PAGEVIEWERS



அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, 20 ரூபாய் அரிசி திட்டத்தில் வழங்கப்படும் அரிசியின் தரம், திருப்திகரமாக இல்லாததால், தமிழகம் முழுவதும், நுகர்வோர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் வறட்சி மற்றும் வேளாண் நிலங்களின் பயன்பாடு மாற்றம் காரணமாக, நெல் உற்பத்தி குறைந்து, தமிழக சந்தையில், அரிசி விலை, வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது, சந்தையில், ஒரு கிலோ சன்ன ரக அரிசி, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு நிறுவனங்கள், அமுதம் அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், 1 லட்சம் டன் அரிசியை, ஒரு கிலோ, 20 ரூபாய் வீதம் விற்க, தமிழக அரசு ஏற்பாடு செய்தது. கடந்த, 17ம் தேதி முதல், இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்டு ஒரு வாரமே ஆன நிலையில், இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்தும், விற்கப்படும் அரிசியின் தரம் குறித்தும் புகார்கள் எழுந்து உள்ளன.

யாருக்கு பயன்?இந்த அரிசி விற்கப்படும் அங்காடிகளில், பயனாளிகள் குறித்த கட்டுப்பாடு கிடையாது. அதனால், யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்ற, நிலை உள்ளதால், வணிகர்களும், உணவகங்களும் தான் அதிக அளவில் இதை வாங்குவதாக கூறப்படுகிறது.

சேலத்தில், பெயர் வெளியிட விரும்பாத அங்காடி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "அரிசியை பொறுத்தவரை, நாங்கள் எதுவும் சொல்லக் கூடாது; பார்த்தாலே உங்களுக்கு தெரியும். 10 கிலோ வரை கொடுக்க சொல்லி உள்ளனர். நாங்கள் அதற்கும் மேலேயே கொடுத்து வருகிறோம். புழுங்கல் அரிசி தற்போது, "ஸ்டாக்' இல்லை. பச்சரிசி தான் தற்போது விற்கிறோம், எந்தவித கட்டுப்பாடும் இல்லை' என்றார்.இந்த அரிசி, ஐந்து கிலோ பொதிகளில் தான் விற்கப்படுகிறது. இதனால், 1 கிலோ, 2 கிலோ வாங்கும் ஏழை மக்களுக்கு அரிசி கொடுக்க, விற்பனையாளர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.கடலூர் அமுதம் அங்காடியில், 1 கிலோ அரிசியைப் பிரித்துக் கொடுக்க மறுப்பதாக, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜி என்பவர், அதிகாரியிடம் புகார் செய்துள்ளார்.ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, வெளிசந்தையில் எவ்வாறு விற்பனையாகிறதோ, அதே நிலை தான், 20 ரூபாய் அரிசி திட்டத்திலும் உள்ளது. மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு, சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதை தவிர்க்க, ஒவ்வொருவருக்கும் விற்கப்படும் அரிசின் அளவில், கட்டுப்பாடு தேவை.

இது குறித்து, ஊட்டி நகராட்சி கடை வியாபாரிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர், மோகன் கூறுகையில், ""ஒருவருக்கு அதிகளவில் அரிசி வழங்குவதால், அது கள்ள சந்தையில் விற்பனைக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க, குறிப்பிட்ட அளவை, தரமாக வழங்கினால், ஏழை மக்களுக்கு பயன் கிடைக்கும்,'' என்றார்.

ரேஷன் அரிசி தானா?இந்த திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, தரத்தில், சந்தையில் 
கிடைக்கும் அரிசிக்கு நிகராக இருக்கும் என, நுகர்வோர் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த அரிசி, ரேஷன் அரிசியை போலவே தான் உள்ளது என்றும், சமைத்தால் குழைந்து விடுகிறது என்றும் புகார்கள் எழுந்துள்ளன.செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில், தரமற்ற அரிசியை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விற்பனையாளர்களிடம், நுகர்வோர், தகராறு செய்துள்ளனர்.

தரம் குறித்து, நீலகிரி மாவட்டம் நீலாம்பிகை சேவா சங்க செயலர், ராஜரத்தினம் கூறுகையில், ""ரேஷன் அரிசியை போன்று தான், 20 ரூபாய் திட்ட அரிசியும் தரமற்றதாக உள்ளது. ரேஷன் அரிசி, "பாலிஷ்' செய்து கொடுக்கப் படுகிறது. இவ்வாறு கொடுப்பதை விட்டு விட்டு, சந்தையில் விற்பனை செய்யப்படும், தரமான ரகங்கள் போல், 30 ரூபாய்க்கு கூட கொடுக்கலாம்,'' என்றார்.

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், சென்னையில் மட்டும், நல்ல அரிசி விற்கப்படுவதாக தகவல் பரவி உள்ளதால், மக்கள் மேலும் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஆனால், சென்னையிலும், நுகர்வோர் அதிருப்திதான் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து, சென்னை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த லட்சுமி கூறுகையில், ""ரேஷன் அரிசி வாடையும், மோட்டாகவும் உள்ளது. 20 ரூபாய்க்கு இந்த அரிசியை வாங்குவதற்கு பதில், ரேஷன் அரிசியை," பாலிஷ்' போட்டு பயன்படுத்தலாம்,'' என்றார். அதே போல், சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த வசந்தி கூறுகையில், ""அரிசி தரமாக இருக்கும் என, நினைத்து வாங்கினேன். எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. அரிசியை சாப்பிட்டால், நாற்றம் அடிக்கிறது,'' என்றார்.

இத்தகைய புகார்களுக்கு முக்கிய காரணம், திட்டத்தில், சன்ன ரக அரிசி விற்கப்படும் என, நுகர்வோரிடையே நிலவிய எதிர்பார்ப்பு தான். தற்போது விற்கப்படும் அரிசி, மோட்டா ரகங்களை போல் இருப்பதால், ரேஷன் அரிசி தான், 20 ரூபாய் அரிசியாக விற்கப்படுகிறது என்ற தகவல் பரவத் துவங்கி உள்ளது. அதிகாரிகள், ரேஷன் அரிசியிலிருந்தே ஒரு சில நல்ல மூட்டைகளை தேர்ந்து எடுத்து, விற்பனைக்கு வழங்குவதாக கூறப்படுகிறது.

இது குறித்து, நீலகிரி மாவட்டம், தேவாலாவை சேர்ந்த சமூக ஆர்வலர், தியாகராஜா கூறுகையில், ""20 ரூபாய் அரிசி திட்டத்துக்கான, "ஒரிஜினல்' அரிசியை வழங்காமல், ஊட்டி 
Click Here
Advertisement
குடோனிலிருந்த, இலவசமாக வழங்கப்படும் நல்ல அரிசியை தேர்வு செய்து, திட்டத்தின் துவக்க விழாவுக்கு வழங்கி உள்ளனர்,'' என்றார். இதே போல், பல இடங்களில் இருந்து புகார்கள் வரத் துவங்கி உள்ளன.

இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள், அரசின், 20 ரூபாய் அரிசி திட்டத்தால், தங்களின் வருவாய் குறைந்து விடும் என்ற பயத்தால், மக்களிடம் தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆலை அதிபர்களுடன் சேர்ந்து, கடை ஊழியர்களும், 20 ரூபாய்க்கு வழங்கப்படும் தரமான அரிசிக்கு பதிலாக, ரேஷன் அரிசியை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.அதிகாரிகள் இவ்வாறு கூறினாலும், திட்டத்தில் விற்கப்படும் அரிசியில் தரமில்லை என்பது தான் நுகர்வோர் கருத்தாக உள்ளது. இந்த திட்டம், கேரளாவுக்கு அரிசி கடத்தவும், சிறு உணவக உரிமையாளர்களுக்கு பயனாகவும் இருப்பதால், விற்பனையில் தொய்வு இருக்காது. ஆனால், நடுத்தர மக்களை குறி வைத்து தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், நடுத்தர மக்கள், அரிசியை புறக்கணித்து வருகின்றனர்.

ஆலைகளில் "கல்சர்' தேக்கம் : அரசு, 20 ரூபாயக்கு அரிசி விற்பதால், அரிசி ஆலைகளில், "கல்சர்' போன்ற மோட்டா ரக நெல் வகைகளுக்கு வரவேற்பு குறைந்து உள்ளது.சந்தையில், மோட்டா ரக அரிசி, கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. டீலக்ஸ் பொன்னி போன்ற, சன்ன ரகங்கள், கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தன.அரசின், 20 ரூபாய் திட்டத்தில், சன்ன ரக அரிசி விற்கப்படும் என்று, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, மோட்டா ரகங்களே விற்கப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், சன்ன ரக அரிசியின் விற்பனை பாதிக்கப்படவில்லை. ஆனால், கல்சர் உள்ளிட்ட மோட்டோ ரக அரிசிகளை வாங்கி சாப்பிடுவோர், 20 ரூபாய் அரிசிக்கு மாறி வருகின்றனர். மேலும், 20 ரூபாய் அரிசி, கல்சரை விட, சற்று சன்னமாக இருப்பதால், கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.இதனால்,கல்சர் ரகங்களுக்கு, கடைகளில் வரவேற்பு குறைந்துள்ளது. போதிய அளவு விற்பனை இல்லாததால், அரிசி ஆலைகளும் கல்சர் ரக நெல் வாங்குவதை, தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

இது குறித்து, காரைக்குடி பகுதியை சேர்ந்த, அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "ஒரு ஆலையில் இருந்து, நாள் ஒன்றுக்கு, ஒரு லோடு கல்சர் சென்ற நிலையில்; சமீப காலமாக வாரத்துக்கு ஒரு லோடு மட்டுமே செல்லும் நிலை உள்ளது. தற்போது அரசு வழங்கும் ரூ.20 அரிசி, கல்சரை விட, சற்று சன்னமாக உள்ளதால், கல்சர் நுகர்வோரின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது. கல்சர் ரக நெல் வாங்குவதை தற்காலிகமாக குறைத்து வருகிறோம்' என்றார். 
-நமது நிருபர் குழு- 

No comments:

Post a Comment