாய்ந்தன. என்ன ஆச்சரியம்! அப்போதும்கூட மின்சாரம் தடைப்படவில்லை. இது மட்டுமல்ல, அங்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது யாரும் ஸ்டெபிலைசர்களை வாங்குவதில்லை. யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றுக்கு குஜராத்தில் வேலையேயே இல்லை.
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறவேண்டும் என்றால் மாத கணக்கில் நடையாக நடக்க வேண்டியுள்ளது. அதுவும் சில இடங்களில் அலுவலர்களை, அதிகாரிகளை ‘கவனிக்க’வேண்டும். அப்போதுதான் ‘காரியம்’ நடக்கும். ஆனால் குஜராத்தில் அப்படியல்ல. இன்று விண்ணப்பித்தால், நாளையே மின் இணைப்பு கிடைத்துவிடும். என்ன நம்ப முடியவில்லையா?
2012 ஜூலை 30-ம் தேதி முதல் இரண்டு நாட்கள் தலைநகர் தில்லி உள்பட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கின. 60 கோடி மக்கள் அல்லல்பட்டனர். உலகமே சிரித்தது. இந்தியா எங்கே ‘சூப்பர் பவர்’ ஆகப்போகிறது என்று ஏளனம் செய்தது. ஆனால் குஜராத் மட்டும் எந்தவிதத் தடையும் இன்றி மின்னொளியில் மிதந்தது.
விவசாயப் பிரச்னை:
நாட்டில் எங்கு பார்த்தாலும் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாக இருந்து கொண்டிருக்கும்போது, இயற்கையிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காத குஜராத்தில் முயற்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவசாயம் இன்று பீடு நடை போடுகிறது.
விவசாயத்துக்கு மோடி அரசு கொடுத்துவரும் முக்கியத்துவம் காரணமாக விவசாயத்திலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் 9,000 கோடி ரூபாயிலிருந்து, 50,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பால் ஏற்றுமதியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் குஜராத். 2006-ம் ஆண்டிலிருந்து குஜராத்தின் பால் உற்பத்தி சராசரியாக 5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்திய அளவில் பால் உற்பத்தியின் வளர்ச்சி 3.9 சதவீதமாக மட்டுமே உள்ளது.
மின்சாரப் பிரச்னையைக்கூட சில ஆண்டுகளுக்குள்ளாகச் சரி செய்துவிடலாம். விவசாயப் பிரச்னையை பத்தாண்டுகளுக்குள்ளாகத் தீர்த்து விடலாம். வேண்டிய உள்கட்டுமானங்களை உருவாக்கிவிட்டால் தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு குஜராத் வந்துவிடுவார்களா? ஒரு தயக்கம் இருக்கும். மனிதவளம் வேண்டுமே? தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் கிடைத்தால்தானே தொழிற்சாலைகளும் சேவை நிறுவனங்களும் நன்கு இயங்கமுடியும்.
மனிதவளத்தில் பெருமளவு பின்தங்கியிருந்த குஜராத்தை மோடியின் பல்வேறு செயல்திட்டங்கள் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவந்துள்ளன.
கல்வி நிலை:
கல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு வளர்ச்சியின் அளவுகோல். கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.
2001-ம் ஆண்டு குஜராத்தில் எழுத்தறிவு பெற்ற பெண்கள் 57.8 சதவீதம். ஆனால் அது 2011-ல் 70.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுமார் 13 சதவீத வளர்ச்சி.
குடிநீர், சுகாதாரம், ஆட்சிமுறையில் மாற்றம், உள் கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, மனிதவள மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, தலைமைத்துவம் என்று ஒவ்வொரு துறையிலும் நரேந்திர மோடியின் குஜராத் எப்படி பிற மாநிலங்களில் இருந்து மாறுபட்டு நிற்கிறது என்பதை இந்தியாமீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.
இந்த்த் தொடர் கட்டுரைகளின்மூலம் மோடியின் குஜராத் இவ்வொரு துறையிலும் எப்படி வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
No comments:
Post a Comment