PAGEVIEWERS


நல்லாசிரியர் விருது 'வாங்குவது' எப்படி?

 

செப்டம்பர் 5 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) தரப்படும். அது ஒரு மெல்லிய நகைச்சுவை. அப்போதும் எப்போதும் ஆசிரியர்களுக்கிடையில் "நல்லாசிரியர் விருது" பற்றி கேலியான பேச்சு நிகழும். அப்போதெல்லாம் ஓர் உரையாடலைப் பேசிப் பாரத்துக்கொள்வோம். அது என்ன உரையாடல் என்று கேட்கிறீர்களா? இதோ...
"சார், எனக்கு நல்லாசிரியர் விருது வேணும்."
"அதற்கென்ன வாங்கிட்டாபோது."
"கையில காசு இருக்கா. அவர பார்த்தாப்போச்சு. உனக்கென்ன! இந்த வருஷம் வாங்கிடலாம்."

மத்திய, மாநில அரசு தரும் "நல்லாசிரியர் விருது" பெற்ற ஆசிரியர்களைப் பார்க்கும்பொழுது ஒரு கேலியான சிரிப்பு, ஆசிரியர்களிடையே நிகழும். அதை வாங்கியவர்களுக்குக் கௌரவம் என்றாலும், வாங்கியவர்கள் பெரும்பாலும் கௌரவமான விருதுக்குரியவர்கள் இல்லை என்பதுதான் நிஜம்.
தகுதியற்றவர்கள் வாங்கியதைப் பார்த்து நேர்மையான ஆசிரியர்கள் சிரிக்கும்பொழுது, அவ்விருதுக்கே வெட்கம் வந்துவிடாலாம். ஆசிரியர்களுக்கு வராதா என்ன?
நூற்றுக்குப் இருபத்தைந்து ஆசிரியர்களே இவ்விருதுக்குத் தகுதியானவர்களாக இருப்பவர்கள். மற்றவர்கள் யாவரும் பணி அனுபவத்திலும், பொருளாதார, அதிகாரப் பலத்திலும் வாங்கியவர்களாக இருப்பவர்கள்தான்.
பணி ஓய்வை நெருங்கும்வேளையில் இந்த விருதை வாங்கிக்கொண்டு, எந்தக் கௌரவத்தை அடையப்போகிறார்கள் என்று தெரியவில்லை!
அப்படி என்றால் யார் தான் நல்லாசிரியர்?
தன் பொருளாதாரத்தை இழந்து, தன் சுய வாழ்வைச் சிறிதளவு மறந்து, பொருளாதாரத்திலும் அதிகாரத்திலும் குறைந்த சமூகத்தைக் கல்வியில் உயர்த்திய ஆசிரியரே மிகச் சிறந்த ஆசிரியர்.
ஓர் ஆசிரியர் வேலை, தேர்ச்சியை உயர்த்தச் செய்வது மட்டுமல்ல. ஒவ்வொரு மாணவனின் ஒழுக்கத்தை, இந்த உலகத்தில் வாழத் தேவையான அடிப்படை தகுதிகளை உருவாக்குவது மட்டும்தான். மாணவர்களுக்கு யார் ஒருவர் கனவு ஆசிரியரியராக இருக்கிறாரோ அவரே நல்லாசிரியர் ஆவார். போதைப்பழக்கமற்ற, வன்மமற்ற, சாதிமத இன பேதமற்ற, பெண்பித்தற்ற, வட்டி வியாபாரமற்ற ஆசிரியராக அவர் இருப்பார்.
உண்மையான நல்லாசிரியர் என்பவர், மாணவனின் அடிப்படைத் தகுதிகளை உருவாக்குவது மட்டுமல்லாது, இந்த உலகத்தை வழிநடத்தக் கூடிய தகுதிகளை மாணவர்களிடத்தில் உருவாக்கபவராக இருப்பவர்தான். எதிர்காலத்தில் இந்தச் சமூகத்தில் லஞ்ச லாவண்யமற்ற, சுரண்டலற்ற, சாதிபேதமற்ற, லட்சியமிக்க மாணவர்களை உருவாக்குபவராக இருப்பவர்தான் நல்லாசிரியர்.
அரசு தரும் "நல்லாசிரியர்" விருதுக்கு, ஓர் ஆசிரியர் 15 வருடம் காக்கவேண்டும். தன் பெயர் முன்பாக நல்லாசிரியர் என்கிற அடைமொழியைச் சேர்த்துக்கொள்ள பணமும் பரிந்துரையும் அவசியமாகிறது. ஆனால், உண்மையான நல்லாசிரியர் என்பவர் இதற்கு எதிராகவே இருப்பார் என்பதுதான் உண்மை. அவரால் எதிர்கால சந்ததி ஒழுக்கமுள்ளதாகவும் திட்டமிடுவதாகவும் சமுதாயத்தை லட்சியமுள்ளதாக ஆக்கவும் கூடிய சக்தியைப் பெற்றிருக்கும் என்பது மற்றொரு உண்மை. லஞ்சம் தந்து விருது பெறும் ஆசிரியரால் எப்படி நல்ல எதிர்காலத்தை மாணவர்களிடம் உருவாக்கமுடியும்?
மாணவனைத் தோழமையுடன் அரவணைத்து, அவனுடைய திறமையை வளர்த்தெடுப்பவராக இருப்பவர் தான் நல்லாசிரியர். கல்வியில் பின்தங்கிய மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தச் செய்து, அதன் வழியாக அம்மாணவனை லட்சியமிக்க மனிதனாக மாற்றக்கூடியவர்தான் நல்லாசிரியர். இதை நல்லாசிரியர் விருதுபெற்றிருப்பவர்கள் செய்திருப்பின் நலம்.
என்னுடன் பயின்ற மாணவன் ஒருவன், படிப்பில் மோசம். ஆனால் அவனைத் தனியாக அழைத்தச் சென்று, "நீ நன்றாக ஓடுகிறாய். நீ ஏன் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள கூடாது?" என்ற திரியை என் மாணவ நண்பனிடம் உடற்கல்வி ஆசிரியர் பற்றவைத்தார். அவனுக்குள் ஒரு தெம்பு வந்துவிட்டது. அவன் அதற்கான பயிற்சியை அவரிடம் மேற்கொண்டு, மண்டல அளவில், பிறகு மாவட்ட அளவில், பிறகு இந்திய அளவில் முதல் பரிசு பெற்றான். அவனை "மக்கு" என்று யாராவது தட்டியிருந்தால், அவன் இன்று ரயில்வேயில் பெரிய பதவியில் இருந்திருக்கமாட்டான். இன்று அந்த ஆசிரியர் இல்லை. ஆனால் அவருக்கு நல்லாசிரியர் விருதும் இல்லை.
என்னுடன் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் பொருளாதாரத்திலும் சமூக அடுக்கிலும் பின் தங்கியவர். அவரை ஒரு ஆசிரியர் தத்து (ஒவ்வொரு வருடமும் 10 ஏழை மாணவர்களை தத்து எடுப்பவராம்) எடுத்துப் படிக்க வைத்து, இன்று ஓர் ஆங்கில ஆசிரியராக வளர்த்தெடுத்திருக்கிறார். அவரும் விருது பெறாமலேயே ஒய்வு பெற்றும்விட்டார்.
தமிழகத்தில் உள்ள பல முக்கியமான ஓவியர்களின் பேச்சும் இதுதான். "நா நல்லா படிக்கமாட்டேன். என்னோட ஆசிரியர் என்னோட படத்தைப் பார்த்தார். நீ நல்லா வரையிறடா! போயி டிராயிங் ஸ்கூல்ல படி. நல்லா வருவ என்றார். இன்று நல்ல ஓவியனா இருக்கிறதுக்குக் காரணம், அவர்தான்" என்பதுதான் அது. ஆனால் அந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
அப்படி என்றால் நல்லாசிரியர் விருது யாருக்குத் தரலாம் என்ற கேள்வி எழலாம்?
முதலில் 15 வருட பணி அனுபவம் இருந்தால்தான் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற கட்டுப்பாட்டை இல்லாமல் செய்யவேண்டும். ஏனெனில் பணிக்கு வந்து 5 வருடமே பணி அனுபவம் அமைகிற சிறந்த ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காமல் போகலாம். எனவே அந்த பணி அனுபவ வருடத்தை நீக்கிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் திறந்த நிலையில் "நல்லாசிரியர் விருது" க்கான போட்டி விண்ணப்பத்தின் வழி, பள்ளியில் தலைமையாசிரியின் வழியாக (பரிந்துரை இல்லாமல்) அமையவேண்டும். யாருடைய பரிந்துரையும் (அதிகாரிகள், அமைச்சர்கள்) ஏற்கக்கூடாது. இன்ன இன்ன தகுதிகளுக்கு இன்ன இன்ன மதிப்பெண் என்கிற நிலைப்பாடு அமையவேண்டும். அல்லது சிறப்புத் தகுதிகளுக்குத் தரலாம்.
எப்படி?
* பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டம், மாநிலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் இவ்விருதை வழங்கலாம்.
* பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் மாநில அளவில் முதலிடம் பெறுகின்ற மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருதைத் தரலாம்.
* 5 வருடங்களாகப் பத்து, பன்னிரண்டாம் பொதுத்தேர்வில் தொடர்ந்து 100% தேர்ச்சி தரும் ஆசியருக்கு வழங்கலாம்.
* மாநில, இந்திய அளவில் விளையாட்டு, ஓவியம், பேச்சுப்போட்டி, நடனம், தற்காப்புக் கலைகள், சமூகச்சேவை ஆகியவற்றில் பரிசு பெறும மாணவர்களின் ஆசிரியர்களுக்கு இவ்விருது தரலாம்.
* தேசிய பசுமைப்படை, நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, சாரண சாரணிய இயக்கம், செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவ்ற்றில் தேசிய அளவில் பங்கு பெற்று, மாநிலத்திற்குப் பெருமைத் தேடித் தந்த மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரலாம்.
* பகுதி நேரத்தில், எந்தவிதப் பணப்பலனும் பெறாமல், பொதுமக்களுக்கு எழுத்தறிவிக்கும் ஆசிரியர்களுக்கு விருது தரலாம்.
* தமிழக அரசால் மிகச் சிறந்த அளவில் நிகழ்த்தப்படும் ICTACT என்கிற மிகச் சிறந்த கற்பித்தல் போட்டி நிகழ்வில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு இவ்விருதை வழங்கலாம்.
* கல்வி சாராது, சமூக நலனிற்காக, நாட்டு நலனிற்காகப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் "தொண்டு" மிக்க (குருதிக்கொடை, உடல்கொடை, கல்விக் களப்பணியாளர், தன்னார்வலர், சிறந்த கண்டுபிடிப்பாளர், மாற்றுக் கல்விச் சிந்தனையால் முன்னேற்றம் தந்தவர்) ஆசிரியருக்குத் தரலாம்.
* முக்கியமான போட்டிகளில் சிறந்த இடம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஆசிரியர்களுக்குத் தரவேண்டும்.
இதைப்போன்று பல தகுதிகளை நாம் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். ஆனால் யாவற்றிற்கும் மேலாக நாம் ஒரு கருத்தை அடையவே விரும்புகிறோம்.
தன்னலமற்ற, மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு யாருடைய அதிகார, பணப்பலப் பரிந்துரையில்லாமல் நாம் விருது தரவேண்டும் என்பதே அது.
கல்வி, சமூக, பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவனை உயர்த்திய ஆசிரியரே நல்லாசிரியர். தகுதிகள் ஏதும் அற்ற ஓர் ஆசிரியருக்கு இந்த விருது கிடைக்கும்பொழுது நாம் எப்போதும்போல் சிரிக்கிறோம். கூடவே, நாம் சிறிது தலையைத் தாழ்த்திக்கொள்ளத்தான்வேண்டும்.
மாணவர்களின் நினைவில் வாழும் கனவு ஆசிரியரே, விருது பெறாத "நல்லாசிரியர்"

No comments:

Post a Comment