ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை பின்பற்றாததற்கு கண்டனம்
தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றத் தவறிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், பள்ளிக் கல்விதுறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 60 சதவீதத்தை நிர்ணயித்திருப்பதாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை புகார் அளித்தது.
அதனைத்தொடர்ந்து, தேசிய ஆதிதிராவிடர் வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில், இடஒதுக்கீட்டு முறையை தகுதித் தேர்வில் பின்பற்றாத ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கை நியாயமற்றது, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அது பற்றி தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் கோரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 60 சதவீதம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment