PAGEVIEWERS

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே, சமணர் படுகைகள், கல்வெட்டுக்கள் நிறைந்த மலைகளையும், குவாரி உரிமையாளர்கள் விட்டு வைக்காதது, அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில், பாமியான் புத்தரை சிதைத்த தலிபான் செயல் போல, இங்கே கொடுமை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மேலூர் அருகே, கீழவளவு பகுதியில் உள்ள, மூன்று மலைகளும், அரிட்டாபட்டியில் உள்ள ஏழு மலைகளும் மற்றும் திருவாதவூர்
மலைகளில் உள்ள, சமணர் படுகைகள், தமிழ் பிராமி எழுத்துக்கள், குடவறை கோவில்கள், புத்தர், மகாவீரர் மற்றும் ஜெயின் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் பல இடங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இச்சின்னங்கள் நிறைந்த பகுதிகளில், கிரானைட் கற்கள் கிடைத்ததால், படிப்படியாக அவற்றை அழித்து, குவாரி உரிமையாளர்கள், கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதில், கீழையூர் ரங்கசாமிபுரத்தில், டாமின் கட்டுப்பாட்டில் உள்ள, சமணர் படுகை மலை மற்றும் புறாக்கூட்டு மலை முற்றிலும் சிதைந்தன. சர்க்கரை பீர் மலை எனப்படும், பொக்கிஷ மலையை, "கேக்' வெட்டுவது போல் துண்டு துண்டாக வெட்டிய போது, ஊர் மக்கள் எதிர்ப்பாலும், கோர்ட் உத்தரவாலும், பணி, பாதியில் நிறுத்தப்பட்டது. கடந்தாண்டு, 7 மலைகளை கொண்ட அரிட்டாபட்டி மலையின் பின்புறம், மக்களுக்கு தெரியாமல், கற்களை வெட்டும் பணி துவங்கியது. தொடர் வெடிச் சத்தம் கேட்டு, மக்கள் அங்கு சென்ற போது, மலையின் சில பகுதிகள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. மக்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.

குவாரி நடத்துவதை எதிர்த்து, ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர், சி.ஆர்.ரவீந்திரகுமார் இதுகுறித்து கூறியதாவது: அரிட்டாபட்டியில், ஏழு மலைகள் உள்ளன. இவற்றில், சமணர் படுகைகள், பஞ்ச பாண்டவர் வசித்த இடம், குடவறை கோவில், புத்தர் சிலைகள், பிராமி கல்வெட்டுக்கள் என, புராதன சின்னங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், இம்மலையை தெய்வமாக வணங்கி, இதன் ஊற்று நீரை, புனித நீராக எண்ணி வருகின்றனர். மலைகளில் விழுந்து வரும் மழை நீர், மேல் தருமம் கண்மாயில் சேமிக்கப்பட்டு, விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 1966 முதல், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்விடத்தை, டாமின் நிர்வாகம், செப்., 19, 2008ல், தனியாருக்கு, "லீசு'க்கு கொடுத்தது. 400 ஏக்கரில், இம்மலையை, குவாரி உரிமையாளர்கள் வெட்டி இருப்பர். ஆனால், "மலையில் குவாரி கூடாது' என, ஜூன், 2011ல், ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. கற்களை வெட்ட, ஜூன், 28, 2011ல், கோர்ட் தடை விதித்தது. குவாரி உரிமையாளர்கள் தடையை உடைத்து விடக் கூடாது என, ஜூலை 15, 2011ல், உச்ச நீதிமன்றத்திலும், மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் தடையால், இந்த மலைகள் தப்பின, என்றார். அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், குவாரி உரிமையாளர்களால் கற்களை வெட்டி எடுத்துச் செல்ல முடியாது. 1995 முதல், 2012 வரை கனிம வளத்துறை, வருவாய் துறைகளில் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டால் உண்மை தெரியும் என்ற கருத்து பரவலாக எழுந்து இருக்கிறது.

No comments:

Post a Comment