PAGEVIEWERS

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் ஊழல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு ....

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை
உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த லினட் அமலா சாந்தகுமாரி இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 2007இல் நியமிக்கப்பட்டேன். எம்பில் படித்துள்ளதால் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில்
பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற எனக்குத் தகுதி உள்ளது. என்னைவிடத் தகுதி குறைவான பலரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் எனக்கு பதவி உயர்வு அளித்து தூத்துக்குடிக்கு இடமாறுதல் அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் தடையில்லாச்சான்று
அளிக்குமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் பெறுவதற்காக 2014 மே, ஜூன் மாதங்களில் கலந்தாய்வில் கலந்து கொண்டேன்.
எனக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் உண்மையான
காரணங்களுக்காக இடமாறுதல் கோருபவர்களுக்கு மாறுதல் கிடைக்காமல் போகிறது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாவட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலர் அதை
முன்னணி பத்திரிகைகள் அல்லது பிரத்யேக இணையதளங்களில் வெளியிடவேண்டும். சட்டப்படியான இந்த நடைமுறையைப் பின்பற்றினால் தான் வெளிப்படையாக
இடமாறுதல் நடைபெறும். இந்த நடைமுறை ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுகளில் பின்பற்றப்படவில்லை. மாறாக நிர்வாகத் தேவை என்ற பெயரில் காலிப்பணியிடங்கள்
மறைக்கப்பட்டு அவை அரசியல்வாதிகளின் நிர்பந்தத்தின் பேரில் நிரப்பப்படுகின்றன.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அரசு இணையதளம் மற்றும்
முன்னணி பத்திரிகைகளில் வெளியிடவும் உத்தரவிடவேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப்பணியிடங்களை மறைத்து நடைபெறும்
லஞ்சஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர்,

இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment