PAGEVIEWERS

கடன் வாங்கிப் படித்தல்

“இனி கல்விக் கடனைப் பெறுவதற்கு மாணவர்கள் தலையைக் குனிந்து கொண்டு வங்கிகளுக்குள் நுழையத் தேவை இருக்காது. நிமிர்ந்த தலையோடும் கம்பீரத்தோடும் அவர்கள் வங்கிகளுக்குள் கல்விக் கடனுக்காக நுழையலாம்.

ஒரு காலத்தில் கல்விக் கடன் ஒரு சலுகை போல இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது கல்விக் கடன் என்பது மாணவர்களின் உரிமையாக மாறியிருக்கிறது,”

என்பது மதிரிப் பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் சிதம்பரம் . ஆக கல்வியோ, வேலையோ மாணவ்ர்களது உரிமையாக மாறாது போயினும் கல்விக் கடனேனும் அவர்களது உரிமையாய் போயிருக்கிறது. இந்த மட்டிலும் உரிமை என்று சொல்லிக் கொள்கிற மாதிரி மாணவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தந்தமைக்காக அவரைப் பாராட்டியேத் தீர வேண்டும்தான்.

மேலோட்டமாகப் பார்த்தால்,

“கல்விக் கட்டணம் செலுத்த இயலாத ஏழை மாணவர்களது படிப்பு இடையில் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தானே இவ்வளவையும் செய்கிறார்கள். அதையும் குறை சொன்னால் எப்படி?” என்றுகூடத் தோன்றும்.

“பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வை. பிச்சை எடுத்தேனும் படி என்கிறாள் கிழவி. கொஞ்சம் இதை மாற்றிச் சொன்னால் கற்பதற்காக பிச்சை வேண்டுமானாலும் எடு என்றாகும்.

“உண்ணீர்
உண்ணீர் என்றே
ஊட்டாதார் தம் மனையில்
உண்ணாமை
கோடி பெறும்”

என்று சொன்ன அவ்வை கல்வி என்று வரும் போது அதற்காக பிச்சைகூட எடுக்கலாம் என்றுதானே சொல்லியுள்ளார்.கல்விக்காக பிச்சையே எடு என்று சொன்ன அவ்வையைக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் கடனை ஏற்பாடு செய்து , அதை மாணவனது உரிமையாக்கி உரிமையோடும் கம்பீரத்தோடும் கடனைப் பெற்று கல்வியைத் தொடர் என்று சொல்லும் சிதம்பரத்தை நக்கலடிப்பீர்கள். நீங்களெல்லாம் உருப்படுவீர்களா? என்றும் சிலர் கேட்கக் கூடும்.

மீண்டும் சொல்கிறேன், மேலோட்டமாகப் பார்த்தால் இது நியாயமாகத்தான் படும். கொஞ்சம் உள் நுழைந்து அலசினால் இதன் பின்னனியில் இருக்கும் அயோக்கியத்தனம் அம்பலப் படும்.

இதில் நீண்ட விவாதம் இருக்கிறது. அதில் நமக்கெதுவும் தயக்கம் இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் சட்டென்று ஒன்றை சொல்லிவிட்டுத் தொடரலாம் என்று படுகிறது.

பிச்சை எடுத்து படிப்பதில் எந்தப் பிழையும் இருப்பதாகப் படவில்லை. ஒருக்கால் ஒரு பிள்ளை பிச்சை எடுத்துப் படிக்கிறான் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்.அவன் படித்து முடித்ததும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று பெருமிதத்தோடும் ஒரு வகையான பூரிப்போடும் எதிர்காலத்தை எதிர்கொள்வான்.

அவன் பிச்சை எடுத்து படித்தது அவனுக்கு எந்த விதத்திலும் சோர்வையோ அழுத்தத்தையோ தராது. மாறாக, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த என்னை கல்வி எந்த இடத்திற்கு உயர்த்திக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது பார் என்று   அடுத்தத் தலைமுறையை உற்சாகப் படுத்த உதவுவதாகவும் இருக்கும்.

ஆனால் கடன் பெற்று படித்து வருபவனுக்கு வேலை கிடைக்கும் முன்னமே கடனும் வட்டியுமாக சேர்ந்து ஒரு பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.

பிச்சை எடுத்துப் படித்தவன் படித்து முடித்ததும் இலகுவாகி விடுகிறான். அவனால் சொல்ல முடியும்,

“பிச்சை எடுத்தவன்தான் நான். ஆனாலும் படிப்பு எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. பிச்சை எடுத்தேனும் படி” என்று.

கடன் வாங்கி படித்த்வனால் அப்படி சொல்ல இயலாது. அவனால் இப்படித்தான் சொல்ல இயலும்,

“கடன வாங்கிப் படிக்கிறதுக்கு நான் படிக்காமலே இருந்திருக்கலாம். வீணாப் போயிட்டேன். தயவு செஞ்சு கடன் வாங்கி படிச்சுடாத”

அமெரிக்கவைப் பற்றி இப்படி ஒரு தகவல் உண்டு,

அமெரிக்காவில் நிறைய பேர் கல்வியைத் தவிர்ப்பதற்கு அங்கு கல்வி நிறைய செலவு வைக்கிறதாம். சரி, கடன் வாங்கிப் படிப்பைத் தொடங்கலாம் என்று செய்பவர்கள் வட்டி கட்ட முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகிறார்களாம்.

 நம் நாட்டிலும் வட்டி விகிதம்விவசாயக் கடனை விட, நகைக் கடனைவிட, ஏன் வாகனக் கடனை விட அதிகம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். தனி நபர்க் கடனுக்கு மிக நெருங்கிய வட்டி கல்விக் கடனுக்கு.

அநேகமாக 14 சதம் வட்டி கல்விக் கடனுக்கு.

பொறியியல் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன் ஒரு வங்கியில் 60000 ரூபாய் கடன் வாங்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். முதலாமாண்டு முடியும் போது அதற்கான வட்டி (14 சதம் என்று வைத்துக் கொண்டால்) 8400 ரூபாய். ஆக 60000 கடன் வாங்கி முதலாமாண்டை அவன் முடிக்கும் போது அவனது கடன் தொகை மொத்தம் 68400 ரூபாய் என்றாகும்.

இப்போது இரண்டாமாண்டு அவன் 60000 ரூபாய் கடன் வாங்கினால் அந்த ஆண்டு முடிவில் அசல் 120000 ஆகும். இதற்கு வட்டி 16800 ரூபாய் அகும். முதலாமாண்டு வட்டி 8400 ருபாயை சேர்க்க இரண்டாமாண்டு முடிவில் மொத்த வட்டித்தொகை 25200 ஆகும். ஆக இரண்டாமாண்டு முடிவில் வட்டியும் முதலுமாக அவனது கடன் கணக்கில்1,45,200 சேரும்.

மூன்றாமாண்டு இன்னொமொரு 60,000 ருபாய் அவன் கணக்கில் சேர மூன்றாமாண்டு தொடக்கத்தில் அவன் கட்ட வேண்டிய அசல் 1,80,000 ரூபாய் ஆகும். அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டிற்கான வட்டியைக் கணக்கிட்டால் 25,200 ரூபாய் ஆகிறது. இதை முதல் இரண்டு ஆண்டுகளுக்கான தொகையோடு கூட்ட 50,400 ஆகிறது.

நான்கம் ஆண்டும் அவன் 60,000 ரூபாய் கடன் வாங்க அசல் மட்டும் 2,40,000 ரூபாய் ஆகிறது. அந்த ஆண்டு முடிவில் அந்த ஆண்டுக்கான வட்டி மட்டும் 33,600 வரும். ஆக மொத்த வட்டி 94,000 ரூபாய் ஆகிறது.

அவன் படிப்பை முடிக்கும் வரைதான் தனி வட்டி. அதன் பிறகு கூட்டு வட்டிக்கு போய்விடுமாம். எனில் அவன் நான்காமாண்டு முடிக்கும் போது அவன் வாங்கிய அசல் 2,40,000 ரூபாயோடு அது வரை உள்ள மொத்த வட்டியான 94, 600 ரூபாயும் சேர்ந்து 3,34,600 ரூபாய் அவன் கணக்கில் அசலாகிவிடும்.

இனி ஒவ்வொரு மாதமும் வட்டியும் அசலோடு சேர்ந்துவிடும். எனில்,

படிப்பு முடிந்த முதல் மாதம் அவன் கட்ட வேண்டிய வட்டி ஏறத்தாழ 3,900 ரூபாய். வேலை இல்லாமல் கட்ட முடியாமல் போனால் இந்த 3, 900 ரூபாயும் அசலோடு சேர்ந்து 3,38,500 ரூபாயாகும். அடுத்த மாதம் 3,38,500 ரூபாய்க்கு வட்டி கணக்கிடப் படும்.

எவ்வளவு பெரிய கடன் வலையில் நம் பிள்ளைகளைத் தள்ளுகிறார் பாருங்கள்.

இவ்வளவு ஆபத்தான சிக்கல் இது என்பது கூட்டல் கழித்தல் கணக்கையே தப்பு தப்பாக செய்யும் எனக்கே புரிகிறது என்றால் காங்கிரஸின் மூளை என்று சராசரி காங்கிரஸ் காரர்களாலும், இந்தியாவின் மூளை என்று உச்ச நிலையில் நின்று யோசிக்கக் கூடிய காங்கிரஸ்காரர்களாலும் பெருமையோடு கொண்டாடப் படுகிற சிதம்பரம் அவர்களுக்கு இது புரியாது என்று நம்புவதற்கு நான் என்ன மண்மோகன்சிங்கா?

இவ்வளவு புரிந்தும் ஏன் நெஞ்சை நிமிர்த்தி கடன் வாங்கப் போ என்று தள்ளுகிறார். காரணம் மிகவும் எளிதானது.

மாணவனை வங்கிக்கு தள்ளுவதன் பின்னனியில் இருப்பது மாணவனின் எதிர்காலமல்ல, கல்லூரி தாளாளரின் எதிகால லாபம். கல்லூரி தாளாளர் என்பதை விடவும் கல்லூரி முதலாளி என்பதே பொருத்தமாக இருக்கும். சில கல்லூரிகளில் தாளாளர் ஓனர் என்றே அனைவராலும் விளிக்கப் படுகிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பொறியியல் கல்லூரியில் சற்றேரக் குறைய 3,500 இடங்கள் இருக்கலாம். கொஞ்சம் கூடவோ குறையவோ இது இருக்கலாம். இதில் 2,000 பேர் விடுதியில் தங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். மூன்று நேரமும் 2,000 பேர் சாப்பிடக் கூடிய உணவகம் ஒன்றிற்கு அவர் உரிமையாளர் ஆகிறார். ஒவ்வொரு நேரமும் 2,000 பேர் சாப்பிடக்கூடிய உணவகம் எனில் அது ஏறத்தாழ இரண்டு சரவணபவன் ஹோட்டல்களுக்கு சமம்.

ஒரு நாளைக்கு 6,000 பேர் சாப்பிடக்கூடிய ஹோட்டல் எனில் மளிகைச் சாமான்களை, காய்கறியை, பாலை வேறு கடையிலா வாங்க அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கும். எந்தக் கணக்கிலுமே சேராமல் அவர் ஒரு பெரிய மளிகைக் கடைக்கும், காய்கறி மற்றும் பால் கடைக்கும் அதிபராகிறார்.

ஏறத்தாழ 3,500 மாணவர்களும் அனைத்து நோட்டுகள் மற்றும் புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை வாங்கும் போது ஒரு மிகப் பெரிய ஸ்டேஷனரி கடைக்கு உரிமையாளாராகிறார்.

ஒரு கேண்டீன் உரிமையாளாராகிறார்.

குறைந்தபட்சம் 25 பேருந்துகளுக்கும் உரிமையாளாராகிறார்.

ஒரு கல்லூரியை ஆரம்பித்தால் உப விளைவுகளாக இத்தனை வணிகத் தளங்களுக்கும் முதலாளியாகிறார்.

கேட்கலாம்,

இதற்கும் மாணவர்களது வங்கிக் கடனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

இருக்கிறது.

இவ்வளவு பெரிய முதலாளி லாபமடைய வேண்டுமெனில் 3,500 மாணவர்கள் வேண்டும்.  அவர் மாணவர்களைப் பார்க்கிறார். மாணவர்களிடம் பணமில்லை என்பது புரிகிறது. அரசாங்கத்தைப் பார்க்கிறார்.

“மாணவர்கள் வராவிட்டால் நான் தெருவுக்கு வந்து விடுவேன்”

அரசாங்கம் சொல்கிறது,

“விடுவோமா. தைரியமாகப் போங்கள். கடன் கொடுத்து மாணவர்களை அனுப்பி வைக்கிறோம்.”

முதலாளிகள் சொல்லியிருக்க வேண்டும்,

“விசுவாசம் மாறாமல் இருப்போம்.”

கல்வி பொதுப் படும் வரை இத்தகைய அசிங்கங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கும்.

தாளாளர் முதலாளியாகிவிடுவார். கல்வி சரக்காகிவிடும். மாணவன் வாடிக்கையாளனாகிவிடுவான். அரசோ முதலாளி நட்டப் படாமல் பார்த்துக் கொள்ள்ளும்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment