PAGEVIEWERS

சென்னை: தமிழகத்தில் காவிரி டெல்டா வறட்சி மற்றும் கிரானைட் குவாரி ஊழல் விவகாரங்கள் குறித்து முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று கோட்டையில் அவசர ஆலோசனை 
 நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஆய்வுகள் 90 நிமிடங்கள் நடந்தன.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் தங்கியிருந்த முதல்வர், நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை வந்தார். துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்த அவர், அன்று கோட்டைக்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி வரை, கோட்டைக்கு அவர் வரும் எந்த திட்டமும் இல்லை என்று முதலில் கூறப்பட்டது. பின்பு திடீரென பிற்பகல் 2:20 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா, கோட்டைக்கு வந்தார். முன்னதாகவே அவர் வருகை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டதால், அமைச்சர்கள் அனைவரும், தலைமைச் செயலகத்தில் ஆஜராகியிருந்தனர்.


பரபரப்பு: முதல்வரின் இந்த திடீர் வருகையால், தலைமைச் செயலக வட்டாரம் பரபரப்படைந்தது. தொடர்ந்து, ஒண்ணரை மணிநேரம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருந்தார். அதன் பின் புறப்பட்டு சென்றார். அலுவலகத்தில் கோப்புகளை பார்ப்பதற்காக முதல்வர் வந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தை உலுக்கி வரும் கிரானைட் குவாரி பிரச்னை, காவிரி டெல்டா பகுதி விவசாயம், சென்னையில் தற்போது நிலவி வரும் காலரா பீதி

குறித்த பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. கிரானைட் குவாரி விவகாரத்தில், தற்போது சிக்கலில் உள்ள குவாரி உரிமையாளர்கள், முன்ஜாமின் கேட்டு மனுக்கள் அளித்துள்ளனர். இது குறித்து, சட்டத்துறை செயலருடன் ஆலோசனை நடத்தியதாகவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சென்னையில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், காவிரி டெல்டா பகுதியில் நிலவி வரும் வறட்சி தொடர்பாக, அதிகாரிகளுடன் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, கனிமவள ஊழல் குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை

உருவாகி வருகிறது. அதற்கு அரசு சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனைகள் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த ஆலோசனைகளை அடுத்து தமிழக முதல்வர், தமிழகம் சந்திக்கும் பல்வேறு முக்கிய பிரச்னை களுக்கு முக்கிய முடிவுகளை அடுத்தடுத்து அறிவிக்கலாம் என்ற கருத்தும் பரவலாகப் பேசப்படுகிறது. நேற்று காலையில் நூறு நாட்கள் வேலை திட்டம் குறித்து தணிக்கை நடைமுறையை அரசு அறிவிப்பாக வெளியிட்டதை அடுத்து, இந்த ஆலோசனையும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் அறிவிப்புகளை, அடுத்த சில நாட்களில் கொண்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment