PAGEVIEWERS


ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதி இல்லை .


போரூர் அருகே ஆசிரியர் பற்றாகுறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளி இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் எண்ணிகை குறைந்து வருகிறது.

போரூர் அருகே உள்ள மவுலிவாக்கம் ஊராட்சி குன்றத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்தது. இங்கு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 1939-ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1969ல் நடுநிலைப் பள்ளியாகவும், 1995ல் உயர்நிலைப் பள்ளியாகவும், 2009ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
மவுலிவாக்கம், முகலிவாக்கம், மதனந்தபுரம், பரணிபுத்தூர், கொளப்பாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். தற்போது எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி இந்த பள்ளியில் இயங்கி வருகிறது. இதனால் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
காலியாக உள்ள பணியிடம்...மேல்நிலை வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவே உள்ளன. இதேப்போல், 6 முதல் 10-ஆம் வகுப்புக்கான ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை.
மேலும் இதே பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஆசிரியரே இல்லை. இதனால், மாணவர்களின் கல்வித்திறன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
துப்புரவுப் பணியாளர் இல்லாததால் மாணவர்கள் காலை பள்ளி திறப்பதற்கு முன் வந்து பள்ளி வளாகத்தில் சேர்ந்துள்ள குப்பைகளை அள்ளி, சுத்தம் செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும் பள்ளியில் சேர்ந்துள்ள குப்பைகளை அள்ள ஊராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருவதால் பள்ளி வளாகத்தில் அதிக அளவில் குப்பைகள் தேங்கியுள்ளது.
சமூக விரோத செயல்கள்... இந்த பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாமல் இரண்டு கட்டடங்கள் உள்ளன. இந்த கட்டடத்தின் ஜன்னல் கதவுகளை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் இந்த கட்டடத்தில் நுழைந்து மது அருந்துதல் மற்றும் சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. சிறுநீர் கழித்தும், பான்பிராக், குட்கா போன்ற புகையிலைகளை துப்பியும் அசுத்தம் செய்யப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும், பள்ளிக்கு இரவு நேர காவலாளியை பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறைந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை... அடிப்படை வசதிகள் இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை, பாதுகாப்பற்றக் கட்டடம் போன்ற பல்வேறு பிரச்னைகளை இந்த பள்ளி சந்தித்து வருகிறது. இதனால் இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் கருதி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, பராமரித்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment