PAGEVIEWERS


பத்தாம் வகுப்பு விடைத் தாள்கள் ரயில் தண்டவாளத்தில் விழுந்து சேதமடைந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழ் முதல் தாள் மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்க அரசு தேர்வுத் துறை முடிவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு கிடையாது என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடந்த வியாழக்கிழமை தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டம் பி.முட்லூரில் அரசுப் பள்ளி மையத்தில் மாணவர்கள் எழுதிய விடைத் தாள்கள் 3 கட்டுகளாகக் கட்டப்பட்டு விருத்தாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சிக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. திருச்சியில் தேர்வுத் தாள் கட்டுகள் இறக்கும்போது, ஒரு கட்டு காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விருதாச்சலம் ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் விருத்தாச்சலம் ரயில் தண்டவாளத்தில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது விடைத்தாள் கட்டு தண்டவாளத்தில் விழுந்திருப்பதும், சில விடைத் தாள்கள் சிறு, சிறு துண்டுகளாக கிழிந்து சேதமடைந்திருப்பதும் தெரியவந்தது. 

சேதமடைந்த விடைத் தாள்கள் சனிக்கிழமை சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. அதை அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் வசுந்தரா தேவி கூறியது: தண்டவாளத்தில் விழுந்த கட்டில் 357 விடைத் தாள்கள் இருந்துள்ளன. இதில் குறிப்பிட்ட அளவிலான விடைத் தாள்கள் மட்டுமே சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது. இவர்கள் எழுதியுள்ள தமிழ் முதல் தாள் விடைத் தாளை அடிப்படையாகக் கொண்டு, சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். ஒருவேளை தமிழ் முதல் தாளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தால் சேதமடைந்த இரண்டாம் தாளுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் கொடுக்கப்படும். எனவே, மாணவர்களும், பெற்றோரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

No comments:

Post a Comment