PAGEVIEWERS

இனி ஆசிரியர் ஆகப்போகும் அனைவருக்கும்.....
********************************************************************
தமிழ்நாடு.
அன்புள்ள ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவ மாணவிகளே,
மற்றும் ஆசிரியப் பயிற்சியில் படிக்கும் மாணவ மாணவிகளே,
வணக்கம். நீங்கள் அனைவரும் வருங்காலத்தில் நல்லாசிரியராக நலம்பெற, வளம்பெற வாழ்த்துகிறோம். அதற்காக எங்கள் அனுபவத்தில் பெற்ற, படிப்பினைகளால் கற்ற வழிகாட்டலை உங்களுக்காக முன்வைக்கிறோம்.


*
பயிற்சி முடித்து இரண்டு ஆண்டுகளுக்குள் அரசு ஆசிரியப்பணி அல்லது வேறு அரசு சார்ந்த பணி அல்லது திறன் சார்ந்த சுயதொழில் என்ற இலக்கை வைத்துக் கொள்ளுங்கள்.
*
போட்டித் தேர்வுகளில் முழு கவனம் செலுத்துங்கள்.
*
ஆசிரியப்பணி மற்றும் அரசுப்பணி சார்ந்த அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எழுதுங்கள்.
*
அரசுப்பணியில் வேறு துறை கிடைத்தாலும் அதன்பிறகு சிறப்புத் தேர்வு மூலம் ஆசிரியப்பணிக்கு வந்துவிடலாம்.
*
அதுவரை அரசுப்பள்ளி அல்லது தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் (பெற்றோர் ஆசிரியர் கழக நியமனத்தில்) பணிபுரிந்து தங்களின் கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்திக் கொள்லுங்கள். இங்கு சுயநலமோ, உழைப்புச் சுரண்டலோ இல்லாத காரணத்தால் உங்களின் தன்மானம் சோதிக்கப்படாது. உங்களின் எதிர்காலம் பாதிக்கப்படாது.
*
எந்த நிறுவனத்திலும் சான்றிதழ்களைப் பணயம் வைத்துப் பணிபுரியாதீர்கள். ஏனெனில் உங்களின் ஒட்டுமொத்த வாழ்வையும் பிறர் கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்.
*
அனுமதி கேட்டு, விடுமுறை கேட்டு, சான்றிதழ்களைக் கேட்டுக் கத்திருக்கும் நிலைக்கு, மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்குச் சென்றுவிடாதீர்கள்.
*
தனியார் கல்வி நிறுவனங்களில் உழைப்பிற்கேற்ற ஊதியம், உறுதிப்படுத்தப்பட்ட சலுகைகள், வரையறுக்கப்பட்ட வேலைநேரம் என்பது இதுவரையிலும் இல்லை.
*
நம் நாட்டில் ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும், அதனதன் விருப்பப்படி ஒவ்வொரு விதமாகவே இயங்கிவருகிறது. ஒரு கல்வி நிறுவனத்தைப் போல் இன்னொரு கல்வி நிறுவனம் இல்லை. ஆகவே ஊதியம், உழைப்புச் சுரண்டல், வேலைநேரம், ஆசிரியர்கள் நடத்தப்படும் விதம் என அனைத்தும் பள்ளிக்குப் பள்ளி மாறுபடும்.
*
ஆகவே உங்களின் தன்மானத்திற்கும், எதிகால வாழ்க்கைக்கும் இழுக்கு ஏற்படுத்தாத எந்தப் பணியாக இருந்தாலும் செய்யுங்கள். உங்களின் இலக்கு போட்டித்தேர்வும் அதன் வெற்றியும் என்பதை எந்த நிலையிலும் மறவாதீர்கள்.
*
முழுநேரமும் போட்டித் தேர்வுகளுக்குக் காலம் ஒதுக்கும் குடும்பச்சூழல் இருப்பின் மிகுந்த நலம். அக்காலத்தில் பயிற்சி வகுப்புகளும் சென்று முழுமையாகத் தயாராகுங்கள்.
*
தனியார் கல்வி நிறுவனங்களில் ஒருசில நிறுவனங்களே அரசு ஆசிரியர்களுக்கு நிகராக ஊதியம் வழங்குகின்றன. அப்படிப்பட்ட போற்றுதலுக்கு உரிய நிறுவனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்ற நிறுவனங்களில் உழைப்புச் சுரண்டலே அடிப்படை மூலதனம்.
*
இப்போதைக்குக் கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் நீங்கள் மயங்கிவிட்டால் எப்போதும் அதற்குள்ளாகவே வாழ்க்கை நடத்தும் அவலம் அரங்கேறிவிடும். உங்கள் இலக்கிற்குத் தடை ஏற்படுத்தும் எதையும் தாண்டிச் செல்லுங்கள்.
*
உங்கள் இலக்கை அடையும் வரை பிறரின் சுயநலத்திற்கு இரையாகாமலும், உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகாமலும் வாழும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுங்கள்.
*
காலம் கடந்துவரும் தெளிவு ’கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல’ என்ற பழமொழியை நினைவுபடுத்தி விடும். ஆகவே காலத்தே செய்யுங்கள். இந்த வயதில் இப்பொழுதே செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
*
உங்களின் அறிவு, தெளிவு, பயிற்சி முறை, வெற்றிக்கான வழி போன்றவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து அவர்களுக்கும் வழிகாட்டுங்கள்.
*
இனி வரும் ஆசிரிய சமுதாயம் தன்மானமும் அறிவாற்றலும் மிக்க, சுயநலத்திற்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் ஆளாகாத, வலிமையான சமுதாயத்தை உருவாக்கும் சுதந்திரம் பெற்ற, எதையும் எதிர்கொள்ளும் துணிவு மிக்க வளம்மிகு வாழ்வை நலமுடன் பெற வேண்டும்.
*
எம் கனவு
“சீர்மிகு ஆசிரிய சமுதாயம்.
கூர்மிகு மாணவ சமுதாயம்.
வளம்மிகு நாடு.
நலம்மிகு மக்கள்”
*
அன்புடன்,TATA.KIPSON

No comments:

Post a Comment