ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு
சோழிங்கநல்லூரை சேர்ந்த ராஜா ஸ்டான்லி அனிதா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி தமிழக அரசு நடத்தியது. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும், தேர்வு எழுதாதவர்களுக்கும் வரும் 14ம் தேதி மீண்டும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், ஆசிரியர்கள் படித்த பாடங்களுக்கு வெளியில் இருந்து எடுக்கப்படுகின்றன.
இதனால் கடந்த முறை தேர்வு எழுதிய சுமார் 7 லட்சம் பேரில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
இதனால் தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகள் வகுத்த பின்னரே புதிதாக தேர்வு நடத்த வேண்டும். எனவே வரும் 14ம் தேதி நடைபெறவிருக்கும் தகுதி தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு ராஜா ஸ்டான்லி அனிதா மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எலிபி தர்மராவ், அருணா ஜெகதீசன் இன்று விசாரித்தனர்.
மனுதாரர் சார்பாக வக்கீல் அமல்ராஜ் ஆஜராகி, தேர்வுக்கான விதிமுறைகள் வகுக்காமல் தேர்வு நடத்த கூடாது என்றார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு சிறப்பு வக்கீல் சம்பத் ஆகியோர் ஆஜராகி, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்புக்கு கட்டுப்படுவோம் என சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்று, தகுதி தேர்வுக்கு தடை விதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இது அரசின் கொள்கை முடிவு. இதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment