PAGEVIEWERS

பள்ளிக் கல்வித் துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தினக்கூலி மற்றும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்த, 614 பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தினக்கூலி அடிப்படையில், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2006, ஜனவரி முதல் தேதியன்று வெளியிடப்பட்ட உத்தரவில், தினக்கூலி அடிப்படையில்,
10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. அதன்படி, பல்வேறு துறைகளில், 10 ஆண்டுகள் பணிபுரிந்த தினக்கூலி பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

நிராகரிப்பு : அரசின் உத்தரவு, பகுதிநேர பணியாளர்களுக்கும் பொருந்தும் எனவும், அவர்களையும் பணி நிரந்தரம் செய்யலாம் எனவும், பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய கருத்துருவை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை நிராகரித்தது. இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பகுதிநேர துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த குமார், தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், 2008ம் ஆண்டு, ஜூலை 29ம் தேதி, அவரை பணி நிரந்தரம் செய்ய, ஐகோர்ட் உத்தரவிட்டது.

தள்ளுபடி : இதை எதிர்த்து, தமிழக அரசு செய்த மேல்முறையீடு, தள்ளுபடி செய்யப் பட்டது. சுப்ரீம் கோர்ட்டிலும், அரசின் மேல் முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, குமாரை பணி நிரந்தரம் செய்து, அரசு உத்தரவிட்டது. இவரைப் பின்பற்றி, மேலும் மூன்று பேர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பணி நிரந்தரம் பெற்றனர்.அதன்பின், 614 பேர், தனித்தனியாக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசாணை : செயலர் வெளியிட்ட அரசாணை விவரம்: பகுதி நேரப் பணியாளர்கள் 614 பேரும், அவர்கள் பணியில் சேர்ந்து, 10 ஆண்டுகள் நிறைவு பெறும் நாளில் இருந்து, காலியாக உள்ள அடிப்படை பணியிடங்களில், முறையான பணியிடத்தில் நியமனம் செய்யப்படுகின்றனர். இத்தகைய பணியாளர்களுக்கு, பணி ஓய்வு பெற்ற நாள் முதல், பணப் பயன்களும்; ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வு பெற்ற நாள் முதல், ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படும். இதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அடிப்படை சிறப்பு விதிகளை தளர்த்தி, அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment