PAGEVIEWERS

பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்

பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்
இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பார்லிமென்டில் நேற்று முன்தினம், பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். 'தொழிலாளர்கள் ஓய்வு அடையும்போது பெறும், இ.பி.எப்., மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எப்., தொகையில், 60 சதவீதத்தின் மீது ஓய்வுக்கால வரி விதிக்கப்படும்' என, பட்ஜெட்டில் கூறப்பட்டது.இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மத்திய வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் அதியா, டில்லியில், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது:
முழு வரி விலக்கு: நடப்பாண்டு, ஏப்ரல், 1க்கு பின், இ.பி.எப்., கணக்கில் சேரும் தொகையில், 60 சதவீதத்திற்கு கிடைக்கும் வட்டி மீது மட்டுமே வரி விதிக்கப்படும். இந்த தொகையை, மீண்டும், ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்தால், முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படும்; அதேநேரத்தில், பி.பி.எப்., தொகைக்கு, முழு வரி விலக்கு தொடர்கிறது. இவ்விஷயத்தில் அரசின் நோக்கம், வருவாய் அதிகரிப்பு அல்ல. தொழிலாளர்கள் அனைவரும், ஓய்வூதிய திட்டத்தில் சேர வேண்டும் என, அரசு விரும்புகிறது. ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்த நபர் மரணம் அடையும் பட்சத்தில், அவரது வாரிசுதாரருக்கு அத்தொகை மாற்றம் செய்யப்படும்போதும், வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
தொழிலாளர்களின், இ.பி.எப்., கணக்கில் சேரும் 100 சதவீத பணத்தையும் அவர்கள் எடுத்துக் கொள்ளும்போது, எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. அப்பணத்தை, ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யாவிட்டால், அவர்களின் உடல்நலன் தொடர்பான பிரச்னைகளுக்கு அரசு பொறுப்பேற்கும் நிலை உருவாகிறது.எனவே, ஓய்வு பெறும் தொழிலாளர்கள், இ.பி.எப்., தொகையில் இருந்து, 40 சதவீத பணத்தை பயன்படுத்திக் கொள்வதையும், மீதமுள்ள 60 சதவீத தொகையை,ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதையும், அரசு ஊக்குவிக்கிறது.இ.பி.எப்., தொகைக்கான, மீதமுள்ள 40 சதவீத தொகைக்கான வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. 2016, ஏப்ரல் 1ம் தேதிக்கு முன், இ.பி.எப்., கணக்கில் சேர்ந்த தொகைக்கான வட்டி மீது வரி செலுத்தத் தேவையில்லை. இ.பி.எப்., கணக்கில், தொழிலாளி மற்றும் முதலாளி தரப்பில் செலுத்தப்படும் அசல் தொகை முழுவதற்கும் வரி விலக்கு தொடர்கிறது.
3.7 கோடி பேர்: நாடு முழுவதும், 3.7 கோடி தொழிலாளர்கள், இ.பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளனர். இவர்களில், கார்ப்பரேட் துறையை சேர்ந்த, அதிக சம்பளம் பெறும் 70 லட்சம் பேர் மட்டுமே,இ.பி.எப்., தொகை வட்டி மீதான வரி விதிப்பால் பாதிப்பர். இ.பி.எப்., திட்டத்தில் இணைந்துள்ளோரில் மூன்று கோடி பேர், 15,000 ரூபாய்க்கும் குறைவான சம்பளமே பெறுகின்றனர். இவர்களுக்கு வரி விதிப்பில் எவ்வித மாற்றமும் கிடையாது; இ.பி.எப்.,பில் சேர்ந்துள்ள 100 சதவீத அசல் தொகையையும், பணி ஓய்வின்போது, வரியின்றி பெற்றுக் கொள்ளலாம். இ.பி.எப்., வரிவிதிப்பில் உள்ள வேறுபாடுகள் தொடர்பாக, விரைவில் அறிவிப்பாணை வெளியிடப்படும். இவ்வாறு ஹஸ்முக் அதியா கூறினார்.
வேலையில் சேர்ந்த நாள் முதல், ஊதியத்தில் இருந்து சிறுக சிறுக சேமிக்கும்,பி.எப்., தொகைக்கு கொடுக்கப்படும் வட்டி என்பது, பணவீக்கத்தை ஒப்பிடுகையில் மிகக் குறைவு. இத்தொகையை, ஓய்வு பெறும் நிலையில், மகள் திருமணம், வீடு கட்டுவதற்கு ஆகும் செலவில் பற்றாக்குறை வரும்போது, தொழிலாளி கேட்கிறார். அதற்கு அரசு வரி போடுவது என்ன நியாயம்?

No comments:

Post a Comment