"இலவசக் கல்விச் சட்டம் 2009'
என்று அழைக்கப்படும், குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், மத்திய அரசின் மிகப்பெரிய
சாதனைகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. 6 வயது முதல், 14 வயதுடைய
குழந்தைகளுக்கான கல்வியை, அடிப்படை உரிமையாக்கும் இச்சட்டம், 14 வயது வரை,
மாணவர்கள் யாரையும், "தேர்ச்சி அடையவில்லை' என்று அறிவிக்கவும் தடை
விதித்துள்ளது.இது தவிர, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், அந்த ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டணத்தை மாநில, மத்திய அரசுகள் இணைந்து அளிக்கும் என்றும், இச்சட்டம் கூறுகிறது.இந்த இலவசக் கல்விச் சட்டத்தை எதிர்த்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, கூட்டுறவுப் பள்ளி ஒன்று தொடுத்த வழக்கில், 2012ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், "ஏழைகளுக்கு, 25 சதவீதத்தை ஒதுக்கும் இச்சட்டம், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்குப் பொருந்தாது; 2012 - 2013 கல்வியாண்டு முதல், இதை அமல்படுத்த வேண்டும்' என தெரிவித்தது. "ஏற்கனவே மாணவர் சேர்க்கை முடிந்து விட்ட பள்ளிகளில், அந்த சேர்க்கையை மாற்றத் தேவையில்லை' என்றும், அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரிய சாதனையாக கருதப்படும் இச்சட்டம், உண்மையிலேயே ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு பயன்படும் வகையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு விடையளிக்கிறது."இலவசக் கல்விச் சட்டத்தின் படி, தங்கள் குழந்தைகளை, பிரபல கல்வி நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, நான்கு பேர் தொடர்ந்திருந்த வழக்கில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து, உத்தர விட்டார் நீதிபதி சந்துரு.இலவசக் கல்விச் சட்டம், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, இலவசமாக அடிப்படைக் கல்வியை வழங்க, உத்தர வாதம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.
இச்சட்டத்தின் பிரிவுகளை ஆராய்ந்த நீதிபதி சந்துரு, "தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என்று வழிவகை செய்யும் இச்சட்டம், தங்களுக்கு விருப்பமான, ஒரு சிறந்த தனியார் பள்ளியில், தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோருக்கு ஏதாவது உரிமை உள்ளதா என்பதை தெளிவு படுத்தவில்லை. அருகாமையில் உள்ள பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று, இச்சட்டம் கூறுகிறது. எவ்வளவு தூரத்தை அருகாமை என்று எடுத்துக் கொள்ள வேண்டும், அருகாமையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தால், எப்படி முடிவெடுப்பது; தவறு நேர்ந்தால், எந்த அதிகாரியிடம் புகார் கொடுப்பது; தனியார் பள்ளிகள், 25 சதவீத ஏழை மாணவர்களை சேர்க்கின்றனரா இல்லையா என்பதை கண்காணிக்க, எந்த வழி முறையையும் இச்சட்டம் செய்யவில்லை' என, தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இச்சட்டத்தில் மேலும் பல்வேறு குறைகள் உள்ளன.
இச்சட்டத்தின் படி, எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு என, ஒன்றில் மட்டுமே, 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி ஏழை மாணவனைச் சேர்க்க இயலும். அதற்கு அடுத்த வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க இயலாது.யாராக இருந்தாலும், அவருக்கு வேலை ஒரே இடத்தில் நிரந்தரமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. வேலை பார்க்கும் இடத்தைப் பொறுத்து, இட மாறுதல் என்பது இயல்பான விஷயம்.இப்படி இருக்கையில், ஒரு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், முதல் வகுப்பில் தன் மகனைச் சேர்த்த பெற்றோர், அடுத்த ஆண்டு இட மாறுதல் ஏற்பட்டால், இந்தச் சலுகையைப் பெற இயலாது. இதற்கு எந்த வழி வகையையும் இச்சட்டம் கூறவில்லை.
இவ்வாறு ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதத்தை ஒதுக்கி, அந்த மாணவர்களுக்கான கட்டணத்தை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலுத்தும் என்று குறிப்பிடும் இச்சட்டத்தில், அவர்களுக்கான சீருடை, காலணி போன்ற செலவுகளை சமாளிப்பது குறித்த வழிமுறை எதுவும் இல்லை.சென்னையில் உள்ள எந்த தனியார் பள்ளிகளை எடுத்துக் கொண்டாலும், ஒரே நிறத்தில், இரண்டு சீருடை, விளையாட்டுக்காக வெள்ளைச் சீருடை, கறுப்புக் காலணி மற்றும் வெள்ளைக் காலணி ஆகியவற்றை கட்டாயமாக்கியுள்ளன. துணியின் தரமும் இப்படித்தான் இருக்க வேண்டும் எனவும், நிர்பந்தப்படுத்தப்படுகிறது.
ஏழை மாணவர்கள் என்பதற்காக, அரசு நிர்ணயித்துள்ள வரையறை மாத வருமானம், 11 ஆயிரத்துக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். மாதம், 11 ஆயிரம் வருமானம் உள்ள ஒரு பெற்றோர், எப்படி இந்தச் சீருடை களையும், காலணிகளையும் வாங்கி தர முடியும்?இச்சட்டம் உத்தரவாதப்படுத்தும் தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீடு என்பதே, கேலிக் கூத்தாக இருக்கிறது. பிரபலமான, பெரும்பாலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், பணக்காரர் அல்லது பெரும் பணக்காரர்களாகவே இருப்பர். அவர்களின் பிள்ளைகளும், அந்த தன்மையுடன் பள்ளிகளுக்கு வருவர்; சொகுசுக் கார்களில் வந்து இறங்குவர். அந்தக் குழந்தைகளுடன், மாத வருமானம், 11 ஆயிரத்திற்கும் குறைவாகப் பெறும் பெற்றோரின் குழந்தை ஒன்றாகப் படித்தால், அந்த குழந்தைக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைப் பற்றி, இச்சட்டம் கவலைப்பட வில்லை.
இச்சட்டம் பெரும்பாலும், நகர்புற மாணவர்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகள், லாப நோக்கத்தை மனதில் கொண்டு, நகர்புறங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன.கிராமப்புற மக்கள், அரசுப் பள்ளிகளை மட்டுமே நம்பி உள்ளனர். நகர்புறத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு செய்து, அத்தொகையை அரசு செலுத்துவதற்கு பதிலாக, கிராமப்புறங்களில் மேலும் பல பள்ளிகளை உருவாக்கி, அப்பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமித்து, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்தால், கோடிக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவர்.
நகர்புறங்களில் உள்ள பெற்றோர், வயிற்றை வாயைக் கட்டி, தங்கள் பிள்ளைகளை எப்படியாவது தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று முயற்சிப்பதற்கான காரணமே, அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை, இட வசதியின்மை, தரமற்ற கல்வி ஆகியவையே.ஏற்றத்தாழ்வு உள்ள இடமாக, தனியார் பள்ளிகளை மாற்றுவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு போதுமான நிதியை ஒதுக்கலாமே.மேலும், தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், சி.பி.எஸ்.இ., தவிர்த்து, மற்ற பள்ளிகள் அனைத்திலுமே ஒரே பாடத்திட்டம் என்ற நிலையில், கல்வியின் தரம் குறித்து பெற்றோர் கவலைப்படப் போவதில்லை. எனவே, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்தால், இச்சட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும்.ஒட்டு மொத்தமாக ஆராய்ந்துப் பார்க்கும் போது, இச்சட்டம் அடிப்படைக் கல்வியை வழங்கும் அரசின் கடமையை, தனியாரிடம் தள்ளி விட்டு, தப்பித்துக் கொள்ளும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது. இச்சட்டத்தால், ஏற்கனவே குழம்பிய நிலையில் இருந்த கல்வித் துறையில், மேலும் குழப்பம் ஏற்பட வழிவகை செய்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற நூறு நாட்களுக்குள், இச்சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசரமாக இச்சட்டம் உருவாக்கப்பட்டது என, கல்வியாளர்கள் விமர் சித்தனர். பார்லிமென்டில் பெரும்பாலான உறுப்பினர்கள் இல்லாத நாளில், இச்சட்டம் நிறைவேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த விமர்சனங்களை மனதில் வைத்து, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாநில அரசுகளோடு கலந்தாலோசித்து, கல்வியாளர்களிடம் கலந்து, இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், ஊட்டச்சத்து, அடிப்படைக் கல்வி, ஆரோக்கியமான வாழ்வு ஆகியவற்றை உத்தரவாதப்படுத்த, நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். நம் குழந்தைகள், நாளைய இந்தியா இல்லையா?
ந.ராஜா செந்தூர் பாண்டியன் வழக்கறிஞர்
No comments:
Post a Comment