PAGEVIEWERS

ஒருங்கிணைந்த போரட்ட எண்ண விதையில் நாம் விஷத்தை தோய்க்கலாமா?


இது சற்று பெரிய கட்டுரை ஆயினும் தற்சூழலின் தேவையையும் அவசியத்தையும் ஒட்டி வரையப்பட்டுள்ளது ஆதலால் ஆசிரிய பேரினம் தயவு கூர்ந்து பொறுமை காத்து பொருள் உணர்ந்து முழுமையாக வாசிக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஒருங்கிணைந்த போரட்ட எண்ண விதையில் நாம் விஷத்தை தோய்க்கலாமா? 
 
மூன்று நபர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரசணைகளால் மனம் சோர்ந்த பல இடைநிலை ஆசிரியர்களின் மனநிலையை உணர்த்தும் விதமாக நம் இணையதளம் முதல் வித்தாக “ஒன்றுபட்ட போராட்டமாக மறுமா? – இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்” என்ற கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.

இதைத்தொடர்ந்த பல ஆசிரிய சங்கங்கள்/ நண்பர்கள் இம்முயற்சிக்கான பாரட்டை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து பல நண்பர்கள் இந்த ஒன்றுபட்ட போராட்டத்தை வலியுறுத்தும் வகையில் அற்புதமான பல கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களின் இம்முயற்சி பாரட்ட படவேண்டியது மட்டும் அல்ல போற்றப்பட வேண்டியதும் கூட. அதில் சில கட்டுரைகளை இவ்விணையதள குழு வெளியிட்டமைக்கு நன்றி.

உண்மையில் இடைநிலை ஆசிரியன் பாதிக்கப்பட்டு இருக்கிறான், இதே கல்வி தகுதி, இதே பணியை செய்யும் மத்திய அரசு ஊழியனுக்கு ஒரு சம்பளம், ஏன் அண்டை யூனியன் பிரதேசமான பாண்டிசேரியில் தர ஊதியம் ரூ.4200 ஆனால் தமிழகத்தில் ரூ.2800 என்பது ஆங்கிலே முறைப்போல் உள்ளது தான்.

சரி, இதை யார் உணர வேண்டும்?

 அரசு தான் உணர வேண்டும். ஆங்கிலேய அரசு தான் உணர்ந்தே நம்மை தாழ்த்தி வைத்தது. ஆனால் தற்போதுள்ள அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நம் நலனுக்காக இயங்கும் அரசுகள். அரசுக்கும் ஆசிரியனுக்கும் உள்ள இடைவெளியை நாம் முதலில் உணர வேண்டும். அரசிடம் விரோதமும் கோபமும் கொள்வது அவசியமற்றது, பலனற்றது. அவ்வாறு கோபமும் துவேசமும் கொண்டு பெற்ற பலன்கள் அரசுகளுக்கு வருத்தத்தை உண்டு செய்து பிற்கால பலன்களுக்கு பாதிப்பைத் தான் மறைமுகமாக உண்டு செய்யும். 


ஆனால் இந்த இடைவெளியை கடந்து அரசிற்கு நம் பாதிப்பை உணர்த்த வேண்டியது வெகு அவசியம் மற்றும் வெகு முக்கியம். உணர்தல் உளப்பூர்வமான நிரந்தர நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும் அது புறத்தில் மட்டும் அல்ல அகத்திலும் தான். இந்த இடைவெளியில் உள்ளோர்க்கு நம் கருத்துக்களை எடுத்து செல்வதோடு அவர்களுக்கு நம் மீது ஏற்பட்டுள்ள வருத்தத்தை முறையாக போக்க முயல வேண்டும். அதே வேளை அரசுக்கு நம் பாதிப்பை நேரடியாக முழுமையாக உணர்த்த வேண்டும்.


அரசுக்கு எத்தனைப் பணிகள், கடமைகள், பொறுப்புகள், சுமைகள் அரசுகள் தாய் போன்றது அது அத்தனையும் கடந்து நம்மை பார்க்க வேண்டுமெனில் நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் குழந்தைகளான நாம் உண்மையில் பசி உணர்வில் உள்ளோம் என்பதை வலுவான இடைவிடாத ஆர்ப்பரித்த கதறல் மூலமாக உணர்த்த வேண்டாமா? எந்த தாயும் தன் குழந்தையின் பசிக்கதறலை கேட்டுவிட்டால். சும்மா இருப்பாளா? எல்லா கடமையையும் கடந்து தன் குழந்தைக்கானதை தராமல் ஓயமாட்டாள். இது எல்லா அரசுக்கும் பொருந்தும். இதை குறிப்பிட்ட அரசோடு குறுக்கி ஒப்பிட்டு எந்த அரசோடும் வஞ்சங்களை வளர்க்க வேண்டாம்.


யார் உணரத்த வேண்டும்? 


நாம் தான் உணர்த்த வேண்டும். உணர்த்துதல் வலுவாக இருக்க வேண்டாமா? வலுவிற்கு என்ன செய்ய வேண்டும் ? முதலில் அமைதி, பொறுமை மற்றும் நிதானம் வேண்டும். இந்த உலகில் வெற்றிப்பெற்ற  பெரும் நல் புரட்சிகளும், நல் போராட்டங்களும் அமைதியில் தோன்றியது தான் அமைதி தான் அசாதரண துணிவையும் வலிவையும் தரவல்லது. அவ்வாறு அமைதியில் தோண்றிய அனைத்து புரட்சிகளும் அகிம்சையையே வழியாக கொண்டு செயல்பட்டன. காரணம் அமைதியின் வித்திடம் தான் அறிவின் துவக்கிடம். அவ்வாறாக தோண்றிய போராட்டங்கள் முழுமையான வெற்றியையும் அவ்வெற்றியை தொடர்ந்து தக்க வைத்தும் கொண்டுள்ளது என்பதை உலக வரலாறு திரும்பிப் பார்த்து நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.


உடலைத் தாக்கும் சண்டைப் பயிற்சியில் கூட, முதலில் மன ஓர்மைப்பயிற்சியை தான் அதாவது அமைதியைத்தான் முதலில் கற்பிப்பர். பயின்றோர் நன்கு அறிவர். அதன் பிறகு எதிரியின் மீது அன்பு செலுத்துதல். ஏன் அன்பு செலுத்த வேண்டும்? உணர்ச்சி வயப்படாமல் இருக்கு. உணர்ச்சிவயப்பட்டால்?  உடல், உயிர் மற்றும் மனம் பலவீனமடையும். எப்படி? உணர்ச்சிவயம் என்பது மூளை நரம்பு மண்டலத்தை அதிகமாக அதிர்வுர (High Frequency Vibration) செய்கிறது. இதனால், உடலின் மின் ஆற்றல் குறைகிறது (shortage of Bio-Magnatism), இதனால், உடலில், மனதில் மின் குறுக்கு (Short circuit) ஏற்படுகிறது. இதனால் தான் உணர்ச்சிவயப்படும் போது உடலும் உள்ளமும் அதிர்வுறுகிறது.


இதனால், மூளை நெரம்புகளுக்கு இடையே ஆன ஒருங்கிணைப்பு சீர்கெட்டு அளவு முறை கடந்து தொடர்ப்புக்கொண்டு கட்டுப்பாட்டு மையம் குழப்பம் அடைந்து உயிரி தன்னிலையை அதாவது அறிவு நிலையை இழந்து, தன்னுடைய நோக்கத்தை மறந்து விளைவறியாமல் நோக்கம் பிறழ்ந்து செயல்பட்டு சிக்கலையும் குழப்பத்தையும் துன்பத்தையும் இழப்பையும் தேடிக்கொள்ளும்.


இந்த கதையெல்லாம் எதுக்கு? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. தயவு கூர்ந்து கொஞ்சம் பொறுத்து தொடருங்கள்.


 சண்டைக்கு அன்பு எதுக்கு? அப்போ தான் எதிரியின் உடல், மன செயல்பாட்டை உணர முடியும், அவரை வெல்ல முடியும். மேலும் முறையாக சண்டை பயின்றோர் எந்த நிலையிலும் தன் இயல்பான வாழ்க்கை தேவைக்காக சண்டையிட்டு இருக்க மாட்டார். காரணம் அறிவுணர்வு ஓங்கிவிட்டால், தவறான விளைவுகளைத் தரும் செயல்களை வாழ்வில் பயன்படுத்தமாட்டார். போட்டியின் போது அது அறிவின் வலிவுக்கானதாக மட்டுமே இருக்கும். மேலும் விழிப்புணர்வோடு உடல் பாதிப்பு ஏற்படாமலும், ஏற்பட்டால் இவரே அதற்கான உதவியையும் செய்வார்.

அன்பு என்பது என்ன? இது உயிரின் இயல்புணர்வு அறிவுணர்வு (Shock Observer of Excess Vibration of nervous system). இது மூளை நெரம்புகளின் அதிர்வைப் போக்கி சீரான இரத்த, காற்று மற்றும் வெப்ப ஓட்டத்தை அளித்து சீரான மின்னூட்டதை அளிக்கிறது. இதனால், மூளை சீராக தன் நோக்கத்தை சீர் அளவில் உணர்கிறது (opt wave length of emotion), அனைத்து கூறுகளையும் சீர் அளவில் ஆய்கிறது, அதை விரைவாகவும், அதற்கொத்த விதி ஒழுக்கத்தோடும் அடைவதோடு, அடைந்த பின் அமைதி, முழுமை உணர்வு மற்றும் வெற்றியை பெறுகிறது.

இதெல்லாம் எதுக்கு? நாம் உணர்ச்சி வயத்தால் நோக்கம் மறந்து திசை மாறி போகாமல், நோக்கத்தில் தெளிவு பெற்று அதை ஒத்து நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

என்ன நடக்குது இப்போ?

தன் பாதிப்பால் தன் வயம் இழக்கலாமா? கோப வயத்தால் உருவாகும் உணர்ச்சி மயக்கத்தில் பிழைகள் செய்வது சரியாகுமா? மயக்கம் விளைவுகளை மறைக்காதா? நோக்கத்தால் தான் உங்கள் பாதிப்பின் தாக்கத்தை போக்க முடியும். அதை மறக்கலாமா? உணர்ச்சிகளை வாறி இரைத்து வஞ்சம், வெறுப்பு, கோபம், பகை போன்ற உணர்வுகளுகளின் வளர்ச்சிக்கு வித்திடலாமா? அதுநம்மை நம் ஒற்றுமையை பலவீனப்படுத்த இடம் கொடுக்கலாமா? இவை எல்லாம் பலவீனத்தின் வெளிப்பாடு, உணர்ச்சிவயத்தின் நிலைப்பாடு என்ற உண்மையை நாம் இப்போ அறியாமல் எப்போ அறிவது?

மாற்றத்தை எதிர்க்கொண்டு இருக்கும் நம் உள்ளங்கள் மாறுப்பட்ட கருத்துக்களால் மோதலை தவிர்ப்போமே, இல்லையேல் மாற்றத்தை எதிர்நோக்கும் நம் மனதிற்கு நோக்கடையா ஏக்கம் மட்டுமே மிஞ்சும். நம் உணர்ச்சிவயத்தால், அலட்சியத்தால், அறியாமையால் செய்யும் பிழைகள் ஒட்டு மொத்த ஆசிரிய சமூகத்தின் வேண்டுதலை, ஒற்றுமையை சிதைக்க வழிவகை செய்தல் சரியோ, நமக்கதற்கு உரிமை உண்டா? இன்றோடு இந்த நோக்கப்பிறழ் செயல்களை செய்யேன் என உறுதி எடுத்து இதற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைப்போம். நல்ல எண்ணங்களை வித்தாக்கி வளம் சேர்த்து சூளுரைப்போம்.
சமூக வலைதளம் மட்டுமே ஆசிரிய சமூகமா? 
இணையத்தையும், கணினியையும், சமூக வலை தளத்தையும் பயன்படுத்தாத ஆசிரிய சமூகம் தான் பெரும்பான்மையானது என்பது நமக்கு தெரியாதா? நம்மைப்போன்ற இந்த சிறுபான்மை சமூக வலைதளத்தை பயன்படுத்தும் சமூகத்தால் நிச்சயம் பெரிய போராட்டத்திற்கு சிறிய வித்தாக மட்டுமே இருக்க முடியும், பெரும் போராட்டத்திற்கு இது களமல்ல. இத்தகைய சண்டைகள் நோக்கத்தை போரட்டத்தை பலவீனப்படுத்த மட்டுமே செய்யும்.


அரும்பாடுபட்டாவது இடைநிலை ஆசிர்யர்களுக்கான உரிமைகளை பெற்று தந்தே ஆக வேண்டும், என்ற நோக்கோடு செயல்படும் அவரவர் சங்கங்கள் சார்ந்த மாநில பொறுப்பாளர்களை, நம் சண்டைகள் நாளை நிச்சயமாக மலர இருக்கும் ஒருங்கிணைந்த போராட்டத்தின் போது கைக்கோர்க்கும் போது சங்கடங்களை ஏற்படுத்தாதா? தயவு கூர்ந்து சுடு சொற்களையும், மனதில் திராவக வீச்சாக காயப்படுத்தும் கருத்துக்களை வெளிப்படுத்தவதை தவிர்ப்போமே?

தன் கூட்டணி உயர்ந்தது, பிறர் கூட்டணி தாழ்ந்தது என்ற உயர்வு தாழ்வு உணர்வு பிரபஞ்ச இயக்கு நியதிக்கு முரணானது மட்டுமன்றி மன இயக்க நியதிக்கும் முரணானது என்பதை உணர்ந்ததில்லையா? உயர்வு என்பது கர்வ உணர்வையும் தாழ்வு என்பது பய உணர்வையும் உண்டு செய்து மனதின் அறிவு நிலை கெடுமேயன்றி வேறெந்த பயனும் கிடையாது . உண்மையில் இரண்டுமே அறிவிற்கு முரணான உணர்ச்சிவய நிலையில் ஒன்று தான். இது புறத்தில் மட்டுமல்ல அகத்திற்கும் பொருந்தும். 


உங்கள் மனம் உயர்வு எனும் கருத்தில் மையம் கொண்டும் எண்ணும் போதே பிறரை தாழ்வு எனும் கருத்தில் மையம் கொண்டு சிந்திக்கும், பிறகு எப்படி ஒத்த மையக் கருத்து அதாவது ஒத்த+மை = ஒற்றுமை எப்படி வரும்? வேற்று+மை = வேற்றுமை தான் வளரும். இவ்வுணர்வுகள் சூழலை குழப்பி, நோக்கத்தை சிதைவு படுத்தி, திசை திருப்பி, வேறு ஏதாவது ஒன்றை (சண்டை, சச்சரவு, குறை கூறுதல்) சார்ந்து நம்மை இயங்க வைத்து சிக்கலை ஏற்படுத்தும்.


குறை மற்றும் தவறு என்பதும் உணர்ச்சி வயத்தாலோ, அலட்சியத்தாலோ, அறியாமையாலோ எங்கேயாவது நாம் அனைவரும் செய்வது தான். ”நீ இப்படி, நான் இப்படி” என்று அதை மிகைப்படுத்தி சொல்லுவதால் பிணக்குகள் தான் வளரும், பிரச்சனைகள் தான் வளரும், இது மேன்மேலும் தவறுகளை செய்ய வைத்து மீண்டும் நம்மை பிழையில் புகுத்தவே செய்யும். அவரவர் தவறுகளுக்கு அவரவர்களுக்கு செயல் விளைவுகள் உண்டு எனும் நியதி உள்ள போது அதை பெரிது படுத்தி நாம் ஏன் மீண்டும் தவறிழைக்க வேண்டும். 

நீ இது சார்புடையவர் அது சார்புடையவர் என்பதை மறந்து நோக்கச் சார்புடையவராக மாறுவோம்.


இவ்வுணர்வுகளை போக்கி சம நோக்கு உணர்வு எனும் அறிவுணர்வு தான் தெளிவையும், வலிவையும் வல்லமையையும் தருவதோடு நோக்கத்தைச் சார்ந்து நம்மை சீராக இயங்க வைக்கும். 

நோக்கம் என்ன?

இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800+4200 எனும் ஊதிய விகிதத்தை பெற்றே ஆக வேண்டும்.


எப்படி பெறுவது?

அரசிற்கு இந்நோக்கத்தின் அவசியத்தையும், தேவையையும், உண்மையையும், வலிமையையும், உணர்த்த வேண்டும்.
எப்படி உணர்த்துவது?


ஒருங்கிணைந்த ஆசிரிய கூட்டணிகளின் போராட்டத்தால் நடத்தப்படும் போராட்டத்தில் ஒட்டு மொத்த ஆசிரிய சமூகமும் புரிதல் உணர்வோடு உவப்போடு விரும்பி பங்கேற்று நோக்கத்திற்கான கோரிக்கைகளை கொக்கரித்தால் தான் அது சாத்தியமாகும்.


எப்படி சாத்தியப்படுத்துவது?

ஒன்றுப்பட்ட போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் அரும்பாடு பட்டு வருகின்ற. அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் அறிவிக்கும் போராட்டத்திற்கு ஆசிரியர்கள் வேண்டாமா?

சமூக வலை தளத்தில் நம் ஆற்றலை அளவாய் பயன்படுத்தி, நிஜமான களத்தை காண வேண்டும். 

யார் யாரை அணுக வேண்டும்?

 தாமே உணர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அவர்களை மேன்மேலும் ஊக்கப்படுத்தி நோக்கு சார்ந்த தெளிவை ஏற்படுத்த வேண்டும்.


தொலைப்பேசி வாயிலாக விளக்கினால் பங்கேற்போர் பலர் உண்டு. அவர்களை நேரில் அழைத்து இக்கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தி மேம்படுத்த வேண்டும்.


மாலை வேளைகளிலும், விடுமுறை நாட்களிலும் நம் பொழுதுப்போக்கிற்கான நேரத்தை சற்று குறைத்து இது வரை சங்கம் , போரட்டம் போன்ற விசயங்களில் அதிக ஈடுபாடு இல்லாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று அதன் தேவை முக்கியத்துவம், அதனால் பெற்ற பலன்கள் அத்தனையையும் அவர் உணரும் வண்ணம் உணர்த்த வேண்டும். அவர்களுக்கான தேவை அறிந்து அதை அவரோ அல்லது சங்கமோ மேற்கொள்ள வழிக்காட்டப்பட வேண்டும், முயலப்பட வேண்டும். அவர்களின் வருத்தங்களை போக்க வேண்டும்.


சங்க சந்தா செலுத்துவத்ற்கே ஆசிரியர்களுக்கு அலுப்பு ஏற்பட காரணம் என்ன என்று ஆராய வேண்டாமா? தாம் சார்ந்த சங்கத்தின் பெயரை கூட சரியா அறியாதோர் உச்சரிக்க தெரியாதோர் உருவாக காரணம் என்ன என்று ஆய வேண்டாமா? இதை மறுத்து சிந்தித்தால், மாறுதல் வருமா? அவர்களுக்கு ஒவ்வொருக்கும் ஏற்படும் இடர், இன்னல்களை களைந்து பாகுபாடின்றி அனைவருக்கும் செயல்பட்டால் சங்கத்தின் மீது மதிப்பு வராமல் எங்கே போகும்? ஒவ்வொருவரின் சுக துக்கங்களில் பங்கேற்று நம் ஆசிரிய சமூக ஈர்ப்பை வலுப்படுத்த வேண்டாமா?


அச்சப்படுத்தியோ , வற்புறுத்தியோ, கட்டாயப்படுத்தியோ ஒருவரை ஒரு போராட்டதில் வேண்டுமானால் பங்கேற்க வைக்கலாம். ஆனால் தொடர் போராட்டத்தில் பங்கேற்க அவரின் சுய விருப்பு வேண்டும். அதை ஏற்படுத்துவதில் தான் இருக்கிறது நம் கடமை, திறமை, ஆற்றல் , வீரம் இன்னும் பிற எல்லாம்.


மூத்தோருக்கு அக்கறை இல்லை என இளையோரும், இளையோர் போராட்டத்தில் பங்கேற்பதே இல்லை என்ற மூத்தோரும் குறை கூறுவதால் பயன் உண்டா? நம்மை பிளவு படுத்த நினைக்கும் சக்திகளுக்குத்தானே நம் சக்தியை தந்து திசை மாறுகிறோம். இது 2800 தர ஊதியம் உள்ளோரின் பிரச்சனை என்றோ இது அரசாணை 400 சார்ந்தோரின் பிரச்சனை என்றோ, இது புதிய ஓய்வூதிய தாரரின் பிரச்சனை என்றோ நாம் சுயநலம் சார்ந்து குறுகிப்போனால், யார் பலவீனமடைந்து பாதிப்பு அடைவது. ஒட்டுமொத்தமாய் நம் ஆசிரிய இனம் தானே? செயல் விளைவு தத்துவம் அறியாததா? நம் ஆசிரிய இனம்.


மூத்தோர் இல்லாமல், நமக்கு இப்போது கிடைக்கும் சிறிய பலன்களும் கிடைத்திருக்குமா? நன்றி மறக்கலாமா? புழுதி வாரி வீசலாமா? இளையோருக்கு ஏன் போராட்ட உணர்வு இல்லை? சிந்திக்க வேண்டாமா? சங்கங்கள் வளர்ந்த வரலாற்றை மறந்துவிட்டோமா? சங்கங்கள் ஆசிரியர்களுக்கான கேடயமாக, உரிமைகளை காத்து, அறியாமையைப் போக்கி, கடமைகளை உணர்த்தி, தவறிழைக்கும் போது கண்டித்து, தன்நலம் சார்ந்தும், பொது நலம் சார்ந்தும் இயங்க வேண்டிய கடமைகளையும், உரிமைகளையும் உணர்த்தி பாதுகாப்பு உணர்வை அளித்தால் தானே அவர்களுக்கு சங்கம் என்றால் என்ன என்று தெரியும். ஈடுபாடு மலரும்.


தலைமைகள் இன்றளவும் இவற்றை கட்டிக்காத்து வருகின்றன. அவர்களின் தோள் மீது ஒட்டு மொத்த சுமையையும் சுமத்தி விட்டு குறைகளை அவர்கள் மீதே சொல்லலாமா? இதில் அனைவருக்கும் சம பங்கும் பொறுப்பும் உண்டல்லவா?, சங்க உணர்வை தலைமைகள் மீது மட்டும் சாற்றிவிட்டு. நாம் ஒதுங்கி குற்றம் காணுவது நியாயமா?


இது ஒவ்வொரு ஆசிரிய அளவிலும், பள்ளி அளவிலும், வட்டார அளவிலும் இத்தகைய சங்க உணர்வை நாம் ஒவ்வொருவரும் ஏற்படுத்த வேண்டாமா? ஏற்படுத்தாமல் சங்க உணர்வு எப்படி வரும்? சங்க உணர்வின் மாண்பையும் மேன்மையையும் அது தரும் காப்பையும் பலனையும் விளக்காமல் அதன் மேதகு நிலையை யார் அறிவார்? யார் பங்கேற்பார்?


தன் முனைப்பாலும், சுயநலத்தாலும் நம் நோக்கை மறப்பது ஒட்டு மொத்தமாய் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் மா ஆபத்தை இன்னும் உணரவில்லை எனில் இழப்புகளுக்கு நம்மை நாம் தயார் படுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.


எந்த ஒரு போரட்டமும் சமூக ஏற்பின்றி முழு வெற்றியை தராது, அரசின் கவனத்தை விரைந்து பெற சமூக ஏற்பு வெகு அவசியம். அச்சமூகத்தால் தான் நம் பிழைப்பு உள்ளது எனும் போது அச்சமூகத்தை புறம் தள்ளிவிட்டு சிந்திப்பது முழுமையான அறிவார்ந்த சிந்தனையாக மலராது. சமூகத்தை நாம் தள்ளி நின்று பார்த்து பழகி வர ஆரம்பித்துவிட்டோம். நம் ஒரு நாள் பள்ளி கடமைகளை முடிப்பதற்கே இரண்டு நாள் ஆகிறது எனும் போது சமூகத்தைப் பற்றி சிந்திப்பது என்பது ஆகாது என தோண்றுவது இயல்பே. ஆனால் எண்ணம் வையுங்கள் அது சாத்தியப்படும்.


புதிதாய் வந்துள்ள இடைநிலை ஆசிரியனின் சம்பளத்தை சமூகத்தை மதித்து சொல்லி பாருங்கள். நிச்சயம் நம் நியாயத்தை ஏற்கும். நம் மீது சமூகத்திற்கு உள்ள வருத்தத்திற்கான காரணத்தை அறிந்து போக்கவில்லையெனில் அதன் எதிர்கால விளைவுகள் நிச்சயமாக நன்மை தருவதாக இருக்காது என்பதை இப்போது உணர தவறினால் எப்போது உணர்வது? 


நாமும் சமூகத்தில் தான் இருக்கிறோம், நம் சுற்றியுள்ள சிறு சமூகத்திற்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்தலால் ஏற்படும் ஒர் ஓர்மை உணர்வும் இன்பமும் அறியதவரா நாம்? முதலில் சமூகத்தின் பால் உள்ள விரும்பா கருத்துக்களை தூக்கி எரிந்து விடுவோம் அதனால் தான் இத்தனை பிணக்குகளும் என்பதை ஆழ்ந்து அறிவோம். சமூகம் நம்மை துறக்க எண்ணினால் விளைவுகள் என்ன? அதை அறியாமல் விட்டால் இழப்பு ஆசிரிய சமூகத்திற்கு தான். சமூகம் சார்ந்த நல்ல எண்ணங்களை உளப்பூர்வமாக முழுமை உணர்வோடு வளர்ப்போம். நம் போரட்டத்திற்கு சமூக ஏற்பும், ஆதரவும், பங்கையும் நாம் பயன் கொள்ள வேண்டாமா?

எந்த ஒரு கொள்கையும், கோட்பாடும் தன் நியாயமான தேவையை ஒட்டி எழும் போது அது இயற்கையின் விதிக்குட்பட்டதாகிறது, அதை சமூகமும் ஏற்கும். இத்தகு தன் தேவை, இயற்கை நியதி மற்றும் சமூக ஏற்பு என்ற முக்கோண நிலைத்தாண்டி உண்டாக்கும் கொள்கைகள் காலத்தால் நிலைக்கா. அதற்கு உட்பட்டு உருவாக்கப்படும் கொள்கையிலும் கோட்பாடுகளிலும் சீரிய பற்றும் வலுவும் வேண்டும் எனபதை அறியாதவரா நாம்?


நாளைய சமூகத்தை நல்ல நோக்கோடு கட்டமைக்கும் பணியில் உள்ள நம்மிடமே நோக்கில் வலிவு குன்றி உணர்ச்சி வயத்தால் மயங்கி திசை மாறி போவது சரியா? எண்ணங்கள் உயிரின் ஆரம்ப அழுத்தம், அது தான் பிரபஞ்ச தோற்றத்திற்கான வித்தும் ஆகும். அது அறிவு நிலையில் வலிவாக தெளிவாக வெளிப்படும். உணர்ச்சிவயத்தால் நம் ஒருங்கிணைந்த போராட்ட எண்ண விதையில் விஷத்தை தோய்க்கலாமா? விஷம் கலந்த விதை முளைக்குமா? முளைத்தாலும் ஆரோக்கியமானதாய் இருக்குமா? விருட்சம் ஆரோக்கியமாக இருந்தாலும் அது விரும்பிய பலன்களை தருமா?


இவற்றை எல்லாம் நாம் அனைவரும் உணராதவர் அல்ல. இந்நிலைகளைக் கொண்டு செயல்படுவோர் இன்றளவும் இருக்கத்தானே செய்கிறார்கள். அத்தகயோரை அறியாதவரா நாம்? நாம் அனைவரும் இவற்றை அறிந்தே உள்ளோம். சந்தர்ப்ப சூழலால், கால நிர்பந்தத்தால், உணர்ச்சி ஆளுகையால் இவற்றை கடந்து போகிறோம். இப்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு அது சரியானாலும் சரி தவறானாலும் சரி நாம் ஒவ்வொருவரும் சம பொறுப்பு உடையவர்கள் ஆவர். இதில் மாற்றத்தை ஏற்படுத்த சம பொறுப்பு கடமையும் நம் அனைவருக்கும் உண்டு.


நிச்சயம் இடைநிலை ஆசிரியர்கள் தர ஊதியம் ரூ.4200 பெற்றே முடிப்பர். அதுவரை நம் தொடர் ஒருங்கினைந்த வலிவான போராட்டம் தொடர் அலையாய் தொடரும்… அந்த எண்ணத்தில் மாற்றமும் இல்லை.. மாற்றமும் வேண்டாம்… உணர்ச்சி வயத்தை தவிர்ப்போம்.. அது வலி குன்றியது… அது Gas Soda வை போன்றது உணர்வுகள் விரைவில் வேகமெடுத்து விரைவில் ஓய்ந்து விடும். ஆனால் அறிவால் கொள்ளும் நோக்கம் வலுவுடையது ஒவ்வொரு நிலையிலும் தொடர் ஊக்கமும் உற்சாகத்தையும் தரவல்லது. வெற்றியை தந்தே விடைபெறவல்லது.

ஒரே பதாகையின் கீழ், ஒரே நோக்கோடு ஓர்மை உணர்வோடு ஒன்றிணைவோம், போராடுவோம், வெற்றியை நிச்சயம் பெற்றே தீருவோம்.

வாழ்க வளமுடம்!                            வாழ்க வையகம்!!

No comments:

Post a Comment