PAGEVIEWERS

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், முறைகேடு செய்துள்ள, தனியார் மருத்துவமனைகளின் பெயரை, அரசு, பகிரங்கமாக வெளியிடுவதுடன், அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

தி.மு.க., அரசு கொண்டு வந்த, மருத்துவ காப்பீடு திட்டத்தை மேம்படுத்தி, கடந்த ஆண்டு, ஜனவரி முதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாநில அளவில், 700க்கும் மேற்பட்ட தனியார்
மருத்துவமனைகள், 100க்கும் அதிகமான, அரசு மருத்துவமனைகள், இத்திட்டத்தில், சிகிச்சை அளித்து வருகின்றன.காப்பீடு திட்டத்தில் கிடைக்கும் வருவாயின் மூலம், அரசு மருத்துவமனைகளின், உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தால், தனியார் மருத்துவமனைகள் தான் அதிகளவு பயனடைந்து வருகின்றன.இந்நிலையில், சென்னையில், ஐந்து மருத்துவமனைகள் உட்பட, மாநில அளவில், 35 தனியார் மருத்துவமனைகள், அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை, முறைகேடாக பயன்படுத்தியதற்காக, திட்டத்தில் இருந்து, ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை, நீக்கப்பட்டுள்ளன.அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான, மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு செய்துள்ள, தனியார் மருத்துவமனைகளுக்கு, அரசு அளித்துள்ள இந்த தண்டனை போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான, மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது:முறைகேடு செய்துள்ள தனியார் மருத்துவமனைகளின் பெயர்களை, அரசு, பகிரங்கமாக வெளியிட வேண்டும். அம்மருத்துவமனைகளை திட்டத்தில் இருந்து நிரந்தரமாக நீங்குவதுடன், அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டு முறைகேடுகள் நடக்காமல் இருக்க, இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.

அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதன் மூலம், அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பை படிப்படியாக குறைக்கலாம்.இவ்வாறு, ரவீந்திரநாத் கூறினார்.

தமிழ்நாடு சுகாதார திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:மருத்துவ காப்பீடு திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட, தனியார் மருத்துவமனைகளுக்கு, தற்போது, தரப்பட்டுள்ள தண்டனையே போதுமானது. அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுத்தால், மருத்துவ சேவை பாதிக்கப்படும். அவற்றின் பெயரை பகிரங்கமாக வெளியிட முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment