டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் பதவிக்காலம், 12ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியான நடராஜ், கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருப்பவர்கள், 62 வயது அல்லது ஆறு ஆண்டுகள், இதில், எது முதலில் வருகிறதோ, அதுவரை பதவியில் இருக்கலாம். அதன்படி, நடராஜ், 62, பதவிக்காலம், வரும் 12ம் தேதியுடன், முடிவுக்கு வருகிறது. கடந்த, 13 மாதங்களில், தேர்வாணைய நிர்வாகத்தில், பல்வேறு சீரமைப்புகளை, நடராஜ் செய்துள்ளார். முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த அலங்கோலங்களால், தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்த நிலையில், தலைவர் பதவியை ஏற்றார் நடராஜ். வெளிப்படையான நிர்வாகத்தை தருவதுடன், பல்வேறு சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படும் என, பதவி ஏற்ற போது, நடராஜ் தெரிவித்தார். அதன்படி, "வீடியோ கேமரா' கண்காணிப்புடன் நேர்முகத் தேர்வு, தேர்வு மையங்களில், வீடியோ கண்காணிப்பு, தேர்வுகளுக்கு, "ஆன்-லைன்' பதிவு முறை, தேர்வர்களுக்கு, நிரந்தர பதிவு எண்கள், தேர்வர்களின் மதிப்பெண்களை, இணையதளத்தில் வெளியிடுதல், தேர்வு பெறுபவர்களுக்கு, கலந்தாய்வு நடத்தி, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், துறைகள் ஒதுக்கீடு என, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தினார். மேலும், 13 மாதங்களில், அதிக அளவில், அரசுப் பணிகளுக்கு, தேர்வுகளும் நடத்தப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுத் துறைகளிடம், காலி பணியிடங்கள் விவரங்களை பெற்று, அவற்றை உடனுக்குடன் நிரப்புவதில், நடராஜ், தீவிர ஆர்வம் காட்டினார். துணை கலெக்டர் அந்தஸ்து உடைய, வேளாண் அலுவலர் பணியில், 454 பேர், சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இவ்வளவு பேரை, இதற்கு முன் பணி நியமனம் செய்தது கிடையாது என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பல ஆண்டுகளாக, பணி நியமனமே நடக்காத, பல்வேறு துறைகளை கண்டறிந்து, அங்குள்ள காலி பணியிடங்களை நிரப்புவதிலும், நடராஜ் வேகம் காட்டினார். இப்படி பல்வேறு செயல்பாடுகள் காரணமாக, சரிந்து கிடந்த தேர்வாணையத்தின் பெயரை, தூக்கி நிறுத்தி உள்ளார். இரண்டாவது முறை, பணி நீட்டிப்பு செய்ய, தற்போது, தேர்வாணைய விதிமுறைகளில் இடம் இல்லை. அப்படி, நீட்டிப்பு செய்ய வேண்டும் எனில், பார்லிமென்ட் வரை செல்ல வேண்டும். இதற்கு வாய்ப்பு இல்லை என்பதால், பதவியில் இருந்து, நடராஜ் விடைபெறுவது உறுதியாகி உள்ளது. எனவே, அடுத்த தலைவர் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment