PAGEVIEWERS

நெல்லையில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வில் காலி பணி இடங்கள் மறைக்கப்பட்டன. ஆசிரியை, ஆசிரியர்கள் வெளியேறி போரா ட்டம் நடத்தினர். இதனால் கூடுதல் காலி பணியிடம் காட்டப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடந்தது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, பாளை லயோலா கான்வென்ட் பள்ளியில் நேற்று முன்தினம் (29ம் தேதி) நடந்தது. இதில் 18 இடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்பட்டன. இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்ந்து நேற்று (30ம் தேதி) நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  

அதன்படி, முதல் வழங்கப்பட்ட 18 காலி இடங்கள் காட்டப்படும் என நம்பிக்கையில் இடைநிலை ஆசிரியர், ஆசிரியைகள் சுமார் 300 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். ஆனால், காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கியதும் 11 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அறிவிப்பு செய்து ஒட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அனைவரும் கலந்தாய்வை புறக்கணித்தனர். 

பின்னர் அவர்கள் கலந்தாய்வு நடந்த அரங்கில் இருந்து வெளியேறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கலந்தாய்வில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டதை கண்டித்தும், மறைக்கப்பட்ட இடங்களை உடனே அறிவிக்கக் கோரியும் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கலந்தாய்வும் நிறுத்தப்பட்டது.

இது குறித்து கலந்தாய்வை நடத்தும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பத்மாவதி உயர் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். காலை 10.30 மணிக்கு காலி பணியிடங்கள் குறித்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 17 காலி பணியிடங்கள் அதாவது கூடுதலாக 6 பணியிடங்கள் காட்டப்பட்டு இருந்தன. இதையடுத்து ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்றனர்.  

இதுகுறித்து,, ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், ‘‘முதலில் நடத்தப்பட்ட கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்ட களக்காடு, வள்ளியூர், பாளைபுறநர் பகுதிகள் உள்ளிட்ட 7 முக்கிய காலி இடங்களை பின்னர் நடந்த கலந்தாய்வில் பகிரங்கமாக மறைத்து விட்டனர். மேலும் ஓய்வுபெற்றவர்களின் 5 காலி பணியிடங்களும் கலந்தாய்வு மூலம் நடத்தப்படவில்லை. நாங்கள் போராட்டம் நடத்திய பிறகே கூடுதலாக 6 இடங்களை மட்டும் காட்டினர்’’ என்றனர்.

No comments:

Post a Comment