பணியிடத்தில் மாரடைப்பால் இறந்தால் தொழில்சார்ந்த மரணமாக கருதப்படும்: மும்பை உயர்நீதிமன்றம்
பணியிடத்தில் ஊழியர் எவரேனும் மாரடைப்பால் இறக்க நேரிட்டால், அதை தொழில்சார்ந்த மரணமாகவே கருதவேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பகுராம் மஹாதிக் என்பவரது மனைவி பாக்யஸ்ரீ தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே. ஆர். ஸ்ரீராம் தலைமையிலான அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபிட்டராக இருந்த பகுராம் மஹாதிக், கடந்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இ.எஸ்.ஐ. உறுப்பினராக இருந்த பகுராம் மஹாதிக்கின் மரணத்தையடுத்து, அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், பணியிடத்தில் மாரடைப்பால் உயிரிழந்ததை தொழில்சார்ந்த மரணமாகக் கருத முடியாது என்று கூறி இழப்பீடு தர இ.எஸ்.ஐ. அலுவலகம் மறுத்துவிட்டது.
அதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் பாக்யஸ்ரீ வழக்கு தொடர்ந்தார்.
இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "பணியிடத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாலேயே, அது பணியின் காரணமாகத்தான் ஏற்பட்டது என்று கூறமுடியாது' என்று வாதிட்டார்.
அவரது வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், ""பகுராமுக்கு, சம்பவ தினத்தன்றுதான் முதன்முதலாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, அவருக்கு மாரடைப்பு ஏறபட்டுள்ளதாக கூறப்படவில்லை.
பணிச் சுமை காரணமாகவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதை மறுக்கும் வகையில் இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் தரப்பில் ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கபடவில்லை'' என்று குறிப்பிட்டது.
எனவே, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நான்கு வாரங்களுக்குள் உரிய இழப்பீட்டை இ.எஸ்.ஐ. கார்ப்பரேஷன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment