முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு | ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியீடு | 20 நாட்களுக்குள் தேர்வு முடிவு | பல்வேறு எழுத்துப் பிழைகளுடன் இருந்த வணிகவியல் மற்றும் தமிழ்க்கேள்வித்தாளால் தேர்வர்கள் பாதிக்காத வகையில் உரிய முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.
"முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், தமிழ்ப் பாட தேர்வர்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாளில், பல்வேறு கேள்விகளில், எழுத்துப் பிழைகள் இருந்தன. மேலும், வணிகவியல் பாட கேள்வித்தாளில், ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வியில், பிழை ஏற்பட்டது. இந்த இரு பிரச்னைகள் குறித்தும், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உடனடியாக தெரிய வந்தது.
இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று கூறியதாவது: தமிழ்ப் பாடத்திற்கான கேள்வித்தாளில், எழுத்துப்பிழைகள் அதிகம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். அச்சக நிறுவனம், கேள்வித்தாளில், பிழை இருக்கிறதா என்பதை சரிபார்த்து, செயல்பட்டிருக்க வேண்டும். அச்சகங்களில், பாட வாரியாக, நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்கள், கேள்வியை படித்துப் பார்த்து, ஏதாவது பிழைகள் இருக்கிறதா என்று சரிபார்ப்பர். தமிழ்ப் பாடத்தில், சரிபார்ப்பு நடந்ததா என, தெரியவில்லை. இது குறித்து, விசாரிக்கப்படும். வணிகவியலில், ஒரே ஒரு கேள்வி, தமிழில், சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து, "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்வர்கள் பாதிக்காத வகையில், உரிய முடிவு எடுக்கப்படும்.
ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியிடப்படும். அதன்பின், விடையில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அது குறித்தும், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்போம். இதன்பிறகே, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டங்களில் இருந்து, சீலிடப்பட்ட விடைத்தாள் கட்டுகள், நேற்று, சென்னைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. விரைவில், விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்து, 20 நாட்களுக்குள், தேர்வு முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment