மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி தி.மு.க., நாடகம் ஆடுவதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,2009 ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்டப் போர் நடந்தபோது, அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகவோ, மத்திய அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை கருணாநிதி விலக்கிக் கொள்ளவோ இல்லை.இலங்கைத் தமிழர்களை ஈவுஇறக்கமின்றி இலங்கை அரசின் குண்டு மழையினால் கொன்று குவிக்கப்பட்ட சமயத்தில் மத்திய அமைச்சரவைக்கு அளித்திருந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். இதை செய்யவில்லை. இது தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய துரோகம். மத்திய அரசை எதிர்த்து வலிமையாக குரல் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் நழுவவிட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு எல்லாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கருணாநிதி, தன்னுடைய பொறுப்பிலிருந்து நழுவும் வகையில், தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராகவும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், வலுவான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டால் தான் இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க இயலும்.ஆனால், கருணாநிதி, இந்திய பார்லிமென்டில் வலுவான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளார். இலங்கைக்கு எதிராக இந்திய பார்லிமென்டில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது பயனளிக்கக் கூடியது அல்ல. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் தான் தீர்மானங்களுக்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல், இந்திய அரசை காலம் கடக்க வைத்து, இலங்கைத் தமிழர்கள் முதுகில் குத்தும் நடவடிக்கையாகவே தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இது போன்ற எண்ணற்ற நாடகங்களை மக்கள் கண்டு அலுத்துப் போயுள்ளனர். மீண்டும் கொண்டு வரப்பட்ட டெசோ அமைப்பிற்கு மக்களிடமும், மாணவர்களிடமும் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில் தற்போது அரங்கேற்றியுள்ள நாடகத்தின் மூலம் தன் மீது ஏற்பட்டுள்ள பழியை குறைத்துக் கொள்ளலாம் என்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் எண்ணம் நிறைவேறாது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கபட நாடகங்களுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என்பது திண்ணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment