குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்ட விவரங்களை, அதன் தலைவர் நவநீதகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார். குரூப்-2 முக்கிய தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, கட்டுரைப் பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேர்வாணைய முன்னாள் தலைவர், நடராஜ் அறிமுகப்படுத்திய புதிய பாடத்திட்டத்தில், தமிழுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக, கருணாநிதி, ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் குறை கூறினர். இதையடுத்து, "தமிழுக்கு மீண்டும் முக்கியத்துவம் தரப்படும்" என, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நடராஜ் கொண்டு வந்த பாடத் திட்டத்தில், மாற்றம் செய்து, தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திருத்தம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருத்தப்பட்ட புதிய பாடத்திட்ட விவரங்களை, தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணன், நேற்று மாலை அறிவித்தார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தை மாற்றி, புதிய பாடத்திட்டம், கடந்த மார்ச், 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த பாடத்திட்டத்தில், தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என, கருத்து எழுந்தது. சட்டசபையிலும், கேள்வி எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, மார்ச்சில் வெளியிடப்பட்ட பாடத்திட்டங்களை, மீண்டும் ஆய்வு செய்து, தமிழுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, திருத்தங்களை செய்துள்ளோம்.
தமிழையும், தரத்தையும், இரு கண்களாகக் கருதி, அதற்கு தேவையான திருத்தங்களை, பாடத் திட்டத்தில் செய்துள்ளோம். பாடத்திட்டத்தின் தரத்தையும் குறைக்காமல், தாய்மொழி தமிழுக்குரிய முக்கியத்துவத்தையும் குறைக்காமல், இந்த திருத்தங்களைச் செய்துள்ளோம்.
குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-3, குரூப்-3ஏ, குரூப்-4, வி.ஏ.ஓ., ஆகிய ஆறு தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள், திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் அனைத்திலும், தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குரூப்-2 முதன்மை தேர்வில், "டிராப்ட்" என்ற பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
துணை வணிகவரி அதிகாரி, நகராட்சி கமிஷனர் போன்ற முக்கிய பதவிகளுக்கு வருபவர்கள், கருத்துக்களை, கோர்வையுடன், அறிக்கையாக தயாரிக்கும் அறிவை பெறுவது, மிகவும் அவசியம். அந்த நோக்கத்தில், இந்த பகுதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாடத்திட்டத்தை, யாரும் குறை கூற முடியாது.
முதல்வரின் அறிவுரைப்படி, அரசுத் துறைகளில், காலியாக உள்ள இடங்களுக்கு, தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியை, தேர்வாணையம் சரியாக செய்து வருகிறது.
2,000 பணியிடங்களுக்கு, ஐந்து லட்சம் பேர், விண்ணப்பிக்கின்றனர். தேர்வர்கள், சிறந்தவர்களாக இருக்கின்றனர். சிறந்தவர்களில், மிகச் சிறந்தவர்களை தேர்வு செய்யும் பணியை, தேர்வாணையம் செய்கிறது. இவ்வாறு நவநீதகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment