PAGEVIEWERS

இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்


இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment