உதவி தொடக்க கல்வி அலுவலர் வீட்டில் ரெய்டு
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீடு, அவரது மாமனார் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிகாலை, அதிரடி சோதனை நடத்தினர். கல்வித்துறை நிதியை மோசடி செய்தும், கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்தும், சேர்க்கப்பட்ட, 46 சொத்துகளுக்கான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
ஓசூர், உழவர் சந்தை, நியூ டெம்பிள் லேண்ட் ஹட்கோ பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். வேலூர் மாவட்டம், கனியம்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கல்வித்துறை நிதிகளை மோசடி செய்து, கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாகவும், ஆசிரியர்களுக்கு இட மாறுதல், பணி நியமனம் பெற்று தருவதாக, பணம் பெற்றதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில், ஒரு குழுவினர், ஓசூரில் உள்ள வெங்கடேசன் வீட்டிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், மற்றொரு குழுவினர், சூளகிரியில் உள்ள, அவரது மாமனார் ஆஞ்சப்பா வீட்டிலும், நேற்று அதிகாலை, ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். ஓசூர் வீட்டில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 41 சொத்துகளின் ஆவணங்களையும், சூளகிரியில், ஆஞ்சப்பா வீட்டில் இருந்த, வங்கி ஆவணங்களையும் கைப்பற்றினர்.
டி.எஸ்.பி., ராமச்சந்திரன் கூறுகையில், தனியார் சந்தை விலை அடிப்படையில், கைப்பற்றப்பட்ட சொத்துகளை மதிப்பிடும்போது, வெங்கடேசன் வருமானத்துக்கு அதிகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளை சேர்த்துள்ளதை உறுதி செய்துள்ளோம். அவர் மீது, துறைவாரியாக மேல்நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்வோம் என்றார்.
No comments:
Post a Comment