PAGEVIEWERS


நகராட்சி கமிஷனர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 6,695 காலி இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜுலை மாதம் 30-ந்தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய இந்த தேர்வை 31/2 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த ஜுன் மாதம் 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

எழுத்துத்தேர்வில் 6,949 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு ஜுன் 20-ந் தேதி முதல் ஜுலை 27-ந் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அவர்களின் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகஸ்ட் மாதம் 2-ந் தேதி டி..என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.இதைத்தொடர்ந்து, விண்ணப்பதாரர்களின் ரேங்க் பட்டியல்படி, நேர்காணல் தேர்வில் அடங்கிய பதவிகளுக்காக 3,472 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு அவர்களின் பட்டியல் 9-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பதவி, பணிபுரிய விரும்பும் இடம் ஆகியவற்றை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் 15-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் டி.உதயச்சந்திரன் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குரூப்-2 தேர்வில் நேர்காணல் அடங்கிய பதவிகளுக்கான ஊழியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும். சென்னை பிராட்வே அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கோட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள டி.என்.பி.எஸ்.சி. புதிய அலுவலக கட்டிடத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்.விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான கவுன்சிலிங் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய படிவத்தை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில்  இருந்து டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். கவுன்சிலிங்கிற்கு வராதவர்கள் தங்கள் ரேங்க் வரிசையையும் பதவி ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமையையும் இழப்பார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள மறுவாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது.நேர்காணல் பதவி அடங்கிய பதவிகளுக்கான தெரிவு முடிந்த பின்னரே, நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான (3,220) கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு உதயச்சந்திரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment