பேரவையில் ஆளுநர் உரையில் தகவல்
வேலை தேடுபவர்-வேலை வழங்குவோரை இணைக்கும் மாநில வேலைவாய்ப்பு இணையதளம்
சென்னை: வேலை தேடுபவர்களையும் வேலை வழங்குபவர்களையும் இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. பேரவையில் நேற்று ஆளுநர் ரோசய்யா உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:
*கடந்த 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013- 14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*கடந்த 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013- 14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*மாநிலத்தில் வடகிழக்குப் பருவமழை அளவு 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ள சூழ்நிலையிலும், 2013-14ம் ஆண்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே கிராமப்புற பொருளாதாரம் அமையும்.
*ஏழைகளுக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 32 ஆயிரம் ஏழை, எளியோர் பொருளாதார மதிப்புமிக்க சொத்துக்களை பெற்றுள்ளனர். 3.72 லட்சம் நிலமற்ற ஏழைப் பெண்கள் பலன் பெற்றுள்ளனர்.
*ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் ரூ.770 கோடி உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்புத் திட்டம் என்ற புதுமையாக வடிவமைக்கப்பட்ட திட்டத்த இந்த அரசு தொடங்கியுள்ளது.
*மின்சாரம், குடிநீர், நகர்ப்புற வசதிகள், சாலைகள் போன்ற பல்வேறு துறைகளில் ரூ.834 கோடி மதிப்பீட்டிலான 12 திட்டங்களுக்கு இதன் மூலம் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் 1,697 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3,529 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் 229 பாலங்கள், சிறு பாலங்களை அமைப்பதற்கும் 2013-14ம் ஆண்டில் ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*வேலை தேடுபவர் களையும், வேலை வாய்ப்பு அளிப்பவர்களையும் இணைக்கும் தளமாக, மாநில வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்று தொடங்கப்படும். வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்களை ஒரே இடத் தில் இது வழங்கும்.
மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாடு இயக்கத்திற்காக, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகளை நம் மாநிலம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
*கடந்த 3 ஆண்டுகளில் 1.80 லட்சம் வீடுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கான ஒதுக்கீடு ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.2.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* இரண்டரை ஆண்டுகளில் அரசு 21,750 குடியிருப்புகளை அமைத்து 7,253 குடும்பங்கள் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
*முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 1 கோடியே 29 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 5,84,554 பேருக்கு 1,255.85 கோடி ரூபாய் அளவுக்கு இத்திட்டம் பயனளித்துள்ளது.
*13ம் நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, செயல் பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்க நிதியில் இருந்து 2013-2014ம் ஆண்டிற்கான ஊக்கத் தொகையாக ரூ.149.51 கோடியையும் அரசு பெற்றுள்ளது.
*பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் இனங்களை சேர்ந்த 10,61,561 மாணவர்களுக்கு ரூ.274.47 கோடி கல்வி தொகை வழங்கப்பட்டுள்ளது.
*மக்கள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை ஆண்டுதோறும் உயர்த்தி, தற்போது 4,000 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மாநில அரசிலிருந்து 3,060.74 கோடியும், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் கடன் உதவியாக ரூ.3,864.83 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் வழித்தடத்திற்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெறவும், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கான புதிய வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் அறிவித்தார்.
பேரவை துளிகள்
*ஆளுநர் 12 மணி 1 நிமிடத்துக்கு உரையை ஆரம்பித்தார். சரியாக 50 நிமிடங்களில் 41 பக்கங்கள் கொண்ட ஆங்கில உரையை முடித்தார். பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை, பேரவை தலைவர் தனபால் வாசித்தார். அவரது உரை 44 நிமிடங்கள் இருந்தது.
*பேரவைக்கு முதல்வர் ஜெயலலிதா, காலை 11.52க்கு வந்தார். அதன் பின்னர் திமுக சட்டப் பேரவைத் தலைவர் மு.க.ஸ்டாலின் 11.53க்கு வந்தார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வந்தனர்.
*தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று பேரவைக்கு வரவில்லை. தேமுதிக கொறடா சந்திரகுமார் மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் அவை ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு வந்தனர். தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்கள் 7 பேரும் அவைக்கு வந்திருந்தனர்.
*ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சரோஜாவுக்கு, பேரவை யில் 2வது டிவிஷனில் 5வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முத்துச்செல்விக்கு, வலப்புற வரிசையில் ஓரத்தில் சரோஜாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பாமக உறுப்பினர் கலையரசன் மட்டும் பேரவைக்கு வந்திருந்தார். காடுவெட்டி குரு, கணேஷ்குமார் ஆகியோர் வரவில்லை.
*காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் பேரவை தொடங்குவதற்கு முன்பே அவைக்குள் வந்தார். எம்எல்ஏ விஜயதரணி ஆளுநரின் ஆங்கில உரை முடிந்தவுடன் பேரவைக்கு வந்தார்.
No comments:
Post a Comment