PAGEVIEWERS


குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
"பள்ளிகளில், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிவறை வசதி போன்ற கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்த வேண்டும்" என, சுப்ரீம் கோர்ட், ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற, தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்து உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

கட்டமைப்பு வசதிகளை, ஏற்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரித்தை ரத்து செய்ய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை விபரம்:

* பள்ளிகளில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* அனைத்து கழிப்பறைகளும், பயன்பாட்டில் உள்ளதா என்பதை, பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து, பயன்பாட்டில் இருப்பதை, அவ்வப்போது, உறுதி செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதி இருக்கிறதா என்பதை அறிய, கல்வித்துறை அலுவலர்கள், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.

* தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முன், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேணடும்.

* ஒன்றிய அளவில், ஒரு குழுவை அமைத்து, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை ஏற்படுத்த, தனியார் பள்ளிகள் தவறினால், அங்கீகாரத்தை ரத்து செய்
யலாம். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், தேவையான அளவிற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனினும், பள்ளிகளை தரம் உயர்த்தியது மற்றும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது போன்ற காரணங்களால், கூடுதல் வசதி தேவைப்படுகிறது.

அந்த வகையில், மாநிலம் முழுவதும், 2,733 அரசுப் பள்ளிகளில், கூடுதலாக, குடிநீர், கழிப்பறை வசதிகள் தேவைப்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை நிதி மற்றும் தேசிய கிராமப்புற குடிநீர் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், 50 கோடி ரூபாயை, நபார்டு வங்கி, இந்த வசதியை செய்ய, ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 100 சதவீத குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தி விடுவோம். இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment