PAGEVIEWERS

சட்டக் கமிஷன் அதிரடி பரிந்துரை

 

5 ஆண்டு தண்டனைக்கு உரிய சட்டத்தில் வழக்கு பதிவானாலே தேர்தலில் போட்டியிட தடை..........



புதுடெல்லி: அரசியலில் குற்றவாளிகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில், ஒருவர் மீதான வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால்தான், அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை விதிக்க முடியும்.
இதனால் இச்சட்டத்தையும் மாற்ற வேண்டும் என்று பொதுநலன் வழக்கில் கூறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இப்போதுள்ள முறைப்படி குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் ஒருவரை தகுதி நீக்கம் செய்வதா அல்லது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே ஒருவரை தகுதி நீக்கம் செய்வதா என்பதை ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு சட்டக் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, சட்டக் கமிஷன் நேற்று தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் பரிந்துரை யில் கூறப்பட்டுள்ளதாவது:

* இப்போதுள்ள முறைப் படி, தண்டனை பெற்ற பின்னர் ஒருவரை, தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்யும் முறையால், அரசியலில் குற்றவாளிகள் கலப்பதை தடுக்க முடியவில்லை. ஏனெனில், வழக்குகள் நீண்டக் காலம் இழுக்கப்படுகின்றன. மேலும், இவற்றில் மிக அரிதாகவே தண்டனை வழங்கப்படுகிறது. இதனால் சீரிய முறையில், அரசியலில் குற்றவாளிகள் தடுப்பதை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

* சரியான நீதித்துறை பரிசீலனையின் அடிப்படையில், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை வழங்கத் தகுதியான பிரிவுகளின் கீழ் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அவரை தேர்தலில் போட்டியிடாமல் தடை விதிக்கலாம். இதன் மூலம் அரசியலில் குற்றவாளிகள் நுழைவதை சீரிய முறையில் தடுத்து நிறுத்த முடியும். எனினும், இதை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.

* அதாவது, வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு ஆண்டுக்குள் இதுபோன்ற வழக் குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவரை தகுதி நீக்கம் செய்ய தேவையில்லை. விசாரணை நீதிமன்றத்தினால் ஒருவர் குற்ற மற்றவர் என்று விடுவிக்கப்படும் வரை அல்லது 6 ஆண்டு வரையிலான காலத்தில் இதில் எது முதன்மையானதோ அந்த காலம் வரை ஒருவரை தகுதி நீக்கம் செய்யலாம்.

* தேர்தலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் தெரிவித்திருந்தது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கலாம். மேலும், அவர்களையும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கலாம்.
இவ்வாறு சட்டக்கமிஷன் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

‘ஊழல், கிரிமினல் வழக்குகளை
ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்Õ
ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாக எம்.பி. எம்.எல்.ஏக்கள் மீது தொடரப்படும் வழக்குகளின் விசாரணை ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழல் மற்றும் கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கி, 2 ஆண்டு தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்தவர் ஆகின்றனர். எனவே, இதிலிருந்து தப்பிப்பதற்காக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கை இழுத்தடிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை கீழ்கோர்ட்டுகள் ஓராண்டுக்குள் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும். அவ்வாறு ஓராண்டுக்குள் முடிக்கப்படாவிட்டால் அதற்கான சரியான காரணத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்‘ என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment