"டி.இ.டி" தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் எடுக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண் தளர்வை அடுத்து 46 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.
முன்னதாக, 90 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்து தேர்ச்சி பெற்ற 29 ஆயிரம் பேருக்கும் ஜனவரி மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுவிட்டது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், கூடுதலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதில் சிக்கல் எழுந்தது.
இந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment