PAGEVIEWERS

பள்ளி மாணவரை அலட்சியப்படுத்தும் பேருந்து ஊழியர்கள்: நீதிமன்றத்தில் வழக்கு



            இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

              மதுரை வழக்கறிஞர் ஞானகுருநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்துள்ள பொது நல மனு: போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் பாதிக்கும் என்பதால், இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, அரசு பேருந்துகளில் முறையாக ஏற்றுவதில்லை.

                    பேருந்து நிறுத்தத்தை விட்டு, சற்று தள்ளி நிறுத்துகின்றனர். மாணவர்கள், புத்தகப் பைகளுடன் ஓடிச் சென்று, பேருந்துகளில் ஏறுகின்றனர். புதுக்கோட்டை, கல்குறிச்சியில், அரசு பேருந்து நிற்காததால், பள்ளி செல்லும் அவசரத்தில், பால் வேனில் மாணவர்கள் பயணித்தனர். இது விபத்துக்குள்ளாகி, ஏழு பேர் பலியாயினர். இது பற்றி, தினமலர் நாளிதழில், செய்தி வெளியானது.

              புதுக்கோட்டை சம்பவம் போல, மற்ற இடங்களிலும் நடக்கின்றன. இலவச பாஸ் திட்டத்தை, சரியாக அமல்படுத்துவது அரசின் கடமை. மாணவர்களை அலட்சியப்படுத்தும், அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                     கடந்த, 2010ல், ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கு ஒன்றில், கடுமையான நடவடிக்கை எடுப்பதாக, உத்தரவை பிறப்பித்து உள்ளது. கிராமங்கள், நகரங்களில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், அரசு பேருந்துகளை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச் செல்ல உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

                            நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் அடங்கிய, அமர்வு முன், மனு விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துக் கழக பொது மேலாளரை, ஒரு எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment