PAGEVIEWERS

 ‘‘இனிமேல் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். கட்சியை வழி நடத்துவேன்’’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் லவாசா மலைநகர திட்டத்தில் நடந்துள்ள ஊழலில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவாருக்கும், அவருடைய மகள் சுப்ரியா சுலேவுக்கும் தொடர்பு இருப்பதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒய்.பி.சிங் குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்த திட்டத்தை நிறைவேற்றி வரும் லேக் சிட்டி கார்ப்பரேஷனுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துள்ளது. இந்த நிறுவனத்தில் சுப்ரியாவும், அவருடைய கணவரும் பங்குதாரர்களாக இருந்தனர். சரத் பவாரின் சகோதரர் மகனும் சமீபத்தில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவருமான அஜித் பவார் மாநில வருவாய்த்துறை அமைச்சராக இருந்தபோது லேக் சிட்டி கார்ப்பரேஷனுக்கு 341 ஏக்கர் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், மாத குத்தகை ரூ.23,000 மட்டுமே.
இந்த நிலத்தை லேக் சிட்டி கார்ப்பரேஷனுக்கு இலவசமாக அஜித் பவார் கொடுத்து விட்டதாக ஒய்.பி.சிங் குற்றம்சாட்டி இருந்தார். சுப்ரியாவும் அவருடைய கணவரும் இந்த நிறுவனத்தின் பங்குகளை கடந்த 2006ல் விற்பனை செய்து ரூ.250 கோடி அளவுக்கு லாபம் சம்பாதித்து விட்டதாக சிங் குற்றம்சாட்டினார். அதே நேரம், ஊழலுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர் பவார் என்று அவர் கூறினார். நேற்று புனேயில் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த சரத் பவார், செய்தியாளர்களிடம் பேசுகையில் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். அரசு வகுத்துள்ள கொள்கையின்படிதான் அந்த நிலம் லேக் சிட்டி கார்ப்பரேஷனுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறினார். நாட்டின் அரசியல் சட்ட அமைப்புகளை இழிவுபடுத்தவும் ஒவ்வொருவரையும் ஊழல்வாதியாக சித்தரிக்கவும் சமூக ஆர்வலர்கள் முயற்சிப்பதாக சரத் பவார் குற்றம்சாட்டினார். மேலும், ‘‘இனி வரும் காலங்களில் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment