PAGEVIEWERS


சாதாரண போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த ஜேப்பியார், இன்று, 10 பொறியியல் கல்லூரிகளுக்கும், ஒரு பல்கலைக்கழகத்திற்கும், ஆறு தொழிற்சாலைகளுக்கும் சொந்தமானவர் என்ற செய்தியை படித்த போது, வியப்படையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. காவல் துறையில் தொடர்ந்து இவர் பணி புரிந்திருந்தால், இந்த அளவுக்கு சொத்து சேர்க்க முடியாது. இவ்வளவு சொத்து சேர்வதற்கு மூல காரணம் அரசியல். அரசியலில் இவர் ஈடுபட்டதால் தான், இவ்வளவு சொத்து.

பொது வாழ்வில் ஈடுபாடு உள்ளோர், அரசியலில் இருப்பது, காமராஜர் காலத்தில் மட்டுமே. இப்போது, எல்லாமே, தலைகீழாக மாறி விட்டது. சொத்து சேர்ப்பதற்காகவும், பாதுகாக்கவும் பலர் அரசியலில் குதிப்பது வாடிக்கையாகி விட்டது. பண நாயகம் நிறைந்த இந்த ஜனநாயகத்தில், சட்டத்தில் பெரிய ஓட்டை களின் வழியே ஊழல் பெருச்சாளிகள் தப்பி விடுகின்றன. சட்டம், கானல் நீராகத் தான் உள்ளது.
"கட்டடப் பணியை விரைவாக முடிக்க ஜேப்பியார் சொன்னதால், விரைவாக கட்டடப் பணி நடந்தது. அது தான் விபத்தில், 10 பேர் பலியானதற்கு காரணம்' என, பொறியாளர் சொல்லியுள்ளார்! கட்டட வேலை, ஆறப் போட்டு தான் நடக்கணும்; அப்போது தான், கட்டடம் பலமாக இருக்கும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா அவருக்கு? எல்லாமே விரைவாக நடக்க, அப்படி என்ன அவசரம்? தற்போது, 10 பேர் பலியாகி விட்டனர். அவர்கள் குடும்பம் என்னவாகும்? ஜேப்பியாருக்கு, "ஓவர்' ஆசை; ஆனால், இப்போது நிராசையாகி விட்டது. உளுத்துப் போன பழைய சட்டங்களை அகற்றி, வெளிநாட்டில் இருப்பது போல, இங்கே அமல்படுத்தினால் தான், தவறு செய்வதற்கு முன், ஒவ்வொருவரும், பத்து முறையாவது யோசிப்பர்.
மொபைல் கொடுத்து காதை மூடு!
எஸ். ராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, "இ-மெயில்' கடிதம்: நாட்டின் கடன் தொகை, 37 லட்சம் கோடி ரூபாய். வரவு, செலவு கணக்கில் இடைவெளி, 1.9 லட்சம் கோடி ரூபாய். அன்னிய வர்த்தக நடப்பு கணக்கில் இடைவெளி, 1.20 லட்சம் கோடி ரூபாய். இது, நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தின் மோசமான நிலைமை யை வெளிப்படுத்துகிறது. அனைத்து காரணிகளும், வரலாறு காணாத வகையில், நமக்கு பாதகமான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் ஏற்படும், இரட்டை இலக்க பணவீக்க புயலும்; அதனால், விளையும் விலைவாசி ஏற்றத் தொடர் சுனாமி களும், நடுத்தர மக்களை அடித்தட்டுக்கு கீழே இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.
வசிக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு இவை தான், மக்களின் அடிப்படை தேவைகள். அந்த தேவைகளில், தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை, போர்க்கால அடிப்படை நடவடிக்கைகள் மூலம் களைவது தான், அரசின் தலையாய கடமை. அதை விடுத்து, 60 லட்சம் அடித்தட்டு மக்களுக்கு, 7,000 கோடி ரூபாய் செலவில், இலவசமாக மொபைல் போன் வழங்கும், மத்திய அரசின் திட்டம், இந்த தருணத்தில் தேவையற்றது. "மதுவைக் கொடுத்து வாயை மூடு; தொலைக்காட்சி பெட்டியைக் கொடுத்து, கண்ணை மூடு; மொபைல் போனைக் கொடுத்து காதை மூடு' என்பது தான், அரசுகளின் குறிக்கோளாகத் தெரிகிறது. இதனால், அரசின், வரவு - செலவு கணக்கின் இடைவெளி, மேலும் அதிக மாகும் பொருளாதார அபாயம் காத்திருக்கிறது.
அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாமல், நாட்டில் ஏராளமான கிராமங்கள் தவிக்கின்றன. இலவசங்களுக்கு பதிலாக, அடித்தட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தான், சமூக அக்கறை உள்ள அரசின் கடமை. வரப்போகும் லோக்சபா பொதுத் தேர்தலை எண்ணி, தொலைநோக்கு ஆயத்தப் பணிகளின் ஆரம்பம் தான் இது என்று மட்டும் நமக்கு புரிகிறது.
சிரிப்பு வருது... சிரிப்பு வருது!அ.அபு சஹைல், மதுரையிலிருந்து எழுதுகிறார்: மதுரை மாவட்டம் துவங்கி, தற்போது, தமிழகம் முழுவதும் உள்ள கிரானைட் குவாரிகள் மீது, அதிரடி சோதனைகள் நடத்தப்படுகின்றன. கிரானைட் குவாரிகள், அரசை ஏமாற்றி வருவது என்னமோ, மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம் கண்டுபிடித்துச் சொன்ன பிறகு தான், அரசுக்கே தெரியும் என்பது போல, "பம்மாத்து' காட்டுவது தான் வேடிக்கையாக உள்ளது.
சரி, உண்மையிலேயே, அரசுக்கு இந்த விவகாரம் தெரியாது என்றே, ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். "அரசுக்கு கிரானைட் குவாரிகள் மூலமாக வரவேண்டிய தொகை, 16 ஆயிரம் கோடி ரூபாய் வராமல், குவாரி அதிபர்களின் முறைகேடு மூலமாக தடுக்கப்படுகிறது' என்று, ஒரு கலெக்டர் (சகாயம்), அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கிறார். நேர்மையான, நாணயமான, நம்பிக்கையுள்ள அரசாக இருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, தவறு செய்தவர்களை, செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் படி கட்டளையிட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? அறிக்கை கொடுத்த கலெக்டர், அதிரடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்.
சென்னை மாநகரில் உள்ள, ஒரு உப்பு சப்பில்லாத துறைக்கு, வழியனுப்பி வைக்கப்படுகிறார். இந்நிலையில், இப்போது அரசு எடுத்துவரும் நடவடிக்கை மீது, மக்களுக்கு நம்பிக்கை வருமா? கிரானைட் குவாரிகள், கலெக்டருக்கு கட்டும், "கப்பம்' மாதம், 15 லட்சமாம்; டி.ஆர்.ஓ.,வுக்கு, 10 லட்சம்; கிராம நிர்வாக அலுவலருக்கு, 10 ஆயிரம். கிரானைட் குவாரிகள் மூலம், காவல்துறைக்கு வழங்கப்படும், "கப்பம்' எவ்வளவு என்று, இன்னும் வெளிச்சந்தைக்கு வரவில்லை. அரசியல் கட்சிகள் எதுவும், குவாரிகளிடமிருந்து நன்கொடையோ, அன்பளிப்போ பெற்றதில்லை என்றால், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், தூங்கி வழிந்து கொண்டிருந்தன என்று தானே பொருள்.
இப்போது, கிரானைட் குவாரிகளையும், அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று, ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. டாஸ்மாக்கை அரசு தான் நடத்துகிறது. கூடுதல் விலையில் சரக்கும், போலிச் சரக்கும் விற்பனையாவதும் அங்கு தான். மணல் குவாரிகளையும் அரசு தான் ஏற்று நடத்துகிறது. ஆனால், தமிழகத்தின் மொத்த மணல் விற்பனையும், ஒரே ஒரு நபரின் ஆதிக்கத்தில் தான் உள்ளது. கிரானைட் குவாரிகளைக் கைப்பற்றி, அரசே ஏற்று நடத்தினால் மட்டும், முறைகேடுகள் களையப்பட்டு விடுமா? கிரானைட் குவாரிகள் மீது, அரசு எடுத்து வரும் நடவடிக்கை, மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; சிரிப்பைத் தான் வரவழைக்கிறது.

No comments:

Post a Comment