PAGEVIEWERS

கலெக்டர்கள், எஸ்பிக்கள் மாநாடு சென்னையில் நாளை துவக்கம்



சென்னை: கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை தொடங்குகிறது. இதில், மின்வெட்டு, மணல் குவாரி பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களை செயல்படுத்துவதில் மாவட்ட கலெக்டர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அதேபோல், சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது உள்ளிட்ட பணிகளில் மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு பெரும் பங்கு உள்ளது. 

இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு நிலை பிரச்னைகள், அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கவும், நடைமுறை சிக்கல்களை களைந்து அரசின் திட்டங்களில் மாற்றம் செய்வது குறித்து ஆராய்ந்து முடிவு எடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்படும். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடத்தப்படும் இம்மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும். இந்த ஆண்டு இந்த மாநாடு, தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில்  நாளை தொடங்கி 12, 13 ஆகிய 3 நாட்கள் நடைபெறவுள்ளது. 

இதில், கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மட்டுமின்றி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் டிஜிபி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். முதல் நாளான நாளை, கலெக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெறும். 12ம் தேதி கலெக்டர்கள் மட்டும் பங்கேற்கும் கூட்டமும், 13ம் தேதி, காவல்துறை அதிகாரிகள் மட்டும் பங்கேற்கும் கூட்டமும் நடைபெற உள்ளது.   நாளை காலை 10.30 மணிக்கு மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்து, தொடக்க உரையாற்றுவார். அதையடுத்து, கலெக்டர்கள், எஸ்பிக்கள் தங்களது மாவட்ட பிரச்னைகள் குறித்தும், சட்டம் - ஒழுங்கு குறித்தும் விரிவாக கருத்து தெரிவிப்பார்கள்.

குறிப்பாக, தொடர் மின்வெட்டு பிரச்னையால் மக்கள் மற்றும் தொழில் துறையினரின் பாதிப்புகள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாடு பிரச்னை, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது, தமிழக அரசு வழங்கும் இலவச திட்டங்களை முறையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment