PAGEVIEWERS


ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து பிரிவினரும் எவ்வித பாகுபாடின்றி அனைத்து வளங்களையும் பெறவேண்டும் என்பதன் அடிப்படையில், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் வண்ணம் கொள்கைகளை வகுத்து, அதற்கான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஏனைய திட்டங்களுடன் மாநில அரசின் 10-ம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நடப்பு கல்வியாண்டு முதலே, அதாவது 2012-13-ம் ஆண்டு முதலே இதனை நடைமுறைப்படுத்தவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு கூடுதலாக ரூ.34 லட்சத்து 83 ஆயிரத்து 750 செலவு ஏற்படும். அரசின் இந்த நடவடிக்கை மூலம், இந்த ஆண்டு மாநில அரசின் கல்வி உதவித்தொகை பெறும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

இதே போன்று, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, வேட்டையாடுதல், பறவைகள் மற்றும் குருவிகளைப் பிடித்தல், தேன் சேகரித்தல் போன்றவற்றின் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டுள்ள நரிக்குறவர் என்கிற குருவிக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரத்திலும், குணாதிசயங்களிலும் பழங்குடியினரைப் போன்றே உள்ளதைக் கருத்தில் கொண்டு, நரிக்குறவர் என்கிற குருவிக்காரர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் நரிக்குறவர் என்கிற குருவிக்காரர் சமுதாயத்தின் சமூக மற்றும் பொருளாதாரம் மேம்பாடு அடைய வழிவகை எற்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment