PAGEVIEWERS


பொது பிரிவினருக்கு கூடுதல் இடம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி, தமிழக அரசு, சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டு, அது தொடர்கிறது.

இந்த, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவி காயத்ரி மற்றும் ஒன்பது மாணவர்கள், "69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும், தமிழக அரசின் சட்டம், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா" எனக் கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை, நேற்று விசாரித்த நீதிபதிகள், ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய, உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில், அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட தகுதியுடைய மாணவர்களுக்கு, நடப்புக் கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியில், கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களை மாநில அரசு சேர்க்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.

குறிப்பாக, 99 சதவீத மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவக் கல்லூரிகளில், இடம் கிடைக்காத மாணவர்களுக்காக அரசு இதைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில், தமிழக அரசின், 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லத்தக்கதா என, மனுதாரர்கள் எழுப்பியுள்ள கேள்விக்கு, தமிழக அரசுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment