PAGEVIEWERS

அரசு போக்குவரத்து கழகங்களில்


நடத்துனர், மெக்கானிக் நியமனம் அனைத்து அரசு உத்தரவுகள் ரத்து


அரசு போக்குவரத்து கழகங்களில் நடத்துனர், மோட்டார் மெக்கானிக் நியமனம் செய்வது தொடர்பாக அரசு பிறப்பித்த அனைத்து அறிவிப்பு ஆணைகளையும் ரத்து செய்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் 200 நடத்துனர்கள் நியமனம் தொடர்பாக ஆகஸ்ட் 22ல் அறிப்பாணை வெளியிடப்பட்டது.

அதில், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு 40, பி.சி., எம்.பி.சி. பிரிவினருக்கு 35, பொதுப்பிரிவுக்கு 30 என வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போக்குவரத்து கழகத்தில் 2007, 2010, 2011ம் ஆண்டுகளில் நடத்துனர் நியமனத்தின்போது, பி.சி., எம்.பி.சி. பிரிவுக்கு ஐந்து ஆண்டு வயது சலுகை
வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பாணையில் வயது சலுகை வழங்கவில்லை. எனவே, அறிவிப்பாணையை ரத்து செய்து, புதிய அறிவிப்பாணை வெளியிடவும், அதன் அடிப்படையில் நடத்துனர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நெல்லை, மதுரை, காரைக்குடி கோட்டங்களில் நடந்த நடத்துனர் மற்றும் மோட்டார் மெக்கானிக் பணி நியமனத்தை எதிர்த்து சுந்தர்ராஜ், பாலசுப்பிரமணியம், முத்துராஜ், இசக்கிமுத்து, முருகன், சிவசரவணன், பிரபாகர், தனிஸ்லாஸ் உள்பட 75 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அனைத்து மனுக்களையும் நீதிபதி வினோத்குமார் சர்மா விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் பொன்னையா, நெல்லை வி.கண்ணன் ஆஜராகினர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு துறைகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் மட்டும் ஆட்கள் தேர்வு செய்வது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 மற்றும் 16க்கு எதிரானது. அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் போது தகுதியான நபர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நடத்துனர், மோட்டார் மெக்கானிக் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகங்கள் வெளியிட்ட அனைத்து அறிவிப்பாணைகளும் ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர்கள் ஐந்து ஆண்டு வயது சலுகை கேட்டுள்ளனர். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 20 ஆண்டுக்கு மேலாக அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே நடத்துனர் நியமனம் நடந்தபோது ஐந்து ஆண்டு வயது சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மனுதாரர்களுக்கு இந்த நியமனத்திலும் ஐந்து ஆண்டு வயது சலுகை வழங்க வேண்டும். நடத்துனர் நியமனத்திற்கு நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. அதன் பிறகு நடந்த நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தேர்வு செய்வது எப்படி?

நடத்துனர், மோட்டார் மெக்கானிக் தேர்வு எப்படி நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது:
நடத்துனர், மோட்டார் மெக்கானிக் நியமனம் தொடர்பாக பத்திரிகைகள், ரேடியோக்கள், டிவி சேனல்களில் விளம்பரம் செய்ய வேண்டும். நோட்டீஸ் போர்டிலும் வெளியிட வேண்டும். அதில், மொத்த காலியிடங்கள், இடஒதுக்கீடு விவரங்கள் குறிப்பிட வேண்டும். பின்னர், தேர்வுக்குழு அமைத்து தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, தகுதி அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment