PAGEVIEWERS


"கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு)

, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத 

முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு,

 இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி 

பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், 


"டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது.

மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "ஓராண்டு படிப்பு மூலம் பெறும், கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு படிப்பு மூலம் பெறும் பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது.
எனவே, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும், இந்த ஓராண்டு பட்டப் படிப்பை, அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. "யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓராண்டு படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது.

No comments:

Post a Comment