PAGEVIEWERS


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுமுறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே இனி தமிழில் தேர்வு எழுத முடியும். மற்றவர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுத வேண்டும். புதிய தேர்வுமுறையால் கிராமப்புற மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஏ.ஏ.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 24 விதமான உயர் பதவிகளின் நேரடி நியமனத்திற்காக சிவில் சர்வீசஸ் தேர்வு என்ற தேசிய அளவிலான போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது.இன்றைய சூழலுக்கு ஏற்ப சிவில் சர்வீசஸ் தேர்வில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக பேராசிரியர் அருண் நிகவேகர் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த பல்வேறு பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட மத்திய பணியாளர் நலத்துறை அவற்றின் படி சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடியாக ஏராளமான மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதன்படி, மெயின் தேர்வில் மொத்தம் 7 தாள்கள் இருக்கும். முதல் தாளான ஆங்கிலம் தாளில் கட்டுரை எழுதுதல், ஒரு கட்டுரை கொடுத்து அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தல், கொடுக்கப்படும் ஒரு விஷயத்தை சுருக்கி வரைதல் ஆகியவை இடம்பெற்று இருக்கும். இதற்கு 300 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 2, 3, 4 ஆகிய மூன்று தாள்களும் பொது அறிவு சம்பந்தப்பட்டவை.2–வது பொது அறிவு தாளில் இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, உலக பூகோளம், சமூகம் ஆகியவற்றில் இருந்தும், 3–வது தாளில் நிர்வாகம், இந்திய அரசியல் அமைப்பு சட்டம், சமூக நீதி, அரசியல், சர்வதேச உறவுகள் ஆகியவற்றில் இருந்தும், 4–வது தாளில், தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண்.

5–வது தாளில் அறநெறி, தேசிய ஒருமைப்பாடு, பொது விழிப்புணர்வுத்திறன் ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்பார்கள். தாள் 6, தாள் 7 இரண்டும் விருப்பப் பாடங்கள் ஆகும். 5, 6, 7 தாள்களுக்கும் தலா 250 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.முன்பு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வினை ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்பட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு மொழியிலும் தேர்வு எழுதலாம். ஆனால், புதிய முறையில் பிராந்திய மொழியில் தேர்வு எழுதுவதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

பிராந்திய மொழி இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே அந்த மொழியில் தேர்வு எழுதலாம். மற்ற பட்டதாரிகள் பிராந்திய மொழியில் தேர்வு எழுத இயலாது. அதாவது, இனிமேல் பி.ஏ. தமிழ் இலக்கிய பட்டதாரிகள் மட்டுமே தமிழ்வழியில் தேர்வு எழுத முடியும். அதுபோல அவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்க முடியும்.பழைய முறையில் எந்த பட்டதாரியும் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுக்கலாம். தமிழ்நாட்டில் இதுவரை பல மாணவ–மாணவிகள் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்து வந்தனர். அதோடு தேர்வில் வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவில் சர்வீசஸ் தேர்வுமுறையில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையத்தினர் கவலை தெரிவித்தனர்.

புதிய முறையில், சிவில் சர்வீசஸ் பணிகளுக்கும், இந்திய வனப்பணிக்கும் (ஐ.எப்.எஸ்.) சேர்த்து பொதுவாக ஒரே முதல்நிலை தேர்வு நடத்தப்படும். இந்த புதிய தேர்வுமுறை நடப்பு ஆண்டில் இருந்தே அமல்படுத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு மே மாதம் 26–ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 4–ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது

No comments:

Post a Comment