PAGEVIEWERS

வாக்காளர்களை கவருவதற்காக, அரசியல் 

கட்சிகள், இனி, தேர்தல் அறிக்கைகளில், தங்கள் 

இஷ்டப்படி, இலவசங்களை அள்ளி விட முடியாது

'இலவச பொருட்களை வழங்குவதாக கூறும் கட்சிகள், அதற்கான காரணத்தையும், அதற்கு தேவையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்ற விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக, லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின்போது, அரசியல் கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில், இலவச பொருட்களை வழங்குவதாக அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளன. 'டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கால்நடை, தங்கம், லேப்டாப்' என, அரசியல் கட்சிகளால், இலவசமாக வழங்குவதாக, தேர்தல் அறிக்கையில் கூறப்படும் பொருட்களின் எண்ணிக்கை, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில், கடந்தாண்டு, ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.


அப்போது, சுப்ரீம் கோர்ட் தன் உத்தரவில் கூறியது: அரசியல் கட்சிகளின் இலவச பொருட்கள் குறித்த அறிவிப்பு, தேர்தல் நம்பகத் தன்மையை பாதிக்கிறது. இதுபோன்ற அறிவிப்புகள், நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடவடிக்கையை கேள்விக் குறியாக்கி விடுகிறது. லஞ்ச நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் விதமாக, தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க கூடாது. தேர்தல் கமிஷன், இது தொடர்பாக, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. தற்போது, 16வது லோக்சபா தேர்தலுக்கு, நாடு தயாராகி வரும் நிலையில், இந்த விஷயத்தில், சில முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது. கடந்த, 7ம் தேதி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது, தேர்தல் அறிக்கை தொடர்பான, சில புதிய 

விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டிய ஜனநாயக கடமை, தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும்போது, கவனத்துடன் செயல்பட வேண்டும். 

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, ஓட்டு வாங்கும் விதமாக, தேர்தல் அறிக்கைகள் இருக்க கூடாது. இலவச பொருட்கள் குறித்த அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையில் வெளியிட்டால், அதற்கான நியாயமான காரணத்தை விளக்க வேண்டும். அந்த இலவச பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நிதி, எங்கிருந்து திரட்டப்படும் என்றும், நிதித் தேவையை பூர்த்தி செய்வது குறித்தும், விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகள், தேர்தலின் நம்பகத்தன்மையை பாதிக்கும் வகையில் இருக்க கூடாது. எந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ, அந்த வாக்குறுதிகளை மட்டுமே அறிவிக்க வேண்டும். இனி, தேர்தல் அறிக்கையில் கூறப்படும் விஷயங்களும், தேர்தல் நடத்தை 

விதிமுறைகளுக்குள் கொண்டு வரப்படும். சட்டத்துக்கு எதிரான விஷயங்கள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறாமல்பார்த்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில், மாநில அரசுகளின் கொள்கைப்படி, மேற்கொள்ளப்படும் நலத் திட்டங்களை அறிவிப்பாக வெளியிட தடையில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு: மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறித்த விவரங்களை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: முதல் பொதுத் தேர்தல், 1951 52ல் நடந்தது. அப்போது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 17 கோடியாக இருந்தது. இன்னும் சில மாதங்களில், 16வது லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஓட்டளிக்கவுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, 81 கோடி. முதல் தேர்தலின்போது இருந்த வாக்காளர்களை விட, தற்போது, ஐந்து மடங்கு வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த, 2009ல் நடந்த தேர்தலின்போது, வாக்காளர்களின் எண்ணிக்கை, 71 கோடியாக இருந்தது. நாட்டிலேயே அதிகமாக, உ.பி., யில் தான், 13 கோடி வாக்காளர்கள் உள்ளனர் இதற்கு அடுத்த இடங்களில், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment